Published:Updated:

ஶ்ரீ சாயி சிறப்புக் கட்டுரைப் போட்டி !

ஶ்ரீ சாயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீ சாயி

வாசகர்களின் அனுபவங்கள்

ஶ்ரீ சாயி சிறப்புக் கட்டுரைப் போட்டி !

வாசகர்களின் அனுபவங்கள்

Published:Updated:
ஶ்ரீ சாயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீ சாயி

தாய்போல் காக்கும் சாயி!

நான்கு வருடங்களுக்கு முன்பு என் தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சர்க்கரை நோயினால் அவரின் கால்கள் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கை அளிக்கவில்லை. ஆனால் என் குரு, தெய்வம், தோழன் சாயி என்னோடு எப்போதும் இருந்து என்னைக் காப்பவர். அந்த நம்பிக்கை மட்டும் நெஞ்சோடு இருந்தது. மனமுருகி வேண்டிக்கொண்டேன். பாபாவின் அஷ்டோத்திரம், பாபா சரிதம் விடாமல் படித்தேன். சாயி தன் கருணையை என் தாய் மீது வைத்தார். தாயார் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்றுக் குணமடைந்தார். இதுபோன்று சாயியிடம் நான் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். ஒரு தாய் எப்படி உரிமையுடன் தன் சேய்க்கு உதவுவாரோ அவ்வாறு பக்தர்க்கு உதவும் பரம தயாளன் சாயி. அவர் பாதத்தைப் பிடித்துக் கொண்டால் சகல துன்பங்களையும் கடந்து வென்று விடலாம்.

-தி.நளினி, சென்னை-2

மாற்ற முடியாததையும் மாற்றுவார் சாயி!

2020-ல் நான் என் கணவருடன் என் மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந் தேன். ஆறு மாதங்கள் இருந்துவிட்டு 2021-ல் இந்தியா திரும்பத் திட்டமிட்டோம். எங்களுக்கு பிலடெல்பியாவில் இருந்து விமானம். பிலடெல்பியா செல்வதற்கு நாங்கள் `சார்லட்' என்ற இடத்திலிருந்து விமானம் பிடித்துச் செல்ல வேண்டும். சார்லெட்டிலிருந்து புறப்பட்டு பிலடெல்பியா சென்று சேரும் விமானம் தாமதமானது.

விமானம் சரியான நேரத்தில் சேர்ந்தால்தான் உண்டு. பிலடெல்பியா விலிருந்து கிளம்பும் விமானம் `தோஹா' வந்து அங்கிருந்து இந்தியா வரும். அந்த விமானத்தைத் தவறவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றம் உருவானது. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஆனால் எங்கள் விமானம் புறப்படுவதற்கான அழைப்பு வரவேயில்லை. விமானம் 45 நிமிட தாமதம். நிச்சயம் பிலடெல்பியா விமானத்தைத் தவற விட்டுவிடுவோம் என்ற பயந்தோம். எப்போதும் பையிலேயே இருக்கும் ஶ்ரீசாயி பாபாவின் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு வேண்டி பிரார்த்திக்கத் தொடங்கினோம்.

அடுத்த சில நிமிடங்களில் விமானம் புறப்படுவதற்கான அழைப்பு விடுத்தார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டோம். அப்போது ஓர் அறிவிப்பு வெளியானது. விமானம் தற்போது மாற்றுப்பாதையில் பயணிக்க இருப்பதாகவும், இதனால் ஏற்கெனவே குறித்த நேரத்துக்கு விமானம் பிலடெல்பியா சென்றுவிடும் என்றும் கூறினார்கள். அப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சரியான நேரத்தில் பிலடெல்பியா வந்து பயணத்தை சரியாகத் தொடர்ந்தோம். சாயி பாபாவின் துணையிருந்தால் அனைத்தும் சாதகமாக மாறும். மாற்ற இயலாத அனைத்தையும் மாற்றும் வல்லமை பிறக்கும் என்பதை நாங்கள் அறிந்துகொண்ட தினம் அன்று!

-சித்ரா நாகராஜன், புதுச்சேரி

பரிகாரங்கள் செய்யாததை பாபா செய்தார்!

நான் ஓய்வுபெற்ற சித்த மருத்துவர். என் மனைவி ஆசிரியை. எங்களுக்கு ஒரு மகன். அவன் கனடாவில் பொறியியல் வல்லுநராக இருக்கிறான். பல லட்சம் சம்பளம். ஆனால் எங்களுக்கு ஒரு குறை. அவனுக்கு உரிய மணமகள் அமையவேயில்லை. பரிகாரங்கள் பல செய்தும் எதுவும் நடக்கவில்லை. ஒருமுறை எங்கள் குடும்ப நண்பர் ஒருவரிடம் இதைச் சொல்லி முறையிட்டோம். அவர் எங்கள் கையில் சாயி சத்சரிதத்தைக் கொடுத்து `இதைப் படித்துவாருங்கள்' என்றார். நாங்களும் நம்பிக்கையோடு அதைப் படிக்க ஆரம்பித்தோம். ஒரு வியாழக்கிழமை தொடங்கிய பாராயணம் மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. விரைவிலேயே முழு நூலையும் படித்து முடித்தோம். எங்கள் இருவருக்கும் ஷீர்டி செல்லும் எண்ணம் தோன்றியது. ஷீர்டி சென்று அந்த மகானின் மகாசமாதியை தரிசனம் செய்து, `சாயி நீங்கள்தான் எங்கள் இல்லம் தேடி வந்து என் மகனின் திருமணத்தை நடத்தித் தரவேண்டும்' என்று வேண்டிக்கொண்டோம்.

நாங்கள் ஷீர்டியிலிருந்து திரும்பி வந்த மறுநாள் எங்கள் வீட்டுக்கு ஒரு அன்பர் வந்தார். அவர் எங்கள் மகன் குறித்து விசாரித்துவிட்டு, ஒரு பெண்ணின் ஜாதகத்தைத் தந்தார். தான் அந்தப் பெண்ணின் மாமன் எனவும் விரும்பினால் விரைவில் திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றும் தெரிவித்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதுநாள் வரை அப்படி யாரும் உரிமையாக வந்து ஜாதகம் கொடுத்ததும் பேசியதும் இல்லை. தகவலைக் கனடாவில் இருக்கும் மகனுடம் பகிர்ந்துகொண்டோம். மறுவாரமே அவன் இந்தியா வந்தான். பெண் பார்க்கச் சென்றோம். பெண்ணுக்கும் என் மகனைப் பிடித்துப்போக, திருமண ஏற்பாடுகளைப் பேசி அடுத்துவந்த ஆவணி முகூர்த்தத்திலேயே திருமணம் செய்துவைத்தோம். இது சாயிநாதர் நிகழ்த்திய அற்புதமே!
ஓம் சாயிராம்1

- சிவ.வெ.தியாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism