
ஷீர்டி ஶ்ரீசாயிபாபா வாழ்வும் சில அற்புதங்களும்
பாபாவின் ஆணையால் பெருமழை நின்றது!
ஷீர்டி ஶ்ரீசாயிபாபா கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அவதரித்தவர். வேண்டிய வரங்களை வேண்டியபடி அருளும் கருணைக்கடல் ஷீர்டிநாதன் சாயிபாபா. பஞ்சபூதங்களும் அவரின் ஆணைக்குக் கட்டுப்படும். இதை உணர்த்தும் ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ஷீர்டியீல் பலத்தப் புயல் காற்றுடன் பெருமழை பெய்தது. ஊரே வெள்ளக்காடாக மாறியது!

ஷீர்டி மக்கள் மசூதியில் தஞ்சம் புகுந்தனர். பாபாவின் பாதார விந்தங்களைப் பணிந்தனர். தங்களை இயற்கையின் சீற்றத்திலிருந்து காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் துயரம் பாபாவின் உள்ளத்தை உருக்கியது. உடனே மசூதியில் இருந்து வெளியே வந்து, ‘‘நிறுத்து... உன் சீற்றத்தை உடனே நிறுத்து!’’ என்று இடி முழக்கம் செய்தார். அடுத்த கணமே, புயலும் மழையும் குறைந்தன. மேகங்கள் கலைந்தன. விண்ணில் வெண்ணிலவு உதயமாயிற்று. பாபாவின் உன்னத லீலையையும் அவரது அருள் உள்ளத்தையும் வாழ்த்தியவாறு மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குத் திரும்பினர்!
ஊதுவத்தி சாம்பல்...
நாசிக் நகரைச் சேர்ந்த நாராயண் மோதிராம்ஜனி என்ற அடியவரின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. தேள் கொட்டிய இடத்தில் உதியைத் தடவினால் குணம் ஏற்படும் என்பதால் நாராயண், உதியைத் தேடினார். சோதனையாக, உதி வைத்திருந்த இடம் நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை.
பாபா படத்தின் முன்னால் நின்று, அவரது திருப்பெயரை உருக்கத்துடன் உச்சரித்து, உதவி புரியுமாறு வேண்டினார். அப்போது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அங்கிருந்த ஊதுபத்தியின் சாம்பலைச் சற்றுத் திரட்டி எடுத்தார். அதையே பாபாவின் உதியாக நினைத்துக் கொண்டு உறுதியான நம்பிக்கையுடன் தேள் கொட்டிய இடத்தில் தடவினார். நம்பிக்கை வீண் போகவில்லை. மெதுவாக வலி குறைந்து, காணாமல்போனது!
பாபா உபயோகித்த அடுப்பு!
ஷீர்டி துவாரகாமாயீயின் கூடத்தில் பாபா உபயோகித்த அடுப்பு உள்ளது. பாபா, தானே சந்தைக்குச் சென்று தனக்கு பக்தர்களால் கொடுக்கப்பட்ட தட்சிணையில், உணவு சமைப்பதற்குத் தேவையான பண்டங்களை வாங்கி வருவார். எவருடைய உதவியையும் நாடாமல் தானே சுவையாகச் சமைத்து ஏழைகளுக்கு உணவு அளிப்பார். தனக்கு உண்ண நான்கைந்து வீடுகளில் பிக்ஷை எடுப்பார். பாபாவின் கருணையால் இந்த அடுப்பை தரிசிப்பவர்களின் வீட்டில் உணவுக் குப் பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை!
தட்சிணைப் பணம்... என்ன செய்வார்?
சாயிபாபா தமக்கு தட்சிணையாக வரும் பணத்தின் பெரும் பகுதியை தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தினார். மீதி இருக்கும் பணத்தைக் கொண்டு துனியில் எரிப்பதற்காக விறகு வாங்கினார். அந்த நெருப்பில் உருவான சாம்பலே உதியாகும். அன்பர்களின் தட்சிணைப் பணம் உதியாக உரு மாறி உன்னதத் தன்மை பெற்று, அவர்களுக்கு மட்டுமன்றி உலகத்தார் அனைவருக்கும் உயரிய அருட்பிரசாதமாக அமைந்தது பெரும்பேறாகும்.

