Published:Updated:

அற்புதங்கள் நிகழ்த்தும் கணபதி தரிசனம்!

ஶ்ரீவிநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவிநாயகர்

அபூர்வ வரம் தரும் பிள்ளையார் கோயில்கள் - திருமலை -

அற்புதங்கள் நிகழ்த்தும் கணபதி தரிசனம்!

அபூர்வ வரம் தரும் பிள்ளையார் கோயில்கள் - திருமலை -

Published:Updated:
ஶ்ரீவிநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவிநாயகர்

முழுமுதற் தெய்வம்; விசேஷங்கள் நிறைந்த மூர்த்தி விநாயகர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு சிறப்பும் அதற்கேற்ற திருப்பெயர்களும் உண்டு அவருக்கு. திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில் அருளும் பிள்ளையாருக்கு சான்று விநாயகர் என்று பெயர். நாகராஜா முதலில் ஈசனை வழிபட்டதற்குச் சான்றாக விளங்கியதால் இந்தப் பெயர்.

அற்புதங்கள் நிகழ்த்தும்
கணபதி தரிசனம்!

ன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கேரளபுரத்தில் அருளும் பிள்ளையார், ஆறு மாதங்கள் கறுப்பாகவும் ஆறு மாதங்கள் வெண்மையாகவும் காட்சிதருவார். இவரை அதிசய விநாயகர் என்றே போற்றுகிறார்கள் பக்தர்கள்.

சங்கரன்கோவிலில் அருளும் பிள்ளையார் தம் கரங்களில் சர்ப்பங்களை ஏந்தியிருக்கிறார். ஆகவே அவருக்கு சர்ப்ப விநாயகர் என்று பெயர். அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உடல் முழுக்க விபூதியுடன் திகழும் விபூதி விநாயகரை தரிசிக்கலாம். திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகர் அருள்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்குத் தேன் அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

இதுபோன்று பிள்ளையாரால் பெருமை பெற்ற இன்னும்பல சிறப்புத் தலங்கள் உண்டு. அவற்றில் ஐந்து தலங்கள் இங்கே உங்களுக்காக!

அற்புதங்கள் நிகழ்த்தும்
கணபதி தரிசனம்!

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

நாள்தோறும் நறுமணம் கொண்ட மலர்களால் அர்ச்சித்து, செந்தமிழ்ப் பாடல்களால் பிள்ளையாரைத் துதித்து வழிபடுவது ஒளவையின் வழக்கம். இந்நிலையில் ஒரு நாள், சுந்தரரும் அவரின் நண்பரான சேரமான்பெருமாள் நாயனாரும் கயிலைக்குச் செல்ல விரும்புவதாகத் தகவல் கிடைத்தது. தானும் அவர்களுடன் கயிலைக்குச் செல்ல விரும்பினார் ஒளவை. ஆகவே பூஜையை வேகமாகச் செய்யத் தொடங்கினார்.

அவரின் எண்ணத்தை அறிந்த விநாயகர், ‘`அம்மையே! என்ன அவசரம்? நிதானமாக பூஜை செய்யுங்கள். அவர்களுக்கு முன்னதாக உங்களைக் கயிலையில் சேர்ப்பது எனது பொறுப்பு!’’ என்று அருளினார்.

ஒளவையும் நிதானமாக தனது பூஜையை முடித்து, தும்பிக்கையானை வணங்கினார். `சீதக்களபச் செந்தாமரைப்பூம் பாதச்சிலம்பு பல இசைபாட...’ என விநாயகர் அகவல் பாடி விநாயகரை வழிபட்டார். இதனால் மகிழ்ந்த பிள்ளையார் விஸ்வரூபம் எடுத்து நின்றார். ஒளவையைத் தமது துதிக்கையால் தூக்கி, கயிலையில் சேர்த்தார் விநாயகர்.

இங்ஙனம், ஒளவைப்பிராட்டி விநாயகர் அகவல் பாடித் திருவருள் பெற்ற தலம்தான் திருக்கோவிலூர். சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில், அந்தகாசுரனை அழித்த தலம். ஆழ்வார்கள் போற்றிய உலகளந்த பெருமாள் கோயிலும், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோ வனமும் அமைந்த தலமிது. மெய்ப்பொருள் நாயனார் வாழ்ந்த ஊர்.

விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருக்கோவிலூர். இங்கு வீரட்டேஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார்; அம்பிகை அருள்மிகு சிவானந்தவல்லி.

