திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

கல்யாண யோகம் தரும் பழமுதிர்சோலை!

பழமுதிர்சோலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
பழமுதிர்சோலை முருகன்

திருக்கோயில் திருவுலா

அறுபடை வீடுகளில் மூன்றை அருகருகே வைத்திருக்கும் திருநகரம் மதுரையம்பதி. அவை: பழநி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை. இவற்றில் பழமுதிர்சோலை குறித்த தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

கல்யாண யோகம் தரும் பழமுதிர்சோலை!

ர்ஷபத்ரி, ரிஷபகிரி, சோலை மலை, குலமலை, கொற்றை மலை, வேற்கோட்டம், இருங்குன்றம் என பல பெயர்களில் விளங்கி வரும் திருத்தலம் பழமுதிர்சோலை.

ழமுதிர்சோலையில் விழும் அருவியின் அழகை அற்புதமாக சித்திரிக்கும் நக்கீரர், ‘பழமுதிர்சோலை மலைக்கிழவனே’ என்று முருகனைப் போற்றுகிறார். பழமுதிர்சோலை என்றால் பழம் முற்றின சோலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். பழம் உதிர்ந்த சோலை, பழம் உதிரும் வண்ணம் பெருத்திருக்கும் சோலை என்றெல்லாம் பொருள் கூறுவது உண்டு.

ழம் உதிரும் சோலை மலை என்பதால், அருணகிரிநாதர் திருப்புகழில் ‘சோலைமலை வந்துகந்த பெருமாளே!’ என்றும் ‘பழமுதிர் சோலை மலை மிசை மேவு பெருமாளே’ என்றும், இம்மலையை `ஞான குலகிரி’ என்றும் போற்றுகிறார். 16 திருப்புகழ்ப் பாடல்கள் கொண்ட தலமிது. வள்ளியம்மைக்கு அருள் புரிந்த வேடவனான முருகவேளே பழமுதிர்சோலையில் எழுந்தருளி உள்ளான் என்று கந்தபுராணம் கூறுகிறது.

சுந்தர பாண்டியராக ஈசனும் மீனாட்சியாக உமையாளும் மதுரையம்பதியில் ஆட்சி செய்ய, உக்கிரப் பெருவழுதியாம் முருகப் பெருமான் இருங்குன்றம் ஆகிய பழமுதிர்சோலையில் அமர்ந்து எல்லையைக் காக்கிறார் என மதுரைப் புராணம் கூறுகிறது.

கல்யாண யோகம் தரும் பழமுதிர்சோலை!

த்துப்பாட்டு நூல்களில் முதலில் வைத்துப் போற்றப்படுவது திருமுருகாற்றுப்படை. முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரருக்குக் காட்சியளித்த திருத்தலம் திருப்பரங்குன்றமும் இதுவும் என்கிறார்கள். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, “திருமுருகாற்றுப்படை’ என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, `ஆறுபடை’ என்றானது என்பர். நக்கீரர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்து, இது ஆறாவது படைவீடாக அமைந்துள்ளது.

று ஆதாரச் சக்கரத் தலங்களுள் திருப்பரங்குன்றம் மூலாதாரம், திருச்செந்தூர் சுவாதிஷ்டானம், பழனி மணிப்பூரகம், சுவாமிமலை அநாகதம், திருத்தணி விசுத்தி, பழமுதிர்சோலை ஆக்ஞை. நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள இந்தச் சக்கரம் ஞானத்தின் அடையாளம். இந்த சக்கரத்துக்குத் துணையாக இருப்பவை இடகலை, பிங்கலை. இவையே வள்ளி - தெய்வயானை என்கின்றன ஞான நூல்கள்.

ஞான பண்டிதனானவன் முருகப்பெருமான். ஆகவே, ‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா’ எனக் கேட்டு, ஒளவை மூதாட்டிக்கு இங்கேதான் ஞானக் கண்ணைத் திறந்துவைத்தார் என்கின்றன ஞானநூல்கள். உலகியலுக்குத் தேவையான இலக்கியங் களை எல்லாம் படித்த ஒளவைக்கு பரவுலகத்துக்கானப் பாடங்களை பழமுதிர்சோலையில்தான் முருகன் இடையர் குலச் சிறுவனாக வந்து உபதேசித்தான் என்கிறது தலவரலாறு.