சக்கி இயந்திரம்
இதில் பாபா கோதுமையை அரைப்பது வழக்கம். ஒரு முறை பாபா கோதுமையை அரைத்து, அந்த மாவை ஷீர்டி எல்லைக்கு வெளியே கொட்டி ஷீர்டிக்குள் காலரா வராமல் தடுத்தார். நம் கர்ம வினைகளை அழிப்பதுதான், பாபா இயந்திரத்தில் கோதுமை அரைப்பதன் உண்மையான உட்பொருள் என்கிறார்கள்.
நோய் தீர்க்கும் தூண்!
துவாரகாமாயீயில் பாபா உபயோகித்த அடுப்புக்கு அருகில் மரத் தூண் ஒன்று உள்ளது. பாபா இதன் மேல் சாய்ந்து கொண்டுதான் உணவு சமைப்பார். பாபா இந்தத் தூணைச் சுற்றி வலம் வருவதும் வழக்கம். உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்தத் தூணின் மீது சாய்ந்துகொண்டால், உடல் வலி நீங்கப் பெறுவார்கள்.
ஆனால், இந்தத் தூணை எக்காலத்துக்கும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தற்போது இந்தத் தூணின் மீது சாய்ந்து கொள்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என்கிறார்கள். அதனால் என்ன... இந்தத் தூணை தரிசித்தாலே போதும்; உடல் உபாதைகள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!
பாபா கேட்ட பதினைந்து ரூபாய்!
ஒருமுறை பக்தரான பேராசிரியர் நரகேயிடம் 15 ரூபாய் தட்சிணை கேட்டார் பாபா. அப்போது அந்தப் பக்தரிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. `பாபா கேட்டு இல்லை என்று சொல்லும்படி ஆகிவிட்டதே’ என்று அவர் வருந்தினார். நரகேயின் முகவாட்டத்தைக் கண்ட அவர், “உன்னிடம் பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு அது தேவையும் இல்லை. ‘பணம்’ என்று நான் குறிப்பிட்டது விலை மதிப்பில்லாத பண்பு நலத்தையே. நீ ‘யோக வாசிஷ்டம்’ படித்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அந்த உயர்ந்த நீதி நூலின் நெறிகளை உணர்ந்து உன் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டால், அதுவே உன் மனத்தில் வாசம் செய்யும் எனக்குத் தரும் தட்சிணையாகும்” என்றார் பாபா.
தூனி பூஜை
தூனி என்ற வடமொழிச் சொல்லுக்கு, ‘துறவிகள் வளர்க்கும் கணப்புத் தீ’ என்று பொருள். ஷீர்டியில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும் தூனி பூஜை செய்கிறார்கள்.
தூனி பூஜை எளிமையானது. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி, இனிப்பு, கட்டை என்று ஏதாவது ஒன்றை தூனியில் இடுவதே தூனி பூஜை. தூனி பூஜைக்குத் தேவையான பொருட்கள் துவாரகாமாயீயின் வாசலிலேயே கிடைக்கும். ஒருவர் தூனி பூஜையை நிறைவேற்றியதும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

ஊஞ்சலில் தீபங்கள்!
ஒருமுறை, நானா சாகெப் டேங்கலே என்பவர், பாபா உறங்குவதற்காக ஒரு பலகையைக் கொண்டு வந்து கொடுத் தார். அது நான்கு முழ நீளமும், ஒரு முழ அகலமும் கொண்டது. பாபா அந்தப் பலகையைத் தரை மீது கிடத்தி அதன் மீது உறங்குவார் என்று அவர் நினைத்தார்.
ஆனால், பாபா அந்தப் பலகையை நைந்து போன மெல்லிய கந்தல் துணிகளால் மசூதியின் உத்தரங்களில் ஊஞ்சல் போலக் கட்டி அதன் மீது உறங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
எந்த நேரத்திலும் அறுந்துவிடும் போல் தோற்றமளித்த கந்தல் துணிகள் அந்தப் பலகையைத் தாங்கியதே ஓர் அதிசயம். அதிலும் அது பலகையையும் தாங்கி, பாபாவையும் தாங்கியது அதிசயத்திலும் அதிசயம்தான்! அதன் நான்கு புறங்களிலும் மூலைக்கு ஒரு மண் விளக்கு ஏற்றி வைப்பார் பாபா. சுடர்விட்டு எரியும் விளக்குகளின் நடுவே ஊஞ்சல் பலகையில் பாபா அமர்ந்து இருப்பதையோ, துயில் கொள்வ தையோ தரிசனம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள். ஆனால், பாபா அந்தப் பலகையின் மீது ஏறுவதையோ அல்லது கீழே இறங்குவதையோ காண முடியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலால் பலர் விழிப்புடன் கவனிக்கத் தொடங்கினர். அந்த முயற்சி யில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. ஒருநாள் பாபா ஊஞ்சல் பலகையைத் துண்டு துண்டாக உடைத்து எறிந்து இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்தினார்.
