அர்த்தம் பொதிந்தவை மகான்களின் வார்த்தைகள். அவை புரியும்போது பக்தர்களின் துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்.
ஷீர்டி... பாபாவைப் பார்க்க நெடுந்தூரத்திலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். பாபாவிடம் தன் பிரச்னையை விவரிக்கும்போதே குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

``பாபா... நான் எது செஞ்சாலும் நஷ்டம். துணி வியாபாரம் செஞ்சேன், நஷ்டம். ஊர் ஊரா போய் பாத்திர வியாபாரம் செஞ்சேன், அதுலயும் நஷ்டம். உயிரை விட்டுரலாம்போல இருக்கு...’’
பாபா இதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. கொஞ்சம் கோதுமையை அன்பரிடம் கொடுத்தார். ``இதுல எத்தனை கோதுமை இருக்குன்னு என்ணிட்டு வா...’’ என்றார். பக்தர் ஓரிடத்தில் அமர்ந்து கோதுமை மணிகளை எண்ண ஆரம்பித்தார். வெகுநேரம் எண்ணி முடித்துவிட்டு பாபாவிடம் வந்தார். `மொத்தம் 8,024 கோதுமை மணிகள் இருக்கு பாபா’’ என்றார்.
``சரி... நீ இங்கேயே ஓய்வெடுத்துக்கோ. நாளைக்கு பார்க்கலாம்.’’
அடுத்த நாள் அன்பர் வந்தார். அதே கோதுமை மூட்டையை அவரிடம் கொடுத்தார் பாபா. ``எண்ணிட்டு வா’’ என்றார். அன்பர் கோதுமை மணிகளை எண்ணிவிட்டுத் திரும்பி வந்தார். ``மொத்தம் 8,022 கோதுமை மணிகள் இருக்கு பாபா.’’
``ஏன் ரெண்டு குறையுது?’’
``நேத்து மனக்குழப்பம். சரியா எண்ண முடியலை. இன்னிக்கி அது இல்லை. சரியா எண்ண முடிஞ்சுது.’’
பாபா பேச்சை மாற்றினார். ``உன் அப்பா என்ன பண்றார்?’’
``மிட்டாய் வியாபாரம். பாவம், துணையில்லாம கஷ்டப்படுறாரு.’’
``நீ அவருக்கு உதவ வேண்டியதுதானே..?’’
``அவர்கூடவே இருந்ததால எனக்கு மிட்டாய் எப்படிச் செய்யறது, அதோட பக்குவமெல்லாம் தெரியும். சில வருஷத்துக்கு முன்னாடி கொஞ்சம் மிட்டாயை எடுத்துத் தின்னுக்கிட்டிருந்தேன். அப்பா பார்த்துட்டு, அடி அடின்னு அடிச்சுட்டார். அன்னிக்கி பிரிஞ்சு வந்தவன்தான். அதுக்கப்புறம் அவரைப் போய் பார்க்கவே இல்லை.’’
``உனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்னு புரியுதா... உனக்குத் தெரிஞ்ச தொழிலை விட்டுட்டு, தெரியாத வியாபாரத்துல இறங்கினே... கஷ்டப்படுறே. போ, உன் அப்பாவோட சேர்ந்து மிட்டாய் தொழிலையே பண்ணு’’ என்றார். பாபா சொன்னபடியே செய்தார் அன்பர். அதன் பிறகு வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம்தான். இதைத்தான் கிராமத்தில் `தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்’ என்பார்கள்.
ஓர் அலுவலகம். அன்றைய மீட்டிங்கில் சேல்ஸ் மேனேஜர் அந்த மாத விற்பனை குறைந்தது குறித்து டீம் உறுப்பினர்களிடம் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ```இம்பாசிபிள்’ங்கிற வார்த்தை என்னோட அகராதியிலேயே இல்லை’’ என்று கத்தினார்.
அப்பாவியாக ஒரு சேல்ஸ் ரெப் சொன்னார்:
`டிக்ஷனரியை வாங்குறதுக்கு முன்னாடியே அதை செக் பண்ணியிருக்கணும் சார்.’’