Published:Updated:

சித்ரா பெளர்ணமி: அழகர் ஆற்றில் இறங்கினால், வரதர் கிணற்றில் இறங்குவார் ஏன் தெரியுமா?

நடவாவி கிணற்றில் ஶ்ரீவரதர் தரிசனம்

சிலிர்க்கவைக்கும் நடவாவி உற்சவம் பற்றிய விரிவான கட்டுரை.

Published:Updated:

சித்ரா பெளர்ணமி: அழகர் ஆற்றில் இறங்கினால், வரதர் கிணற்றில் இறங்குவார் ஏன் தெரியுமா?

சிலிர்க்கவைக்கும் நடவாவி உற்சவம் பற்றிய விரிவான கட்டுரை.

நடவாவி கிணற்றில் ஶ்ரீவரதர் தரிசனம்
நாளை சித்ரா பெளர்ணமி. மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இதே நாளில் காஞ்சியில் ஶ்ரீவரதர், நடவாவி கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார். இந்த வைபவம் மட்டுமல்ல, சித்ரா பெளர்ணமியில் சிறப்பு பெறும் வேறு சில சிலிர்ப்பூட்டும் வைபவங்களும், உண்டு!
சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமி

சித்ரா பெளர்ணமி சிறப்பு நிகழ்வுகள்

குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்பது நம்பிக்கை.

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம், மதுரை பொற்றாமரைக் குளக்கரையில் ஶ்ரீ சொக்கநாதர் தரிசனத்தால் தீர்ந்தது என்கின்றன புராணங்கள். இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் வந்து வழிபடுவதாக ஐதீகம்.

விழுப்புரம் அருகில் கூவாகத்தில் நடைபெறும் ‘கூத்தாண்டவர் திருவிழா’ சித்ராபெளர்ணமி அன்றே நடைபெறுகிறது.

சித்தர் பெளர்ணமி... சித்ரகுப்தர் வழிபாடு!

சித்ரா பௌர்ணமியன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒருவகை உப்பு வெளிக் கிளம்பும். பூமிநாதம் என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்து களுக்கு அதிகமான சக்தியை அளிக்கக் கூடியது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப்படும் என்பது சித்தர்கள் வாக்கு. இதையொட்டி சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ என்று அழைக்கப்பட்டதாம்!

சித்ரகுப்தர் வழிபாட்டுக்கும் உகந்த நாள் சித்ராபெளர்ணமி. இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால், அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. முற்காலத்தில் சித்ராபெளர்ணமி அன்று பூஜை அறையில், ஓர் ஓலைச் சுவடியில் ‘சித்ரகுப்தன் படி அளக்க...’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து மாலையில் பூஜை செய்வதும் விசேஷம். இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்ரா பெளர்ணமி: அழகர் ஆற்றில் இறங்கினால், வரதர் கிணற்றில் இறங்குவார் 
ஏன் தெரியுமா?

சிலிர்ப்பூட்டும் நடவாவி உற்சவம்!

காஞ்சிபுரம் - கலவை சாலையில் உள்ள ஐயங்கார் குளம் எனும் ஊரில் உள்ள சஞ்சீவிராயர் கோயில் அருகே நடவாவிக்கிணறு உள்ளது. இதனுள்ளே மண்டபம் ஒன்று உண்டு. சித்ரா பௌர்ணமியன்று மட்டும் இக்கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள். அன்று மாலை, அடியில் உள்ள மண்டபத்தில் காஞ்சி ஶ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருள்வார்.

வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் ஶ்ரீவரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். சித்ரா பெளர்ணமி தினத்தில் பிரம்மதேவன் வரதரை வழிபடுவதாக ஐதீகம். இங்கே ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று நடவாவி உற்சவமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.

சித்ரா பௌர்ணமி - நடவாவி உற்சவம்
சித்ரா பௌர்ணமி - நடவாவி உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலி மேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார்.

வழிநெடுக சாலைகளை அலங்கரித்து, தண்ணீர் தெளித்து தோரணங்களால் அழகுப்படுத்தி வைத்திருப்பார்கள் மக்கள். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார் சாதம் என வழியெங்கும் அன்னதானமும் நடைபெறும். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே பானகம், மோர், தண்ணீரும் வழங்கப்படுகிறது.

வியப்பூட்டும் நடவாவி கிணறு!

`வாவி’ என்றால் கிணறு என்று பொருள். `நட’ என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு எனத் திகழ்கிறது நடவாவி. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் `நடவாவி கிணறு' என்று அழைக்கப்படுகிறது.

சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத் தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகிறார்கள்.

சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமி

48 மண்டலங்களைக் குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. 27வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படியும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும். 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவிக்குள் இறங்கும் வரதராஜர், உள்ளே உள்ள கிணற்றை மூன்று முறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. கற்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கிறார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு, பாலாற்றில் வைத்து பூஜை நிகழும். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, பந்தல் அமைக்கப்படும். அங்கே அபிஷேகம் நடைபெறும். இதற்கு `ஊறல் உற்சவம்’ என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைவார் வரதர். இந்த வைபவத்தைத் தரிசித்தால் வாழ்வில் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.