மூன்று விஷயங்கள்
உணவு விஷயத்தில் பாபா மூன்று முக்கியமான விஷயங்களைக் கடைப்பிடித்து வந்தார்.
யார் வீட்டிலும் எப்போதும் உணவு உட்கொள்ள மாட்டார்.
தனக்காக மட்டுமே என்று அவர் எப்போதும் சமைத்துக்கொள்ள மாட்டார்.
அடுத்த வேளைக்கு என்று எதையும் மிச்சம் வைக்கமாட்டார்.
ராமனின் உருவாய் பாபா!
வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் ஷீர்டிக்குச் செல்ல விரும்பினார். தன் நண்பரான மருத்துவரையும் உடன் வரும்படி அழைத்தார். அவரோ ராம பக்தர். எனவே, ``ராமரை வணங்கும் நான் பாபாவை வணங்க விரும்பவில்லை’’ என்று கூறி மறுத்தார்.
வருவாய்த்துறை அதிகாரியோ, ``நீங்கள் பாவை வணங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. உங்களை எவரும் வற்புறுத்த மாட்டார்கள். எங்கு போனாலும் நாம் சேர்ந்தே பயணிப்போம். அதுபோல் இப்போதும் என்னுடன் நீங்கள் வந்தால் போதும்’’ என்றார். மருத்துவரும் ஒப்புக்கொண்டார்.
இருவரும் பாபாவின் தரிசனத்துக்காக மசூதிக்குச் சென்றனர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மருத்துவர் எல்லோருக்கும் முந்திச் சென்று பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கினார். நண்பர் வியப்புடன் காரணம் கேட்டார். “என் ராமனே அந்த ஆசனத்தில் வீற்றிருக்கக் கண்டேன். அதனால் பணிந்து வணங்கினேன். மீண்டும் நோக்கும்போது அங்கே பாபா இருந்தார். ஆக ராமன் வேறு; பாபா வேறு அல்ல என்பதை உணர்ந்துகொண்டேன்’’ என்றார்.
`நிலக்கடலை மருந்து!’
காகா மகாஜனி என்பவர் ஷீர்டி மசூதியில் தாழ்வாரம் கட்டும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டார். ஆனால், அவர் பாபாவிடம் தனது பிரச்னையைத் தெரிவிக்கவில்லை. ‘பாபா தானாகவே அதை அறிந்து கண்டிப்பாகக் குணப்படுத்திவிடுவார்’ என்று அவர் நம்பினார். வேலையின்போது, திடீரென்று பாபா பெருங்குரலில் கூச்சலிட்டார். அனைவரும் அங்குமிங்கும் கண்டபடி ஓடத் தொடங்கினர். அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு பையைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்தப் பையில் நிலக் கடலைப் பருப்பு இருந்தது. பாபா தன் கைநிறைய நிலக்கடலையை எடுத்தார். அவற்றைத் தேய்த்து, ஊதித் தோலை நீக்கினார். சுத்தம் செய்யப்பட்ட அந்தக் கடலையை அவர் காகாவிடம் தந்து சாப்பிடச் சொன்னார். தானும் கொஞ்சம் சாப்பிட்டார்.
காகாவைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறிது குடித்தார்; காகாவையும் குடிக்கச் சொன்னார். பிறகு, “உனது வயிற்றுப்போக்கு சரியாகி விட்டது. நீ போய் உன் வேலையைத் தொடர்ந்து கவனிக்கலாம்” என்று உறுதிபடக் கூறினார். ஆம், பாபாவின் அருளால் காகா மகாஜனியின் வயிற்றுப்போக்கு குணமானது.

குழந்தையைக் காப்பாற்றிய பாபா!
