Published:Updated:

பல்லவர் போற்றிய பாலேஸ்வரர்!

ஶ்ரீபாலேஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீபாலேஸ்வரர் ஆலயம்

ஆலயம் தேடுவோம்

`நில வளமும், நீர் வளமும், மலை வளமும், மக்கள் வளமும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஊர் பிரபலமாக இல்லையே!' என்றும் `ஊர் செழித்திருந்தாலும் என்ன பயன்? ஏனோ மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்களே... அதிகம் சண்டை சச்சரவு என்று வருகிறதே...' என்றும் பல ஊர்களில் மக்கள்அங்கலாய்ப்பதைக் கேட்டிருப்போம். காரணம்... அந்த ஊர்களில் எல்லாம் ஏதோ ஓர் ஆலயம் பாழ்ப்பட்டு கவனிப்பில்லாமல் போடப்பட்டிருக்கலாம். வழிபாடுகளும் பூஜை களும் இல்லாமல் கிடக்கலாம். ஆலயம் நலிவுற்றால் ஊருக்கு நல்லதல்ல என்பார்கள் பெரியோர்கள்.

பல்லவர் போற்றிய பாலேஸ்வரர்!
பல்லவர் போற்றிய பாலேஸ்வரர்!

கோயில்களும் அவற்றைச் சேர்ந்த பூஜை களும் விழாக்களும் சிறந்தோங்கித் திகழ்ந்த அந்த நாளில் நம் வாழ்வும் தர்மமும் சிறப்புற்று விளங்கின. அந்த காலம் மீண்டும் வரவேண்டும் எனில், ஆலயங்கள் சிறந்தோங்க வேண்டும். ஆலயங்களே நம் சமூக வாழ்க்கையின் ஆதார ஸ்தானமாக அமைய வேண்டும்.

அப்படி அமைந்தால் நிம்மதியும் தெளிவும் தானே உண்டாகும்; மனமது செம்மையாகும். பிறகென்ன... மக்கள் வாழ்வில் ஒரு குறையும் இருக்காது. ஆம், ஒரு ஊரின் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் அந்த ஊர் ஆலயத்தின் பூஜையை ஒட்டியே அமையும் என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை.

இந்த உண்மையை உணர்ந்த எளிய மக்கள் பலரும் ஒன்றுகூடி ஊர்தோறும் பல ஆலயங்களைப் புனரமைத்து, குடமுழுக்கு நடத்தி புண்ணியம் தேடித்கொள்கிறார்கள். அரசாங்கமும் பெரிய தனவான் களும் செய்யவேண்டிய திருப்பணிகளை ஏழ்மை நிறைந்த எளிய மக்கள் பலர் எடுத்துச் செய்து வருகிறார்கள். தமக்கென்று ஒரு வீடு கூட கட்ட முடியாத சாதாரணர்கள் ஒன்றுகூடி பிரமாண்ட ஆலயங்களை எழுப்பி வருகிறார்கள். இதுவே நம் தர்மத்தின் சிறப்பு.

அப்படியான ஓர் ஆலயம்தான் காஞ்சிபுரம் மாவட்டம் சால வாக்கத்தை அடுத்துள்ள பாலேஸ்வரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பாலேஸ்வரர் ஆலயம். இவ்வூர் அடியார்கள் இணைந்து இந்த ஆலயத்தைப் பிரமாண்டமாகக் கட்டியுள்ளார்கள். இன்னும் பல பணிகள் மீதமிருக்கும் நிலை. கோயிலை நேரில் தரிசிக்கச் சென்றோம்.

பல்லவர் போற்றிய பாலேஸ்வரர்!
பல்லவர் போற்றிய பாலேஸ்வரர்!

``1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் ஐயா இது. காலமாற்றத்தில் முழுவதும் இடிந்து சிதிலமாகிவிட்டது. லிங்கத் திருமேனி யின் பாணப் பகுதி மட்டுமே வெளியில் தெரியும் நிலையிலேயே ஸ்வாமி இருந்தார். நந்தியும் உண்டு. காது பின்னப்பட்ட நிலையில் இருந்தது அவரின் சிலை. மற்ற மூர்த்தங்களும் அரிய கல்வெட்டுகளும் அந்நியர்களால் குளத்தில் வீசப்பட்டனவாம்.

இங்குள்ள அடியார்கள் கூடி இப்போது ஆலயத்தை எழுப்பி இருக்கிறோம். பிரச்னம் பார்த்ததில் சுவாமியின் திருப்பெயர் பாலேஸ்வர் என்றும், அம்பிகையின் திருப் பெயர் குழல்வாய் மொழி அம்மை என்றும் தெரிய வந்தது. அகத்திய மாமுனி மேற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்த - காலமறிய முடியாத திருமேனி கொண்டவர் இந்த ஈசன் என்றும் பல்லவர் கோலத்தில் பெரும் கோயிலாக இது இருந்தது என்றும் தெரியவந்தது.