இங்கு கோயிலின் முகப்பு வாயிலில் வலப் புறம் காட்சியளிப்பவர் புகழ்பெற்ற பெரியானைக் கணபதியார். இங்கு, ஒளவையார் கயிலை செல்லும் சிற்பக் காட்சியும் உள்ளது. ஒளவை பாடிய விநாயகர் அகவல், மந்திர ஆற்றல் மிக்கது. விநாயகர் அகவலின் தொடக்கத்திலும் முடிவிலும் விநாயகரின் பாதச் சிலம்பையும் கழலையும் துதிப்பதன் மூலம், அவரின் திருவடிகளைப் போற்றுகிறார் ஒளவைப்பிராட்டி. அற்புதமான இந்தப் பாடலைப் பாடி நாமும் விநாயகரை வழிபட்டு அருள்பெறுவோம்.

அற்புதங்கள் நிகழ்த்தும்
கணபதி தரிசனம்!

லட்சுமி சம்பத்து உண்டாகும்!

சென்னை- மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 42 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்போரூர். முருகன் அசுரர்களுடன் மூன்று இடங்களில் போர் செய்தார். கடலில் போர் செய்த இடம் - திருச்செந்தூர்; நிலத்தில் போர் செய்த இடம் - திருப்பரங்குன்றம்; விண்ணில் போர் செய்த இடம் - திருப்போரூர். ஆகவே, இந்தத் தலத்துக்கு போரி, போரிமாநகர், யுத்தபுரி, சமரபுரி, சமரபதி என்று பல பெயர்கள் உண்டு.

இங்கே, வேம்படி விநாயகர் ஆலயம், முருகன் கோயிலுக்கு மேற்கில் சாலையின் வலப்புறம் அமைந்துள்ளது. இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, கந்தவேள் ஆலயத்துக்குச் செல்லவேண்டும் என்பார்கள்.

ஒருமுறை அசுரன் ஒருவனை வதைக்க முற்பட்டார் திருமால். அவனோ பிருகு முனிவரின் மனைவியான புலோசமையிடம் கெஞ்சிப் புலம்பி, தன்னைக் காக்கும்படி அடைக்கலம் புகுந்தான். திருமால் அசுரனைத் தேடி வந்தபோது, தன்னை அழித்தபிறகே அசுரனைச் சம்ஹரிக்க முடியும் என்று தடுத்து நின்றாள் ரிஷிபத்தினி.

வேறு வழியின்றி திருமால், முதலில் புலோமசையை வீழ்த்தி அசுரனையும் அழித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, திருமாலைச் சபிக்க முனைந்தார். அப்போது அவரின் கண்களுக்குத் திருமாலின் மார்பில் திகழ்ந்த திருமகளே முதலில் தென்பட்டாள். ``கசப்பான இந்தச் செயலைச் செய்யும்படி திருமாலை அவரின் நெஞ்சில் இருந்துகொண்டு மூட்டிவிட்டுவிட்டாய். நீ பூலோகத்தில் கசப்பின் மரமாகப் போவாய்’’ என்று சபித்துவிட்டார்.

திருமகள் கலங்கினாள். பின்னர் திருமாலின் வழிகாட்டுதல்படி திருப்போரூருக்கு வந்து வேம்பின் வடிவாகி நின்று, கணபதியைத் தொழுது வந்தாள். பிள்ளையார் அருளால் விமோசனம் பெற்றாள். திருமகளுக்கு அருளிய பிள்ளையார் வேம்படி விநாயகராகக் காட்சி தருகிறார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகளுக்கு இத்தலத்தில் முருகன் இருக்கும் இடத்தைக் காட்டியருளியதும் இந்தப் பிள்ளையார்தான். இவரை வழிபட்டால் லட்சுமி கடாட்சமும்; செல்வ சம்பத்தும் பெருகும் என்பது நம்பிக்கை.

அற்புதங்கள் நிகழ்த்தும்
கணபதி தரிசனம்!

மாமரத்து விநாயகரின் சந்தனப் பிரசாதம்!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தைத் தாண்டி அமைந்துள்ளது கூடுவாஞ்சேரி. நந்திதேவர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அதனால் இதற்கு நந்திகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. ஒருகாலத்தில் இங்கே பூந்தோட்டங்கள் அதிகம். பூக்களைப் பறித்து மாலை தொடுத்து ஆலயங்களுக்கு அனுப்புவார்கள். ஆகவே, பூ இடுவாஞ்சேரி என்றும் பெயர் உண்டு. அதுவே காலப்போக்கில் கூடுவாஞ்சேரி என்று மாறியது என்கிறார்கள்.

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கிறது அருள்மிகு மாமரத்து சுயம்பு விநாயகர் திருக்கோயில். மாமரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் சுண்டல் விற்கும் மூதாட்டி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் எங்கெங்கோ அலைந்து திரிந்து கூவியும் சுண்டல் விற்பனை ஆகவில்லை.