ஒருமுறை துவாரகாமாயீயில் தூனிக்கு அருகில் அமர்ந்திருந்தார் பாபா. தூனியில் விறகுக் கட்டைகளை நுழைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று தன் கைகளை நெருப்புக்குள் விட்டார். அருகில் இருந்த வர்கள் பாய்ந்து வந்து பாபாவைப் பின்னால் இழுத்தனர். பின்னர் அதற்கான காரணத்தை அவரிடமே கேட்டு விளக்கம் பெற்றனர்.
பாபாவின் பக்தனான கொல்லன் ஒருவன் எங்கோ தொலை தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி, கணவனுக்கு உதவியாக இருந்தாள். கணவன் அழைத்ததும், இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக எழுந்து ஓடினாள். இந்தக் களேபரத்தில் குழந்தை தவறி உலைக் களத்தில் விழுந்தது. அந்தக் குழந்தையைக் காப்பாற்றவே பாபா, நெருப்பில் கைகளை விட்டிருக்கிறார். குழந்தை காப்பாற்றப்பட்டது! இந்தச் சம்பவம் பாபாவின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும், அவரது கருணை உள்ளத்தையும் எடுத்துக் காட்டியது.
பல்லி சகுனம்!
அ ன்பர் ஒருவர் துவாரகாமாயீயில் பாபாவின் முன் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பல்லி சத்தம் எழுப்பியது. அதற்கான பலன் நன்மையா கெடுதியா என்று பாபாவிடம் கேட்டார்.
``இரண்டுமே இல்லை. பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஒளரங்காபாத்தில் இருந்து வரப் போவதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் விளைவே அந்தச் சத்தம்!’’ என்று விளக்கினார் பாபா.
அந்த விளக்கம் வேடிக்கையாக இருந்த தால் அன்பர் எதுவும் கூறத் தோன்றாமல் அமைதியாக இருந்தார். சற்று நேரத்தில் பாபாவைப் பார்க்க ஒரு பக்தர் ஒளரங்காபாத்தில் இருந்து குதிரையில் வந்தார்.
தரிசனம் முடிந்ததும் குதிரைக்குக் கொள்ளு வைக்க பையைக் கையில் எடுத்தார். அப்போது அதிலிருந்த விழுந்த பல்லி ஒன்று சுவரில் ஏறிச் சென்றது. அங்கு ஏற்கெனவே இருந்த பல்லி இதைக் கண்டதும் உற்சாகம் கொண்டது. இரண்டும் ஓடி விளையாடத் தொடங்கின! மிகச் சிறிய உயிரினமான பல்லியைப் பற்றியே தீர்க்க தரிசனம் கொண்ட பாபா, தன்னைச் சரணடையும் அன்பர்களின் பிரச்னை களை முன்கூட்டியே அறிந்து காத்து அருள்வதில் வியப்பு ஏதும் இல்லைதான்!
பாபாவின் வண்ணப் படம்!
துவாரகாமாயீயில் அமர்ந்த நிலையில் இருக்கும் பாபா வின் வண்ணப்படம் ஒன்று உண்டு. பிரபல ஓவியர் ஷாமாராவ்ஜெயகர் வரைந்த இந்தப் படத்தை பாபாவே தன் கைப்பட வாங்கி துவாரகா மாயீயில் வைத்தார். படத்தில் பாபாவின் கண்களில் அருள் நிறைந்து காணப்படுகிறது. அங்கு வரும் ஒவ்வொரு பக்தரையும், ஒரு தாய் தன் குழந்தையைப் பாசத்தோடு அழைப்பதைப் போல அன்புடன் அந்தப் பார்வை அழைக்கிறது.
பாபா சொன்ன சிகிச்சை!
பாபாவின் பக்தர்களில் ஒருவரான பாலா கண்பத் சிம்பி என்பவர், மிகக் கொடிய மலேரியா நோயால் துன்பப்பட்டார். மருத்துவத்தால் பயன் இல்லாத நிலையில், பாபாவைச் சரணடைந்தார்.
பாபா அவருக்கு ஒரு புதுமையான வைத்தியத்தைக் கூறினார். கொஞ்சம் சாதத்தைத் தயிருடன் கலந்து, ஷீர்டியில் இருக்கும் லட்சுமி கோயிலுக்கு முன்னால் உள்ள கறுப்பு நாய்க்குக் கொடுக்கும்படி கூறினார். இந்த வைத்திய முறை அந்தப் பக்தருக்கு விந்தையாகத் தோன்றியது. எனினும் பாபாவின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினார். வீட்டுக்குச் சென்று தயிர்சாதம் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயிலுக்குச் சென்றார்.