அங்கே இங்கே என்று அலைந்து அன்பர்கள் பலரிட மும் மன்றாடி... இயன்ற வரையிலும் இந்த ஆலயத்தை எழுப்பிவிட்டோம். கருவறை, அந்தராளம், முகமண்டபம், சிறிய சந்நிதிகள் எல்லாம் உருவாகிவிட்டன. இன்னும் மதில் கட்டுமானம், உற்சவர் திருமேனிகள், கும்பாபிஷேகப் பணிகள் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது.

பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை. இனியும் காலம் கடத்தாது ஐயனைக் கருவறைக்குள் எழுந்தருளச் செய்துவிடவேண்டும்.

பாலாலயத்தில் ஒழுகும் கொட்டகையிலேயே இன்னும் எத்தனை நாள்தான் இருப்பார் ஐயா எங்கள் சுவாமி. இந்த மண்டலத்திலேயே எங்கும் காண முடியாத அளவுக்குப் பிரமாண்ட திருமேனி கொண்டவர் எங்கள் பாலேஸ்வரர். இவர் ராஜாதிராஜர் ஐயா. அம்பிகையும் திருக் கல்யாண கோல நாயகியாக விளங்குகிறாள். எப்படியாவது எவராவது மனம் இரங்கி உதவி செய்தால் சீக்கிரமே குடமுழுக்கும் நடந்துவிடும். எங்களுக்கும் ஒரு நிம்மதி பிறந்துவிடும் ஐயா'' என்று உள்ளம் நெகிழ இரைஞ்சும் பாவனையில் வேண்டுகோள் வைக்கிறார் அடியார் சிவ.மீரா.

பல்லவர் போற்றிய பாலேஸ்வரர்!

நாமும் சுற்றி வந்து பார்த்தோம். பிரமாண்ட மலையடிவாரத்தின் கீழ், மிகப்பெரிய குளத்தின் எதிரே அமர்ந்திருக்கிறார் சுவாமி. இங்கு வந்து வழிபட்டால் கல்யாண யோகம் வரும்; மங்கல வாழ்வு ஸித்திக்கும் என்கிறார்கள்.

`கோயில் வேலைகள் நடக்கும்போதே இங்கு வந்து வழிபட்டு, குடும்ப சிக்கல்கள் தீர்ந்தவர்கள் அநேகம் பேர்' எனக் கூறும் உள்ளூர் பக்தர்கள் ``எங்கள் ஐயனுக்கு அன்பர்கள் எல்லோரும் இயன்ற பங்களிப்பை வழங்குங்கள். நிச்சயம் உங்களின் சந்ததியினர் சீரோடும் சிறப்போடும் வாழ்வார்கள்!' என்று வேண்டுகோள் விடுக்கி றார்கள். ஈசன் அருளால் சகலமும் நல்லபடியே நடக்கும் எனும் நம்பிக்கையோடு, பாலேஸ்வரம் இறைவனை வணங்கி விடைபெற்றோம்.

வங்கிக் கணக்கு விவரம் :

A/c.Name: PAALEESWARAR THIRUKOYIL, PAALEESWARAM VILLAGE

A/c.No: 6217456715

Bank Name: INDIAN BANK

Branch: SALAVAKKAM (699)

IFSC No: IDIB000S053

தொடர்புக்கு: சிவ.மீரா - 9940200394

நம்பிக்கை ஒன்றே போதும்!

வெற்றிமேல் வெற்றி பெற்று சரித்திர சாதனை புரிந்தவன் மாவீரன் அலெக்ஸாண்டர். அகிலத்தின் அத்தனை நாடுகளையும் தானே ஆள வேண்டும் என்று அடங்காத ஆசை கொண்டு உலகப் படையெடுப்பைத் தொடங்கினான்.

அதற்கு முன்னர் தனது சொத்துகளையெல்லாம் நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கினான். இதைக் கண்ட அவன் உயிர் நண்பனான பெர்டிகர்ஸ் ‘‘எல்லாவற்றையும் இப்படி வாரிக் கொடுத்து விட்டால் உன்னிடம் மீதமுள்ளது என்ன?’’ என்றான்.

உடனே அலெக்ஸாண்டர் பெருமிதத்துடன் இப்படிப் பதில் சொன்னான்: ``நம்பிக்கை!’'

ஆம், நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு பல வெற்றிக் கனிகளைப் பறித்தவன் மாவீரன் அலெக்ஸாண்டர்!

- மு. ஜெகந்நாதன், சென்னை-73