திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

மங்கலம் அருளும் ராஜ அலங்காரம்!

ஶ்ரீமுருகப்பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமுருகப்பெருமான்

பழநி முருகனின் மகிமைகள்

முருகனின் அறுபடை தலங்களில் ஒன்று பழநி. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 115 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள அற்புத க்ஷேத்திரம். இது, உடலின் உயிர்நாடி யான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது என்கின்றன ஞானநூல்கள்.

மங்கலம் அருளும் 
ராஜ அலங்காரம்!

தைப்பூசம் என்றதும் நினைவுக்கு வரும் தலங்களில் முதன்மையானது பழநி. வரும் 18.1.22 அன்று தைப்பூசம் வருகிறது. இந்தத் திருநாளில் பழநிப் பதிவாழ் பாலகுமாரனைப் போற்றும் விதம் அந்தத் தலத்தின் சில சிறப்புகளை அறிந்து மகிழ்வோம்.

அருளாளர்களும் பழநியும்

கத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.

அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.

பாலசுப்பிரமணி கவிராயருக்கு பிறவியிலேயே பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் இல்லை. பெற்றோர் அவரை பழநிக்கு அழைத்து வந்து முருகனின் பாதத்தில் போட்டு, மனமுருகி அழுதனர். முருகப் பெருமான் அந்தக் குழந்தைக்கு விபூதி பூசி, பேச வைத்தாராம். அந்தக் கவிராயரே 1628-ஆம் ஆண்டு பழநி தல புராணத்தை எழுதினார்.கந்தனுக்குக் காவடி

கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென் றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள்.

முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். இன்றைக்கும் தைப்பூசம் முதலான திருவிழா காலங்களில் பக்தர்கள் பலவகைக் காவடிகளைச் சுமந்து வந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

மங்கலம் அருளும் 
ராஜ அலங்காரம்!
மங்கலம் அருளும் 
ராஜ அலங்காரம்!

தண்டபாணி மகிமைகள்!

லைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியை பராமரித்து வந்தனர்.

இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப்படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு.

மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.

தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும் என்கிறார்கள்.

தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத் தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம். மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். காலை பூஜையின்போது தண்டாயுதபாணி, ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம்.

மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பால சுப்ரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.

காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலை யில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். பழநி முருகப்பெருமானை ராஜ அலங்கார கோலத்தில் தரிசித்தால் சகல மங்கலங்களும் உண்டாலும்; வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்கும்; வாழ்வு ஒளிமயமாகும் எனும் நம்பிக்கை உண்டு.

மங்கலம் அருளும் 
ராஜ அலங்காரம்!

போகரும் முருகனும்!

`பிறவி எனும் நோயுற்றவர்க்கு நீ ஒரு மருந்தை உருவாக்கு. அந்த மருந்துதான் முருகு. முருகன், சக்தியும் சிவமுமானவன்; மாலின் காக்கும் குணப்பாடும் உடையவன். ஞானத்திலும் பரிபூரணன்’ என்று அன்னை சக்தி இட்ட ஆணைக்கிணங்க நவபாஷாணத்தால் முருகனின் திருமேனியை உருவாக்கிய போகர், பழநியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

நவகோள்களில் ஒன்றான செவ்வாய் என்னும் சிவந்த கோளின் நேரான வீச்சு பழநிமலை மேல் பட்டுத் தெறிப்பதாகவும், அந்தக் கோளின் தலைவனான முருகன் அந்த மலைமேல் நின்ற நிலையில் அதன் வீச்சை அவன் தன்னுள் வாங்கி, பின்... ஆகம விதிப் படியால் ஆன பூஜைகளால் அருள் அலைகளாக ஆக்கி, அதை பக்தர்களுக்கு அன்றாடம் வழங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றுமே ஒரு கோளை பிரதிபலிக்கும். ஒன்பது கோள்களே ஒன்பது பாஷாணங்கள். மனித வாழ்வும் ஒன்பது கோள்களாலேயே வழி நடத்தப்படுகிறது. பழநி முருகனை வணங்கிடும் நிலையில், இந்தக் கோள்களையும் வணங்கிய ஒரு பரிகாரார்த்தம் ஏற்படுகிறது என்போரும் உண்டு.

மட்டுமன்றி, நவபாஷாண தண்டபாணி தன்னை தரிசிப்பவரின் விஷமாகிய அஞ்ஞானத்தை தான் ஏற்று அழிக்கிறான். அஞ்ஞானம் அழிந்தாலே மெய்ஞ்ஞானம் தோன்றிவிடும். அவனை தரிசித்த மாத்திரத்தில் அங்கு நிலவும் கதிர்வீச்சால் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். அவன் திருமேனி அபிஷேகப் பிரசாதம் நம் வரையில் அமிர்தமாய் நம்மை அடைகிறது. அவன் திருமேனி படும் விபூதியும் மருந்தாகி நமக்கு நலம் தருகிறது. (சித்தம் சிவம் சாகசம் நூலிலிருந்து...)

மங்கலம் அருளும் 
ராஜ அலங்காரம்!

பள்ளியறை உற்சவம்

ங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக் காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்).

அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேர்ந்ததும், பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். நிறைவில் நடை சாத்தப்படுகிறது.