Published:Updated:

`ஆலம் குடியான் என்று யார் சொன்னார்?'

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

காளமேகப் புலவரின் பாடலும் கதையும் - ஆர்.பாண்டியன் -

`ஆலம் குடியான் என்று யார் சொன்னார்?'

காளமேகப் புலவரின் பாடலும் கதையும் - ஆர்.பாண்டியன் -

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைப் பருகி உலக உயிர்களைக் காத்தருளிய சிவபெருமானின் அற்புதமான வடிவமே திருநீலகண்டர். புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலான சங்க இலக்கியங்களும் சைவத் திருமுறைகளும் ‘திருநீல கண்ட’ திருவடிவின் பெருமையைப் போற்றுகின்றன.

`ஆலம் குடியான் 
என்று யார் சொன்னார்?'

நீலமணி மிடற்றொருவன், கறைமிடற்றண்ணல், காரியுண்டிக் கடவுள் என்றெல்லாம் திருநீலகண்ட கடவுளைச் சிறப்பிக்கின்றன பண்டைய நூல்கள். இந்த வடிவிலான சிவமூர்த்தங்களை ஒன்றிரண்டு தலங்கள் தவிர, மற்றகோயில்களில் காண இயலவில்லை.

சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள திருநீலகண்டரின் பஞ்ச லோகத் திருமேனி அரிதானது. இது, தஞ்சை மாவட்டம்- கீழ்ப்புத்தனூர் எனும் தலத்தைச் சேர்ந்தது என்பர்.

கோவில்பட்டி அருகில் - கழுகுமலை வெட்டுவான்கோயில் விமானத்தில் நீலகண்டர் திருவடிவம் காணப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நந்தி மண்டபத் தூண் ஒன்றில், நின்ற கோலத்தில் திகழும் திருநீலகண்டரை தரிசிக்கலாம்.

காளமேகப் புலவர் ஆலங்குடி என்ற தலத்துக்குச் சென்றார். அங்கே குடிகொண்டுள்ள இறைவனை ஊர்ப்பெயரை ஒட்டி ‘ஆலங்குடியான்’ என்று அவ்வூரார் அழைத்தனர்.

இதைக் கேட்ட கவி காளமேகம், ‘சிவபெருமான் ஆலம் (விஷம்) குடித்தவராயிற்றே? அவரை ஆலம் குடிக்காதவன் (குடியான்) என்று எப்படி சொல்ல முடியும். அவர், ஆலம் குடித்திருக்காவிட்டால் மண்ணுலகமும் விண்ணுலகமும் தேவர்கள் யாவரும் அழிந்திருப் பார்களே! அவ்வாறு நேராமல், அனைவரையும் காக்க ஆலம் குடித்து அருளிய பெருமானை, ‘ஆலம் குடியான்’ என்பது எவ்வாறு பொருந்தும்?’ எனும் சுவையான கருத்தமைந்த, சொல் நயத்துடன் கூடிய ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல்:

ஆலம் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்
குடியானேல் வானும் குவலயமும் எல்லாம்
மடியா வோ முற்றொருங்கு மாய்ந்து.

`யார் பெரியவர்?’

ஒருமுறை சொற்பொழிவின்போது வாரியார் சுவாமிகள், ``உரையாற்றும் நான் பெரியவனா, அதைக் கேட்கும் நீங்கள் பெரியவரா?’’ என்று கேட்டுவிட்டு, அவரே பதில் விளக்கமும் தந்தாராம். ``பேசும் வாய் கன்மேந்திரியம். கேட்கும் செவி ஞானேந்திரியம். ஞானம்தானே பெரியது. ஆக, எனது உரையைக் கேட்கும் நீங்களே பெரியவர்கள்’’ என்றாராம்!

- விசாலாட்சி, தூத்துக்குடி