திருக்கதைகள்
Published:Updated:

ராம... ராம..!

துளசிதாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
துளசிதாசர்

சிந்தனை விருந்து

`ஈஸ்வரா...’, `முருகா...’, `பெருமாளே...’, `மாரியாயி...’ என்றெல்லாம் சில முதியோர்கள் அவ்வப்போது சொல்லக் கேட்டிருப்போம். `இப்படி இறை நாமத்தை உச்சரிப்பதால் ஏதாவது பலன் இருக்கிறதா?’ என்று கேட்டார் நண்பர். நியாயமான கேள்வி.

துளசிதாசர்
துளசிதாசர்


துளசிதாசரின் மடம். மதிய நேரம். உணவுப் பந்தி நடக்கும் இடத்தில் சலசலப்பு. என்னவென்று எட்டிப்பார்த்தார் துளசிதாசர். பந்தியில் அமர்ந்திருந்த ஒருவரை எழுந்திரிக்கச் சொல்லி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ``ஏன் அவரை எழுந்திரிக்கச் சொல்கிறீர்கள்?’’ என்றார் துளசிதாசர்.

``இவர் மாபாவி. இவரோடு உணவருந்தினால் எங்களுக்கும் பாவம் வரும். அதனால்தான் அவரை எழுந்து போகச் சொன்னோம்.’’

`பாவி’ என அடையாளப்படுத்தப்பட்டவரை அருகே அழைத்தார் துளசிதாசர். ``ஐயா... எங்கே `ராம... ராம...’ என இருமுறை சொல்லுங்கள்...’’

``ராம... ராம...’’

``அவ்வளவுதான். இவர் ராம நாம ஸ்மரணை செய்து விட்டார். அதனால், இவருடைய பாவமெல்லாம் நீங்கி விட்டது. இப்போது இவருடன் உணவருந்தலாம்’’ என்றார் துளசிதாசர். ஆனால், மற்றவர்கள் ஏற்கவில்லை. ``இவருக்குப் பரிமாறிய அன்னத்தை விசுவநாதர் கோயிலில் இருக்கும் நந்திக்கு நைவேத்தியம் செய்வோம். அவர் ஏற்றுக்கொண்டால், இவர் பாவியல்ல என ஒப்புக்கொள்கிறோம்’’ என்றார்கள்.

விசுவநாதர் கோயில் நந்திக்கு முன்னே நின்றார் துளசிதாசர். ``நந்தியம்பெருமாளே, ராம நாமம் சகல பாவங்களையும் போக்கும் என்பது உண்மையானால் இந்த நைவேத்தியத்தை ஏற்கவேண்டும்’’ என்றார். நந்தி அசைந்தது. எழுந்தது. உணவை ஆசைதீர உண்டது. மறுபடியும் சிலையானது. பார்த்தவர்களும் சிலை போலாயினர். கலிகாலத்தில் இறை நாமத்தைத் துதிப்பதுதான் எல்லாத் துயரங்களையும் போக்கும் வழி.

வினோத், ஆறு வயது சிறுவன். அவனுக்கொரு சந்தேகம். ``ஏம்மா... நீ பார்க்குற சீரியல்ல `வாழ்க்கை... வாழ்க்கைன்னு சொல்றாங்களே... அப்படின்னா என்னம்மா?’’ எனக்கேட்டான். ``அது ஒண்ணுமில்லடா கண்ணு... வாழ்க்கைன்னா சந்தோஷமா இருக்குறது...’’

அன்று பள்ளியில் ஆசிரியை மாணவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்... ``நீ வளர்ந்து என்ன ஆகப் போறே..?’’ வழக்கம்போல மாணவர்களிடமிருந்து, `டாக்டர்’, `இன்ஜினீயர்’, என விதவிதமான பதில்கள். வினோத் மட்டும், ``நான் சந்தோஷமா இருக்கப்போறேன் டீச்சர்’’ என்றான்.

``வினோத்... உனக்கு என் கேள்வி புரியலை.’’

``டீச்சர் உங்களுக்கு வாழ்க்கை புரியலை!’’