முருகன் ஒளவைக்குப் பழம் உதிர்த்து லீலை புரிந்ததால், இந்த மலையே பழமுதிர்சோலை என்றானதாகவும் சொல்வர். ஒளவைக்குப் பழம் உலுக்கிய நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் ஆலயத்தின் அருகில் உள்ளது. ஆலய தல மரமாக நாவல் மரம் உள்ளது. விநாயக சதுர்த்தியின்போது அதாவது ஆடி, ஆவணி மாதத்தில்தான் நாவல் பழுப்பது வழக்கம். ஆனால் இங்கோ ஸ்கந்த சஷ்டியின்போது அதாவது ஐப்பசியில் பழுக்கிறது என்று வியப்புடன் சொல்கிறார்கள்.

ந்த புராணம் இத்தல முருகனை ‘முத்திதரு பேரழகர்’ என்று போற்றுகிறது. கந்தபுராணத்தை வைத்து சிலர் வள்ளிமலையே பழமுதிர்சோலை என்று கருதி வந்தனர். ஆனால் அருணகிரிநாதர் வள்ளிமலையையும் பழமுதிர்சோலையையும் தனித்தனியே பாடியிருப்பதால், அந்தக் கருத்து ஏற்கத்தக்கதல்ல என்று ஆன்றோர்க ளால் கூறப்படுகிறது.

ங்க காலத்திலேயே ரிஷபகிரி என்று வழங்கப்பட்ட இந்த மலை கிழக்கு - மேற்கில் 16 கி.மீ வரை பரந்து திகழ்கிறது. யமன் இத்தலத்தில் ரிஷப வடிவெடுத்து தவமியற்றித் தன் பெயரால் இம்மலை விளங்கவேண்டுமென இறைஞ்சி இறைவனருள் பெற்றதால், இம்மலை ரிஷபகிரி என்று அமைந்ததாம்.

ளங்கோவடிகள், இம்மலையில் உள்ள நூபுர கங்கைச் சுனை அருகே இருந்த மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர். பண்டைய இலக்கிய நூல்களில் இங்கு `புண்ணிய சரவணம்’ என்ற தடாகம் இருந்ததாகவும், அதில் மூழ்கி வழிபடுபவர்களுக்கு மிகுந்த புலமை உண்டாகும் என்றும் தகவல்கள் உண்டாம். சிலப்பதிகார காலத்திலேயே இங்கு முருகவேள் வழிபாடு இருந்தது தெரியவருகிறது.

கல்யாண யோகம் தரும் பழமுதிர்சோலை!

ரம்பத்தில் இங்கு வேல் வழிபாடே இருந்தது என்கிறது வரலாறு. வேலுக்கு வழிபாடு என்பதால், இது மிகமிகப் பழைமையான ஆலயம் என்றும் சொல்லலாம். இன்றும் இங்கே முருகப்பெருமானின் அம்சமாக 3 அடி உயர வேலுக்குத் தனிச் சந்நிதியும் வழிபாடும் உண்டு.

பிற்காலத்தில் முருகப்பெருமான் திருவடிவம் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுங் கொண்டு அமைக்கப்பட்டது. வள்ளியம்மை, தெய்வயானையுடன் ஞான-தியான-ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் விதமாக சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலது புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார்.

றுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வயானை தேவியருடன் முருகன் கருவறையில் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கு வழிபட திருமண யோகம் கிட்டும் என்கிறார்கள். பழமுதிர்சோலை முருகனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று இங்கு தேனும் தினை மாவும் படைக்கப்படுகின்றன.

ழமுதிர்சோலைக்குச் சற்று மேலே நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. எங்கிருந்து தோன்றுகிறது என்று அறியமுடியாத இந்தத் தீர்த்தம் ஒரு தொட்டியில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ந்தத் தீர்த்தத்தின் அருகில்தான் ராக்காயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நூபுர கங்கை எனும் சிலம்பாறு முருகக் கடவுளின் பாதச் சிலம்பிலிருந்து தோன்றியதால் நூபுர(சிலம்பு)கங்கை என்னும் பெயர் கொண்டது என்கிறார்கள். இந்த கங்கையில் இரும்புச் சத்தும், தாமிரச் சத்தும் நிறைந்திருப்பதால், இது பல நோய்களையும் குணப்படுத்த வல்லதாம்.

கல்யாண யோகம் தரும் பழமுதிர்சோலை!