அங்கே ஒரு கறுப்பு நாய் வாலை ஆட்டிக் கொண்டு நிற்பதைக் கண்டார். பாபா சொன்னபடியே அனைத்தும் நிகழ்வதைக் கண்ட பாலா கண்பத், அந்த நாய்க்கு தயிர்சாதத்தை உண்ணக் கொடுத்தார்; கொடும் நோயிலிருந்து விடுபட்டார்.

பசி யாருக்கு?
லட்சுமிபாய் என்ற பெண்மணி பாபாவின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள். ஒரு நாள் பாபா, தான் பசியுடன் இருப்பதாக அவளிடம் கூறினார். உடனே லட்சுமிபாய், அவசர அவசரமாக ரொட்டி தயாரித்து எடுத்துவந்தாள். பாபா அதை அங்கிருந்த நாய்க்கு அன்புடன் அளித்தார். அவர் உண்ணாதது குறித்து லட்சுமிபாய்க்கு வருத்தம். அவளிடம் பாபா, “நாயின் பசியைப் போக்குவது எனது பசியைப் போக்குவது போன்றதே!” என்று கூறித் தேற்றினார்.
மண் பாண்டம்!
கோலம்பா என்பது ஒரு மண் பாண்டம். பாபா பிக்ஷை எடுத்த உணவை இந்தப் பாண்டத்தில் வைத்துத் தானும் உண்டு, நாய்கள், பூனைகள், பசுக்கள் போன்ற ஜீவராசிகளுக்கும் அன்புடன் உண்ணக் கொடுப்பார்.
பாபாவின் சமையல்!
பாபா சமைப்பதற்கு இரண்டு விதமான ஹண்டிகளை உபயோகப் படுத்தினார். ஒன்று சிறியது. ஐம்பது பேருக்கான உணவைச் சமைக்கக் கூடியது. மற்றொன்று நூறு பேருக்கான உணவைச் சமைக்கக் கூடிய அளவுக்குப் பெரியது. சில நேரம் அவர் சர்க்கரைப் பொங்கலைச் சமைப்பார். மற்றும் சில நேரம் புலவு சமைப்பார். இன்னும் சில நேரம் வரண் என்று அழைக்கப்படும் பருப்பு சூப் தயாரிப்பதும் உண்டு. இவை போதாதென்று ஜவ்வரிசி மாவைத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதைத் தயிருடன் கலந்து அம்பீல் என்னும் உணவையும் தயாரிப்பார். மற்ற உணவு வகைகளுடன் இந்த அம்பீலையும் அனைவருக்கும் ஒரேமாதிரியாக விநியோகிப்பார்.
குதிரையின் சிலை
குதிரை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் இருந்த பெண் குதிரை ஒன்றுக்கு வெகு நாட்கள் வரை குட்டிகள் இல்லை. பாபாவின் அருளால் அந்தக் குதிரைக்குப் பல குட்டிகள் பிறந்தன. முதல் குட்டியை பாபாவுக்கு அன்பளிப்பாக அளித்தார் வியாபாரி. பாபா அந்தக் குதிரைக்கு `ஷ்யாம் சுந்தர்’ என்று பெயர் சூட்டினார்.
ஷ்யாம் சுந்தர் பாபாவுடன் துவாரகாமாயீயில் கிழக்குத் திசையில் உள்ள அறையில் இருக்கும். பாபாவுக்கு ஆரத்தி நடைபெறும்போது பாபாவின் எதிரில் ஷ்யாம் சுந்தர் நிற்கும். ஆரத்தி முடிந்ததும் அது பக்தியுடன் பாபாவைத் தலைவணங்கும். பாபா முதலில் ஷ்யாம் சுந்தருக்கு உதியை இட்டு விடுவார். அதன் பிறகே மற்ற பக்தர்களுக்கு உதியை அளிப்பார். சாவடி ஊர்வலத்திலும் கம்பீரமாகக் கலந்துகொள்ளும். இந்தக் குதிரை முக்திபெற்ற பின்னர், சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தச் சிலை, துவாரகாமாயீயில் பாபா அமரும் கல்லுக்கு வடக்குத் திசையில் நிறுவப்பட்டுள்ளது.