Published:Updated:

பதவி யோகம் அருளும் ஆறுமுகன்!

முருகப்பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகப்பெருமான்

பெரம்பூர் ஶ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூரில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில். மிக அற்புதமான முருகன் க்ஷேத்திரம் இது. கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத் துடன் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வள்ளி தெய்வானை தேவியருடன் அருள்கிறார் ஆறுமுகப் பெருமான். பன்னிரு கரங்களுடன் மயில்மீது அவர் அமர்ந்தருளும் அழகே அழகு!

தேவியருடன் முருகப்பெருமான்
தேவியருடன் முருகப்பெருமான்

ராஜராஜ சோழன் காலத்தில் இவ்வூருக்குக் கொண்டுவரப்பட்ட விநாயகருக்கு, கோயிலின் மகாமண்டபத்தில் தனிச் சந்ததி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருக் கோயிலில் ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் குபேரலிங்க அம்சத்தில் அருள்கிறார். அம்பிகையின் திருப்பெயர் அருள்மிகு ஆனந்தவல்லி.

பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்மமங்களபுரம் எனப் பெயர் பெற்றதாம். நாளடைவில் பிரம்மபுரம், பிரம்பூர் என்று அழைக்கப்பட்டது. தற்போது பெரம்பூர் என வழங்கப்படுகிறது.

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடித்து தெய்வயானையை மணம் புரிந்து திரும்புகையில் சிவனை வழிபட்டார். தந்தையின் அருளால் இந்தத் தலத்திலேயே கோயில் கொண்டார் என்கின்றன ஞானநூல்கள். இங்கு பிரதான மூர்த்தியாக முருகப்பெருமானும், ஈஸ்வரன் பிரம்மபுரீஸ்வரராகவும் விளங்குவதை ஆன்றோர் போற்றிப் பாடியுள்ளனர்.

சிவாலயத்தின் கோஷ்டங்களில் அகத்தியர், தெற்கே ஶ்ரீதட்சிணாமூர்த்தி, மேற்கே ஶ்ரீதிருமால், வடக்கே ஶ்ரீதுர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளனர்.

சிவாலயம் முருகன் திருக்கோயிலுக்குள் அமைந்துள்ளதால், தனியே கொடி மரம் வைக்கப்படவில்லை. உள்பிராகாரத்தில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்ததியும், நவகிரகச் சந்ததியும் உள்ளன.

பதவி யோகம் 
அருளும் ஆறுமுகன்!

தட்சனின் யாகத்தில் பிரம்மா கலந்து கொண்டு அவிர்பாகம் பெற்றதால், சிவ பெருமானின் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற்றார். பிரம்மாவிடம் கொடுக்கப்பட்ட படைத்தல் தொழில் பறிக்கப்பட்டது.

தன் தவறை உணர்ந்த பிரம்மதேவன் சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்டார். அப்போது ஈசன், “காவிரிக் கரையோரமாக சென்றால், எமது நெற்றிக்கண்ணில் பிறந்த முருகப்பெருமானின் திருக்கோயில் வரும். கந்தன் அருளால் உன் சாபம் தீரும்'' என்று அருள்பாலித்தார்.

அதன்படியே பிரம்மதேவன் காவிரிக் கரை ஓரமாக தலயாத்திரை மேற்கொண்டார். ஓரிடத்தில் ``இங்கே வாரும்'' என்று ஓர் அசரீரி ஒலித்தது. அந்த ஒலி கேட்ட இடத்துக்குச் சென்ற பிரம்மனுக்கு ஆறுமுகனாகக் காட்சி தந்தார் முருகன். அவரருளால் பிரம்மனுக்குச் சாப விமோசனம் கிடைத்தது. பிரம்மன் பிராயச்சித்தமாக சிவபூஜையைத் தொடர்ந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மனுக்கு மீண்டும் படைக்கும் பதவியை அளித்தார்.

பிரம்மனுக்கு மட்டுமன்றி உலக மக்களுக்கும் அருள் வழங்கும் திருவுளத்தோடு ஆனந்தவல்லி சமேதராக - பிரம்மபுரீஸ்வரராகக் கோயிலும் கொண்டார்.

மாமரமாகி நின்ற சூரனின் மேனியை இரண்டாகப் பிளந்தது வேல். ஒருபாகம் சேவலாகவும் மற்றொரு பாகம் மயிலாகவும் மாறின. சேவலை கொடியில் ஏற்றார் முருகன். மயிலை வாகனமாக ஏற்க முன்வந்தார். அப்போது, `அசுர வழியில் வந்ததால் எனக்குச் சாநித்தியம் இருக்காதே' என்று முறையிட்டதாம் மயில். உடனே, தன் இடது கை ஆள்காட்டி விரலால் தண்ணீர் தெளித்து, ஞான உபதேசம் கொடுத்து, மயிலை வாகனமாக ஏற்றுக் கொண்டாராம் முருகப்பெருமான். அதற்கேற்ப இந்தத் தலத்தில் முருகனின் இடதுபக்கம் அமைந்துள்ள மயில், அவரைப் பார்த்தபடி இருப்பது விசேஷம் என்கிறார்கள்.

பதவி யோகம் 
அருளும் ஆறுமுகன்!
பதவி யோகம் 
அருளும் ஆறுமுகன்!

வழிபாட்டுச் சிறப்புகள் குறித்து ஆலயத்தின் ரவிச்சந்திர குருக்களிடம் பேசினோம்.

“பதவி இழந்த பிரம்மன் இத்தலத்து முருகனை வேண்டி தவமிருந்து, மீண்டும் பதவி பெற்றார். ஆகவே, இத்தலத்து சுப்ரமணியரை தரிசித்து வழிபட்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; புதிய பதவி யோகம் வாய்க்கும். மேலும் புத்திரப் பாக்கியம் அருளும் க்ஷேத்திரமாகவும் கல்யாணத் தடையை நிவர்த்தி செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

தொடர்ந்து 6 வாரங்கள் கோயிலுக்கு வந்து செவ்வாய் தோறும் 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டால் திருமணத் தடை அகலும் என்பது நம்பிக்கை.

இங்கு குபேர திசையில் சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் அவரை வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி அடைவது கண்கூடு. இத்தலத்திலுள்ள துர்கையும் வரப்பிரசாதி ஆவாள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் இங்கு தை மாதத்தின் கடைசி ஞாயிறன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதில் கலந்துகொண்டு வழிபடுவோருக்குச் சகல நலன்களும் உண்டாகும். குடும்பம் செழிக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அறுபடை வீடுகளுக்கும் சென்று முருகனை தரிசிக்க முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து முருகனை வழிபட்டு அறுபடை தரிசனப் புண்ணியத்தைப் பெறலாம்'' என்றார்.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை-மங்கை நல்லூர்-தரங்கம்பாடி சாலையில், பெரம்பூர் உள்ளது. மங்கைநல்லூரிலிருந்து 5.கி.மீ. தொலைவிலுள்ள பெரம்பூருக்குப் பேருந்து, ஆட்டோ, கார் வசதி உண்டு.