லக்கியங்களின் கூற்றுப்படி இங்கே 3 தீர்த்தங்கள் இருந்தன என்றும், வடக்குத் தெற்காகப் பிரிந்து ஓடிய ஆறுகள் நூபுர கங்கை என்றும் சிலம்பாறு என்றும் அழைக்கப்பட்டன என்றும் இலக்கியத் தகவல்கள் கூறுகின்றன. சிலம்பாறு முருகனால் தோன்றியது; நூபுர கங்கை திரிவிக்ரமரின் தூக்கிய திருவடியில் பிரம்மன் அபிஷேகித்த நீரால் உருவானதும் என்றும் புராணங்கள் விவரிக்கின்றன.மூன்றாவது தீர்த்தமாகச் சரவணப்பொய்கை திகழ்ந்ததாம்.

நூபுர கங்கையை வரகுண பாண்டியருக்காக ஈசன் உருவாக்கிய தாக மதுரை புராணம் கூறுகிறது. கங்கைக்குச் சென்று புனித நீராட விரும்பிய அவன் ஆசையை, மதுரை சொக்கநாதர் இங்கேயே நிறைவேற்றினார் என்றும் புராணத் தகவல் உண்டு.

முற்காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் இங்கு சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. மதுரையைச் சுற்றியுள்ள எண்பெருங் குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பாடல் ஒன்று... பரங்குன்றம், சமணர் மலை (திருவுருவகம்), பள்ளி (குரண்டி மலை), யானை மலை, இருங்குன்றம்(அழகர் மலை) நாகமலை (கொங்கர் புளியங்குளம் குன்று), அரிட்டாபட்டி மலை (திருப்பிணையன் மலை), கீழவளவுக் குன்று என மொத்தம் எண்பெருங் குன்றங்களைக் குறிப்பிடுகிறது.

முற்காலத்தில் மதுரையில் முனிவர்கள் பலர் கூடி யாகம் ஒன்று செய்தனர். யாகத்தின் பலனை யாருக்கு கொடுத்து முதல் மரியாதை செய்யலாம் என்று யோசித்தபோது, தமிழ் வளர்க்கும் ஔவையாருக்குக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தனர். ஆனால் ஔவையோ, `இதைப் பெற நான் தகுதி உடையவள் இல்லை’ என்று கூறி முருகப்பெருமானுக்கு அளிக்கும்படி வழிகாட்டினாள். சோலை மலை முருகன் அந்த மரியாதையை ஏற்று, அவர்களுக்கு யோகக் கலையைப் பயிற்றுவித்தார் என்றும் ஒரு தகவலும் உண்டு.

துரைக் கணக்காயனார் மகன் நக்கீரர், தமிழ்ப் பாடல் குறித்து சிவனாருடன் வாதம் புரிந்த தன் செயலுக்காக வருத்தம் கொண்டார். அதனால் உண்டான கலக்கம் தீர திருப்பரங்குன்றத்தில் தங்கினார். அங்கு சிவனைத் தியானித்து வழிபாடு செய்தார். அப்போது கற்முகி என்ற பூதம் அவரைத் தூக்கிச் சென்று குகையில் வைத்தது.

கல்யாண யோகம் தரும் பழமுதிர்சோலை!

அங்கிருந்து தப்பிக்க அவர் முருகனை வேண்டினார். முருகனின் வேல் குகையைப் பிளந்து நக்கீரரைக் காப்பாற்றியது. அதற்கு நன்றியாக நக்கீரரும் திருமுருகாற்றுப்படை எனும் உயர் காவியத்தைப் பாடினார். அதில் ‘பழமுதிர்சோலை மலைக் கிழவோனே’ என்று முடிக்க, குமாரனான முருகன் விளையாட்டாக ‘நான் கிழவனா’ என்று கேட்டு மறைந்தாராம். உடனே, ‘என்றும் இளையாய்’ என்று நக்கீரன் வெண்பா பாடி வேண்ட, இரு மனையாளோடும் இளைஞராகக் காட்சி தந்தார் முருகன். அதனாலேயே இங்கு இரு தேவியரோடு காட்சி தருகிறார் சோலைமலை சுந்தரன்.

துரையிலிருந்து 21 கி.மீ தூரத்தில் உள்ளது அழகர் மலை. அங்கு அடிவாரத்தில் இருக்கும் கள்ளழகர் கோயிலிலிருந்து 3 கி.மீ மலைமீது ஏறிச்சென்றால் கோயிலை அடையலாம். நல்ல தார்சாலை உள்ளதால் கோயில் வரை வாகனத்தில் செல்லலாம்.

க்திப் பசியோடு வரும் அன்பர்கள் யாவருக்கும் பேரருள் அமுதை வழங்கி அருள்பாலிக்கும் பழமுதிர்சோலைமலை முருகனை நாமும் ஒருமுறை சென்று வணங்கி வழிபட்டு, வரம்பெற்று வருவோம்.