Published:Updated:

ஷீர்டி சென்றேன் சிந்தை மகிழ்ந்தேன்!

ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயிபாபா

சாயி வாசகர் அனுபவங்கள்

ஷீர்டி சென்றேன் சிந்தை மகிழ்ந்தேன்!

சாயி வாசகர் அனுபவங்கள்

Published:Updated:
ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயிபாபா

என் வாழ்க்கையில் நான் ஷீர்டி சென்று வந்த அனுபவம் மறக்க இயலாதது. 2007-ம் ஆண்டு 30 பேர் கொண்ட குழு ஷீர்டிக்குச் செல்லத் திட்டமிட்டோம். அதில் எல்லோரும் பணம் கட்டிவிட நான் கடைசி நாள்தான் பணம் செலுத்தும் சூழ்நிலை!

ஷீர்டி சென்றேன் 
சிந்தை மகிழ்ந்தேன்!

குழுவின் தலைவர் என் வீட்டுக்கே வந்து பணத்தைப் பெற்றுச் சென்றார். ரயில் நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டார். இரவு 11:30-க்கு ரயில். நான் பதினோரு மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். ஆனால் குழுவின் தலைவர் வரவில்லை. என் டிக்கெட் அவரிடம் இருந்தது.

மற்றவர்கள் எல்லாம் ஏறி அமர்ந்துவிட எனக்கோ பதற்றம் ஆரம்பமானது. ரயில் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது. மற்ற எல்லோரிடமும் டிக்கெட் இருந்தது. நான் மட்டுமே என் இருக்கை எதுவென்று தெரியாமலும் டிக்கெட் இல்லாமலும் தவித்துக்கொண்டிருந்தேன்.

சாயியை ஷீர்டி சென்று தரிசிப்பேனா என்று கவலை ஏற்பட்டது. அப்போது ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படிப் பதற்றமாக இருக்கிறீர்கள்? என்ன பிரச்னை? " என்று கேட்டார். நான் என் நிலைமையைச் சொன்னேன். "கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று சொல்லிவிட்டு குழுத்தலைவரின் செல்போன் எண்ணை வாங்கி உடனே பேசினார்.

நடைமேடை அருகே வந்துவிட்டதாகவும் ரயிலில் ஏறி அமர்ந்திருக்குமாறும் சொல்ல நான் ரயிலில் ஏறினேன். ரயில் புறப்படவும் குழுவின் தலைவர் பெட்டியில் ஏறவும் சரியாக இருந்தது. எனக்கு உயிரே வந்தது. ஷீர்டி சென்று சேர்ந்தோம். நல்ல தரிசனம் கிடைத்தது. எனக்கு உதவிய அந்த நல்ல உள்ளத்தை ஷீர்டியில் மீண்டும் கண்டேன். எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. அவருக்கு நன்றி கூறினேன். அப்போது எனக்குத் தோன்றிய விஷயம் தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்பதுதான். எல்லாம் சாயியின் கருணை. அதன் பின் என் வாழ்வில் தேவையில்லாத பதற்றம் அனைத்தையும் சாயியிடம் விட்டுவிட்டேன். ஓம் ஶ்ரீசாயிராம்!

-வஸந்தா வேணுகோபால், சென்னை- 24

ஷீர்டி சென்றேன் 
சிந்தை மகிழ்ந்தேன்!

சாயி அருள் இருந்தால் சகலமும் சாத்தியமே!

நான் சாதாரண குடும்பத்தலைவி. என் குடும்பத்தில் சகலமும் சாயிதான். எங்களுக்கு வந்த ஆபத்தைத் தடுத்துக் காத்தவர் அந்த சாயிநாதன் என்று உறுதியாக நம்புகிறேன். என் மகன் விஷயத்தில் சாயி கருணை புரியவேண்டும் என்கிற கவலை ஒரு நாள் எனக்கு வந்தது. காரணம் அவன் பி.எஸ்ஸி படித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் கொஞ்சம் பொறுப்பில்லா மல் இருக்கிறானோ என்கிற சந்தேகம் இருந்தது.

அவன் லட்சியம் நல்ல வங்கிப்பணியில் சேர வேண்டும் என்பதுதான். ஆனால் பொறுப்பில்லாமல் இருந்தால் அது எப்படி சாத்தியமாகும்? நம் முயற்சி எதுவானாலும் தெய்வத்தின் அனுக்கிரகமும் வேண்டுமல்லவா... அதனால் சாயிநாதனைச் சரணடைந்தேன்.

தொடர்ந்து ஒன்பது வாரம் வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயம் சாயியின் கருணை கிடைக்கும் என்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன். தொடர்ந்து விரதம் இருக்க ஆரம்பித்தேன். `சாயி என் மகன் வாழ்வில் மிகவும் கடை நிலையில் இருக்கிறான். அவனை முன்னேற்றி மேலே கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு' என்று வேண்டிக்கொண்டேன். ஒன்பது வார விரத காலத்திலும் எங்கள் வீட்டில் பல்வேறு அதிசயங்கள் நடந்தன.

அவற்றில் ஒன்று சுவாரஸ்யமானது. என் கணவர் மிகவும் பயந்த சுபாவம். பல்லியைக் கண்டாலே பயப்படுவார். ஒருநாள் இரவு வீட்டுக்கதவை சாத்தச் சென்றவர் அப்படியே நின்றுவிட்டார். காரணம் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து வீட்டுக்குள் வர முயன்று கொண்டிருந்தது. நான் கொஞ்சம் தூரம் தள்ளி நிற்கிறேன். அந்தக் காட்சியைக் கண்டதும் என் சப்த நாடியும் ஒடுக்கிவிட்டது. `சாயிநாதா காப்பாற்று' என்று மனதுக்குள் வேண்டினேன்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக என் கணவர் அருகே இருந்த ஒரு துடைப்பம் (மிகச் சிறியது) அதை எடுத்து பாம்பின் தலையில் ஒரு அடி போட்டு அதன் தலையை அசையாதபடி அமுக்கிப் பிடித்தார். என்னால் நம்பவே முடியவில்லை. பல்லிக்கு பயப்படுபவரா இதைச் செய்தார் என்று ஆச்சர்யமானது. சிறிது நேரத்தில் அதை விடுவிக்க அது வெளியே ஓடி மறைந்தது. நிச்சயம் இது மனிதச் செயல் அல்ல. அந்த பாபாதான் என் கணவர் மூலம் இதைச் செய்தார் என்று நம்பினேன். இப்படிப் பல அற்புதங்கள் நடந்தன.

என் மகன் பி.எஸ்ஸி நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது எம்.எஸ்ஸி படிக்கிறான். இதிலும் சாயியின் அருளால் நல்ல மதிப்பெண் பெற்று வங்கிப் பணியிலும் இணைவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அனைத்தை யும் நிகழ்த்துபவர் அந்த சாயிதானே!

-ஆனந்தவல்லி, ஊத்துக்குளி