சோர்வுடன் இந்த இடத்துக்கு வந்து ஒரு மாமரத்து அடியில் அமர்ந்து தன் நிலையை எண்ணி வருந்தி, ‘பிள்ளையாரப்பா... நீதான் வழிநடத்தணும்’ என்று மனதில் பிரார்த்தித்தபடி இருக்க, ஒவ்வொருத்தரா வந்து சுண்டல் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. சில மணி நேரத்தில் சுண்டல் முழுவதும் காலி. அன்று மட்டுமல்ல அடுத்தடுத்த நாள்களிலும் குறிப்பிட்ட அந்த இடத்தில் மூதாட்டியின் சுண்டல் விற்பனை அமோகமாக நடந்தது.

மூதாட்டிக்கு இந்த மரத்தில்தான் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று தோன்ற, அருகில் சென்று கவனித்தார். மரத்தின் அடிப்பகுதியில் வேர் முடிச்சுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து விநாயகரின் திருமுகமாய்க் காட்சி தந்தது. உள்ளம் சிலிர்க்க அந்தப் பிள்ளையாரை வணங்கித் தொழுதார் மூதாட்டி. விஷயம் அறிந்து ஊர் கூடியது, மாமரத்து சுயம்பு விநாயகருக்கு வழிபாடு ஆரம்பமானது. பிற்காலத்தில் கோயிலும் எழும்பியது. தருமை ஆதின குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீசண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இங்கே வந்து வழிபட்டிருக்கிறார். வேதாந்த மகரிஷி இங்கே அமர்ந்து தியானம் செய்துள்ளார்.

விநாயகர் அருளும் மாமரம் நன்கு செழித்து வளர்ந்து நிற்கிறது. சுவாமியின் சந்நிதியில் மரம் செல்வதற்கு மட்டும் வழிவிட்டு அறை எழுப்பியிருக்கிறார்கள். மாமரத்து விநாயகர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். இந்த அம்சத்தை அகோர கணநாத சொரூபம் என்பார்கள். ஆகவே, சதுர்த்திதோறும் இந்தக் கோயிலில் அகோர கணநாத ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால் கிடைக்கும் பலன் அமோகம். எதிரிகள் தொல்லைகள் தீரும்; நோய்கள் விலகும். அதேபோல், இங்கு சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்குச் சந்தனம் சாத்தும் வழக்கம் உண்டு. அப்படிச் சாத்தப்பட்ட சந்தனம் சகல வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்து என்பது ஐதிகம்!

அற்புதங்கள் நிகழ்த்தும்
கணபதி தரிசனம்!

சங்கடங்கள் தீர்ப்பார் சங்குபாணி விநாயகர்

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குத் தென்கிழக்கிலும் உலகளந்தபெருமாள் கோயிலுக்குத் தெற்கிலுமாகக் கோயில் கொண்டிருக் கிறார் சங்குபாணி விநாயகர். சப்பாணி விநாயகர் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள். காஞ்சி மாமுனிவராம் மகா பெரியவா யாத்திரை கிளம்பும்போதும், யாத்திரை முடிந்து காஞ்சிக்குத் திரும்பிய பின்பும் இந்தப் பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் (சிதறுதேங்காயாக) சமர்ப்பிப்பாராம்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் மொழிகளையே படைகளாக்கி அசுரர்களை வென்றனர். ஆகவே, பிரம்மனிடமிருந்து வேதங்களைக் கவர்ந்துவர முடிவெடுத்தனர் அசுரர்கள். பெரும் வல்லமை கொண்ட சங்காசுரனிடம் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதை நிறைவேற்றும்படி தன் சகோதரன் கமலாசுரனுக்குக் கட்டளையிட்டான் சங்காசுரன்.கமலாசுரனும் தனது மாயையினால் பிரம்மனின் இருப்பிடத்துக்குச் சென்று, வேதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அண்ணனிடம் ஒப்படைத்தான். அவற்றைக் கடலுக்குள் மறைத்து வைத்துக் காவல் செய்தான் சங்காசுரன்.

படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனாரின் ஆணைப்படி கணபதியை வழிபட்டார். பிரம்மனுக்கு அருள்புரிய சித்தம் கொண்ட பிள்ளையார், மல்லாலர் எனும் பெயருடன் அந்தணராக வடிவெடுத்துப் புதிதாக வேதாகமங்களை உருவாக்கி, பிரம்மனிடம் தந்தார்.

