திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

பவனி வரும் பட்டத்துக் காளை... கம்பளியின் மகிமை! - கம்பம் நந்தகோபாலன் தரிசனம்!

நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயில்

ர.பரத வர்ஷிணி

நம் மரபில் வழிபாடு என்பது வாழ்க்கை சார்ந்தது. அதில் கால்நடைகளிலிருந்து காவல் தெய்வங்கள் வரை அனைத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. பண்டைய இனக்குழு வாழ்க்கையில் கால்நடைகளே செல்வங்கள். போரின்போது தங்களின் செல்வங்கள் அனைத்தையும் இழந்தாலும் தம் கால்நடைச் செல்வங்களை மட்டும் இழந்துவிடக்கூடாது என்னும் பெரும் கவலையோடு வேறொரு நிலத்தில் குடியேறிய இனங்கள் அநேகம். அப்படி குடியேறியவர்கள் உருவாக்கிய ஆலயம் பற்றியே இங்கு காணவிருக்கிறோம்.

பவனி வரும் பட்டத்துக் காளை... கம்பளியின் மகிமை! - கம்பம் நந்தகோபாலன் தரிசனம்!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ளது நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயில். சுற்றியிருக்கும் கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு மாடுகளுக்கு ஏதேனும் நோய் தாக்கினால் இந்த நந்தகோபால சுவாமியைத்தான் வேண்டிக்கொள்கிறார்கள். உயிர் ஆபத்து உள்ள மாடுகள் கூட இந்த ஆலயத்து இறைவனை வேண்டிக்கொண்டால் பிழைத்துவிடும் என்பது நம்பிக்கை.

அப்படிப் பிழைக்கும் மாடுகள் வாழும் தொழுவத்தில் பிறக்கும் கன்றை இந்தக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கமும் இவர்களிடையே உள்ளது. அதே போன்று தை முதல் நாள் பிறக்கும் கன்றுகளும் இந்த ஆலயத்துக்கு நன்கொடையாக வழக்கப்படும். இதனால் இந்தக் கோயிலின் மாட்டுத்தொழுவத்தில் நிறைய மாடுகள் உள்ளன. இத்தனை மாடுகளுக்கும் ஒரு தலைவன் எனக் கம்பீரமாக ஒரு பட்டத்துக்காளை விளங்கும்.

அது என்ன பட்டத்துக்காளை? தேவராவலு... இந்த இனத்துக்காளைதான் பட்டத்துக்காளையாக முடியும். தேவர் + ஆவலு என்பதே தேவராவலு ஆனது என்கிறார்கள். தேவர்களின் பசு என்னும் பொருளிலேயே இந்த இடத்தை அழைக்கிறார்கள்.

பட்டத்துக்காளையைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு போட்டி முறையை வகுத்திருக்கிறார்கள் இவர்களின் முன்னோர்கள். ஒரு நேரத்தில் ஒரு காளையே பட்டத்துக் காளையாக இருக்க முடியும். அந்தப் பட்டத்துக்காளை இறந்துவிட்டால் மட்டுமே மற்றொரு காளையைப் பட்டத்துக்காளையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்விக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். சுடப்படாத பச்சை மண் செங்கற்களால் மேடை அமைத்து அந்த மேடையின் மேல் தோகையுடன் கரும்புகள் வைக்கப்படும். பால் காவடி எடுத்து வரப்படும். காவடியை, கரும்பு தோகை இருக்கும் மேடையில் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதன் பிறகு பாரம்பர்ய உருமி இசைக்கப்படும். உருமி இசை ஒலிக்க, தேவராலு இனத்தை சேர்ந்த காளைகள் அனைத்தும் அவிழ்த்து விடப்படும்.

எந்த காளை முதலில் வந்து கரும்புத் தோகையை சாப்பிடுகிறதோ அதுவே பட்டத்துக் காளையாக தேர்வு செய்யப்படும். இந்தத் தேர்வு முறை எப்படி உருவானது என்பது குறித்து அங்கிருந்த பெரியவர்களிடம் பேசினோம்.

பவனி வரும் பட்டத்துக் காளை... கம்பளியின் மகிமை! - கம்பம் நந்தகோபாலன் தரிசனம்!
பவனி வரும் பட்டத்துக் காளை... கம்பளியின் மகிமை! - கம்பம் நந்தகோபாலன் தரிசனம்!

"எங்களோட மூதாதையர்கள் 17- ஆம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையில் விவசாயம் செய்தவர்கள். அங்கு நடந்த படையெடுப்பு காரணமாக, கம்பம் பகுதிக்கு வந்து, இங்கு ஆட்சியில் இருந்த மன்னனிடம் சென்று, தங்களுக்கு விவசாயம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் இடம் கேட்டிருக்கிறார்கள்.

