Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

இறைவனிடம் நாம் சரணாகதி அடைந்து விட்டால், அவர் நம்மை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறார் என்பதற்கு, எத்தனையோ விதமான சாட்சிகளை ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

லட்சுமி கடாட்சம்!

ல வருஷங்களுக்கு முன்னால் துபாயில் ஒரு பெண்மணியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஷீர்டி சாயி, சத்ய சாயி இருவரையும் வணங்குபவர். அவர், அவருடைய கணவர் மற்றும் குடும்பமே சரணாகதி தத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘சாய்ராம், சாய்ராம்’ என்பதைத் தவிர, வேறு எந்த வார்த்தையுமே வாயில் வராது. மிக நல்ல குடும்பம்.

இது நடந்து 30, 35 வருடங்கள் இருக்கும். அவரது வீட்டில் உண்மை யாக நடந்த நிகழ்ச்சி இது.

அன்று வியாழக்கிழமை. அவர்கள் பாபாவுக்கு பூஜை செய்துவிட்டு, பஜன் எல்லாம் முடிந்த பின்னர், வந்தவர்களுக்கு உணவு பரிமாற வேண்டி அனைவரையும் அழைத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது ஒரு 50, 60 பேரை. 30 வருஷங்களுக்கு முன்னால் என்றால்... துபாயில் எல்லாம், இப்போது இருக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய கூட்டம் ஒன்றும் இருந்திருக்காதே!

ஆனால் நடந்ததோ வேறு... எதிர்பார்க்காத அளவுக்கு நிறையபேர் வந்துவிட்டார்கள். முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்தில் அடங்குவர். வேற்று மதத்தவர்கூட, ‘என்ன... இன்னிக்கு என்னமோ விசேஷமாமே உங்க வீட்டில். ஸோ வீ வான்ட் டூ ஈட் இண்டியன் ஃபுட்’ என்று சொல்லிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஷீர்டி சாயி ‘அல்லா மாலிக்’ என்றுதானே சொல்வார். மத பேதம் இல்லாமல் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 100, 150 பேருக்கு மேல் அந்த ஃப்ளாட்டில் திரண்டுவிட்டார்கள்.

இந்த அம்மாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அடுக்களையில் சமைத்து வைத்திருக்கிறார். பொங்கல், வடை, கேசரி, பாயசம், பிசிபேளாபாத் எல்லாம் செய்திருக்கிறார். சிப்ஸ் மட்டும் வெளியே கடையில் வாங்கி வந்து வைத்திருக்கிறார். பெரிய பாத்திரங்களில் 60 - 65 பேர் சாப்பிடும் அளவுக்குத்தான் அவர் சமைத்திருந்தார். ஆனால் கிட்டத்தட்ட 150 - 200 பேர் இருக்கும் கூட்டத்தைப் பார்த்து அவர் பயந்துவிட்டார்.

‘எல்லாரும் நல்லா சாப்பிடறவங்களாச்சே. இத்தனைபேருக்கும் எப்படி... புரியலையே..!’ – என்று கையைப் பிசைந்தபடி மிரண்டு போய் நின்றாராம்.

அனைவருமே மாலை 6 மணிக்கு வந்தவர்கள். பூஜை எல்லாம் பார்த்துவிட்டு, சுவாமியின் லீலைகளைப் பற்றி அளவளாவிய அவர்கள் சாப்பிட அமர்ந்தனர். பயந்துபோய் நின்ற வீட்டுக்காரப் பெண்மணியிடம் வயதான ஓர் அம்மா வந்தார். அவரும் சாயியின் பக்தை. அடிக்கடி புட்டபர்த்திக்குச் செல்பவர்.

அவர், “நீ பயப்படாதேம்மா... சுவாமியை நினைச்சுக்கோ. ஒரு புதுத்துணி ஏதாவது இருந்தா கொடு” என்று கேட்டிருக்கிறார்.

பின்னர், சமையல் செய்து வைத்திருந்த அனைத்து பாத்திரங்களையும் மூடியிருந்த தட்டுகளை எல்லாம் எடுத்துவிட்டு, அந்தப் புதுத் துணியை அந்தப் பாத்திரங்களின் மேல் போட்டு மூடி, அப்படியே நின்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினாராம்.

பந்தி தொடங்கி, அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

லட்சுமி கடாட்சம்!