இதையறிந்த சங்காசுரன் மல்லாலரை அழிக்க தம்பியின் தலைமையில் பெரும் படையை அனுப்பினான். மல்லாலரும் தயாரானார். தனது மாயையால் அளவற்ற படைகளை நொடிப்பொழுதில் உண்டாக்கினார். பெரும்போர் மூண்டது. கமலாசுரன் தாக்குப்பிடிக்க இயலாமல் தோற்று ஓடினான். பின்னர் சங்காசுரன் தைரியமூட்டியதால் மீண்டும் களம் கண்டான். இந்நிலையில் கர்க்க முனிவர் பெரும் வேள்வி செய்து, பிரமாண்டமான மயில் ஒன்றைத் தோற்றுவித்து விநாயகரிடம் ஒப்படைத்தார். அதன்மீது ஏறிச்சென்று கமலாசுரனையும், அவனுக்குப் பிறகு சங்காசுரனையும் அழித்தார். அவனிடமிருந்த வேதங்களையும் மீட்டு வந்தார். இங்ஙனம் பிள்ளையார் மயில் வாகனம் கொண்டதால், அவருக்கு மயூரேச விநாயகர் என்று திருப்பெயர். அதேபோல் சங்காசுரனின் ஆன்மாவைப் புனிதப்படுத்தி அவனை வெற்றிச் சங்காக துதிக்கையில் ஏந்தினாராம் கணபதி. ஆகவே அவருக்கு சங்குபாணி பிள்ளையார் என்றும் பெயர் வந்தது.

காஞ்சிபுரத்தில் உள்ள 16 கணபதிகளில் இந்தச் சங்குபாணி விநாயகர் குறிப்பிடத்தக்கவர். இவரை வழிபட்டால் சங்கடங்கள் அழியும்; வெற்றி மேல் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

அற்புதங்கள் நிகழ்த்தும்
கணபதி தரிசனம்!

மனக் கலக்கம் நீங்கும்!

கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் பாதையில் சுமார் 17 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலங்குடி. ‘திரு இரும்பூளை’ என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. அருள்மிகு ஏலவார் குழலியுடன் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில் அருளும் பிள்ளையார்- கலங்காமல் காத்த விநாயகர்!

தவ பலத்தால் வரம் பெற்ற கொடியவன் கஜாசுரன். அவன் பெயரைச் சொன்னாலே, கதிகலங்கினார்கள் அனைவரும். அவனைக் பார்த்த மாத்திரத்தில் தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டிக் கொண்டும், தேங்காய் உடைத்தும் மிகுந்த வணக்கத்துடன் நடந்து கொண்டனர். அப்போதுதான் அவனது கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்!

ஒருமுறை விண்ணுலகம் சென்றவன், அங்கிருந்த அண்டச் சுவர் ஒன்றை இடித்துவிட்டான். அதனால் ஆகாய கங்கை உடைப்பெடுத்தது. பூலோகம் நீரில் மூழ்கியது. ஆனால், ஆலங்குடி மட்டும் மூழ்கவில்லை. தேவர்கள், இந்தத் தலத்தில் அருளும் விநாயகரை வேண்டி அவரது பொற்பாதங்களைப் பணிந்து நின்றனர். அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்ய திருவுளம் கொண்டார் கணபதி. தனது தும்பிக்கையால் நீர் மொத்தத்தையும் உறிஞ்சினார். அண்டச் சுவரின் உடைப்பைத் தனது கால் பெரு விரலால் அடைத்து, ஆகாய கங்கையின் நீர் பெருகாமல் தடுத்தார்.

அத்துடன் விட்டாரா? கஜாசுரனையும் அழிக்கப் புறப்பட்டார். அவனுடைய ராஜதானியாகிய மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. முடிவில்லாமல் நீண்டது. அந்த அசுரன் இறவாத வரம் பெற்றவன் என்பதை அறிந்த விநாயகர், தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார்.

அவனோ தன் உடலை விட்டு, பெருச்சாளியாக ஓடிவந்தான். அதை, தமது வாகனமாகக் கொண்டு அடக்கியாண்டார் ஆனைமுகன். இவ்வாறு கஜமுகனை அடக்கி, அனைவரையும் காத்து சுகம் பெற வைத்ததால், இந்தத் தலத்தின் பிள்ளையாருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்று திருப்பெயர். அசுரன் அடங்கியபிறகு, அதுவரை அவனுக்குச் செய்து வந்த... தோப்புகரணம், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கே செய்து வழிபட ஆரம்பித்தனர்.

திரு இரும்பூளை எனப்படும் ஆலங்குடியில் அருளும் இந்த விநாயகரைத் தொடர்ந்து பல வாரங்கள் தொழுது வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். வம்பு, வழக்குகள் அகன்று மனநிம்மதி கிடைக்கும் என்கிறார்கள்.