அப்போது அந்த மன்னன்,அவர்கள் மாடுகளால் ஊரில் தவறுகள் நடக்குமோ என்று எண்ணி, மாடுகளின் தன்மையை அறிய ஒரு சோதனையும் நடத்தியிருக்கிறார்.

அதாவது, தோகையுடன் கரும்பை நட்டு வைத்து, அதன் முன்பு தானியங்களை குவித்துவைத்து, தானியங்கள் சிதறாமல் கரும்பை மாடுகள் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த அற்புதம் அப்போது நிகழ்ந்தது. ஒரு காளை தனது கால்களை மற்றொரு காளையின் மேல் வைத்து ஏறி நின்று உயரமான கரும்பின் தோகையைத் தின்றதாம். சுற்றிக் குவிக்கப்பட்டிருந்த தானியங்கள் எதுவும் சிதறவில்லை. இதை பார்த்த மன்னன் வியந்து, நீங்கள் இங்கேயே விவசாயம் செய்து கால்நடைகளை வளர்க்கலாம் என்று சொல்லி நிலங்களை வழங்கினார்.

பவனி வரும் பட்டத்துக் காளை... கம்பளியின் மகிமை! - கம்பம் நந்தகோபாலன் தரிசனம்!

மன்னரை வியக்கவைத்த அந்தக் காளையைத்தான் முதல் பட்டத்துக்காளையாக மக்கள் போற்றியிருக்கிறார்கள். இன்றும் பட்டத்துகாளை இறந்து விட்டால் கம்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதை மக்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். காளை இறந்த நாளில் இருந்து கோயில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். புதிய பட்டத்துக் காளை தேர்வு செய்த பிறகே கோயில் நடை திறந்து வழிபாடுகள் நடக்கும். பட்டத்துக் காளை இறந்த மூன்று நாள்களுக்கு ஊரில் துக்கம் கடைபிடிக்கப்படும்.

இத்தனை பெருமைமிக்க பட்டத்துக்காளையைப் பராமரிக்க ஊர் சார்பாக நான்கு பேரைத் தேர்வு செய்கிறார்கள். “பட்டத்துக்காரர், கோடியப்பனார், பூசாரியப்பனார், பெரியமனைக்காரர் போன்ற நான்கு பதவிக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களை கடவுளின் பிள்ளைகளாக பாவிக்கிறார்கள். இந்த பதவிக்கு வந்து விட்டால், அவர்கள் எந்த துக்க நிகழ்வுக்கும் செல்ல மாட்டார்கள். தங்களின் தாய், தந்தை, மகன் உள்பட தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால்கூட அவர்களின் உடலை பார்க்கக்கூடாது.

பட்டத்து காளை இறந்து விட்டால், அந்தக் காளைக்கு மட்டுமே இறுதிக் காரியம் செய்வார்கள். வாழ்நாளில் இந்த நான்கு பேரும் பட்டத்துக் காளை இறந்து விட்டால் அதற்கு காரியம் செய்யும்போதும், புதிய காளையைத் தேர்வு செய்யும் நாளிலும் தான் புதிய ஆடைகள் அணிவார்கள். மற்ற நாள்களில் புத்தாடை அணியமாட்டார்கள். இந்த பதவியில் இருப்பவர் இறந்து விட்டால், அவர்களின் வாரிசுகள் அல்லது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.” என்றார்.

கம்பளியின் மகிமை:

இந்த ஆலயத்தில் ஒரு கம்பளி இருக்கிறது. இந்தக்கம்பளி உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்தது என்று சொல்கிறார்கள். அந்தக் கம்பளியில் வயதான ஒருவர் அமர்ந்துகொள்கிறார். பொதுமக்கள் அந்தக் கம்பளியைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். அப்படி வணங்கினால் கண் திருஷ்டி முதலான சிக்கல்கள் தீர்கின்றன என்கிறார்கள். மேலும் சகோதரர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் விதமாக இங்கு ஒரு விநோத சடங்கு செய்யப்படுகிறது. சண்டையிட்டுக்கொள்ளும் பங்காளிகள் இருவரின் வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துவர வேண்டும். கம்பளியில் அமர்ந்திருக்கும் அந்தப் பெரியவர் அந்த இரண்டு பாட்டில் தண்ணீரையும் கலந்து தருகிறார். அதன் பின் அந்த பாட்டிலை வீட்டில் கொண்டு போய் வைத்துவிட்டால் அதன்பின் இரு குடும்பத்துக்கும் இடையில் சண்டை வராது என்பது நம்பிக்கை.