என்ன ஆச்சர்யம்...
60 பேருக்குச் சமைத்திருந்த அந்த உணவு, 150 - 200 பேர் வயிறார நன்கு சாப்பிட்ட பிறகும்கூட பாத்திரங்களில் மீதி இருந்ததாம். இந்த நிகழ்ச்சியை அந்தப் பெண்மணி விவரித்த போது, ‘இது என்ன அதிசயம்!’ என்று வியந்தேன் நான்.

இதுதான் சரணாகதியின் மகத்துவம்! இதேபோன்று ஓர் அனுபவம் எனக்கும் நடந்தது. 1997-ல் எங்கள் வீட்டில் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ கோர்ஸ் ஒன்று நடத்தலாம் என்று நானும் என் கணவரும் திட்டமிட்டோம். கோர்ஸ் தொடங்கவேண்டும் என்றால், குறைந்தது 10 பேராவது இருக்க வேண்டும் என்றார் அந்த மாஸ்டர். அவர் பெயர் கணேசன். ஆழ்வார் பேட்டையில் இருக்கிறார்.

‘பத்து பேரா? யோகா கத்துக்கணும்னு சொல்லி பத்து பேரை எப்படிக் கூப்பிடறது? வெத்தல பாக்கு வெச்சுக் கூப்பிட்டாகூட வர மாட்டாங்களே... அவரவர்க்கு எழுதப் பட்டிருந்தாதான் இந்த மாதிரி விஷயங்களுக்கு வரத் தோணும்...’ என்று நினைத்துக் கொண்டே, அப்படி இப்படி என்று சுற்று வட்டாரத்தில் ஆறு பேரைத் தேற்றிவிட்டேன். மாஸ்டரிடம் சொன்னேன்.

“இல்லல்ல... ஆறு பேரல்லாம் போதாது. குறைஞ்சது பத்துப் பேராவது இருந்தால்தான் கிளாஸ் எடுத்த நிறைவு இருக்கும்!’ என்று கறாராகச் சொல்லிவிட்டார். சரி... இருக்கவே இருக்கிறார் பாபா. அவரைத்தானே எல்லாவற் றுக்கும் பிடித்துத் தொந்தரவு செய்ய முடியும்!

‘சாமி.. குறைஞ்சது பத்து பேராவது வேணுமாம். நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணு வீங்களோ தெரியாது. இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்கு. எனக்கு அதுக்குள்ள அத்தனை பேரும் வேணும்’ என்று உரிமையாக அவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

நம்பமாட்டீர்கள்...

சொன்னதுபோல ஒரு வாரத்துக்குள், அங்கே சொல்லி, இங்கே சொல்லி 21 பேர் சேர்ந்து விட்டார்கள். அதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் அதிகம். எனக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது.

சரணாகதி மகிமையை நானும் உணர்ந்து சிலிர்த்த தருணம் அது!

அமோகமாக கிளாஸ் தொடங்கியது. எல்லோரும் ஆர்வமாகக் கற்றுக்கொண்டனர். வீட்டில் 9 நாள்கள் கோர்ஸ். மிக அமைதியாக நடந்தது. நான் என்ன நினைத்திருந்தேன் என்றால், 9-வது நாள் கிளாஸ் முடிந்ததும் அனைவருக்கும் வீட்டில் லஞ்ச் கொடுத்துவிடலாம் என்று. மாஸ்டர் மற்றும் இன்னொருவருடன் சேர்ந்து 23 பேர்... மேலும் எங்கள் வீட்டு வேலையாள்கள் எல்லாருக்குமாகச் சேர்த்து 30 பேருக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டோம்.

எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ‘நான் சமைச்சுக் கொடுத் துடறேன்’ என்று சொன்னார். ‘ஸ்வீட் என்ன வேணும்?’ என்று அவர் கேட்க, ‘ரஸமலாய் கொடுத்திடலாம் எல்லாருக்கும்’ என்றார் என் வீட்டுக்காரர். 30 பேர் என்றாலும், யாராவது கூடுதலாய் ஒரு ஸ்வீட் கேட்டால் இல்லை என்று சொல்ல முடியாதே என்பதால், 40 ஸ்வீட் + 40 சாப்பாடு ஆர்டர் செய்தோம்.

குறித்த நேரத்தில் உணவு வந்தது. எல்லோரும் நிம்மதியாகச் சாப்பிட்டு முடிக்கும் வேளை. சரியாக அந்த நேரம் பார்த்து அந்தச் சம்பவம் நடந்தது!

- கடாட்சம் பெருகும்...