ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

எளியவள் எனக்கு எல்லாமே சிவன் சார்தான்!

சிவன்சார் சந்நிதியில்
ஜெயந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன்சார் சந்நிதியில் ஜெயந்தி

சிவன்சார் அற்புதங்கள் - வாசகியின் அனுபவம்!

சென்னை - கந்தன்சாவடியில் சிவசாகரம் அமைந்திருக்கும் காலனியில், பல வீடுகளில் உதவியாளராகப் பணியாற்றுபவர் ஜெயந்தி. கல்வி அறிவு, உலக ஞானம் அதிகம் இல்லா விட்டாலும், சிவசாகரத்தில் வேலை செய்வதால் ‘சிவன் சாரே எல்லாம்’ என்று முழுமையாக அவரிடம் சரணாகதி அடைந்திருப்பவர்.

எளியவள் எனக்கு 
எல்லாமே சிவன் சார்தான்!
Jerome K

“எங்களுக்குச் சொந்த ஊர் மதுரை பக்கம் மேலூர். அப்பா சென் னைக்கு வாட்ச்மேன் வேலைக்கு வந்ததால், நாங்களும் இங்கேயே வந்துட்டோம். நான் அப்பா, அம்மாகூடதான் இருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. இந்தக் காலனியில் ஏழெட்டு வீடுகளில் வேலை செய்றேன். அதில் ‘சார்’ வீடும் ஒண்ணு.

சிவசாகரத்தில் 13 வருஷமா வேலை செய்றேன். அங்கே நடக்கும் பூஜைக்கு நிறைய பேர் வருவாங்க. சார் பற்றிப் பேசுவாங்க. முதல்ல எல்லாம் எனக்கு எதுவும் புரியாது. சாரைப் பற்றியும் எதுவும் தெரியாது. ஒரு ஒன்றரை மாசம் போன பிறகுதான், அங்கே வர்றவங்க மூலமாகத்தான் காஞ்சி மகாபெரிய வரின் தம்பிதான் சிவன் சார்னு தெரிஞ்சுக் கிட்டேன்.

நான் எட்டாவது வரைதாங்க படிச்சிருக்கேன். எனக்கு ஆன்மிகம் எல்லாம் ரொம்பத் தெரியாது. சாதாரணமா சாமி கும்பிடுவேன். வேற மகான்கள் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. ஆனா, சார் பற்றியும் அவருடைய கருணை பற்றியும் கேள்விப்பட்டதும், எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர்கிட்ட வேண்ட ஆரம்பிச்சேன். ஆச்சரியப்படுறா மாதிரி... ஒரு கஷ்டம்னு அவர்கிட்ட வேண்டினதும் அந்தக் கஷ்டம் பனி போல மறைஞ்சிடும். அதெல்லாம் எனக்கு ரொம்ப அதிசயமா இருந்தது.

வாழ்க்கையில் எந்த வசதியுமே இல்லாமல், ரொம்ப அடிபட்டு, கல்யாண வாழ்கை யிலும் படாத கஷ்டமெல்லாம் பட்டு வந்தவ நான். எனக்கு இப்போ கண்கண்ட தெய்வமாக இருக்கறது சார்தான். வேலைக்கு வந்ததும், அவருக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிட்டுத்தான் மறுவேலை. சாரை வேண்டிய பிறகுதான் எனக்குப் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. நான் கனவிலும் நினைச்சுப் பார்க்காத விஷயங்களை எல்லாம் அவர் நடத்திக் கொடுத்திருக்கார்.

எளியவள் எனக்கு 
எல்லாமே சிவன் சார்தான்!

ஒரு வருஷத்துக்கு முன்னால சின்னதா ஒரு இடம் வாங்கலாம்னு முடிவு பண்ணி, இடத்தைப் பார்த்து 1000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். கையில் காலணா காசு இல்லை. ‘எப்படியாவது தேத்திக் குடுத்துருவோம்’னு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அட்வான்ஸ் கொடுத்துட்டு, நேரா சார்கிட்டதான் வந்து சரணடைஞ்சேன்; அவரைத்தான் வேண்டினேன்.

என்ன அதிசயம்... நான் கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைச்சுது. எப்படியோ பணத்தைத் திரட்டி, அந்த இடத்தை வாங்கிப் பதிவும் செஞ்சிட்டோம். சத்தியமா சொல்றேன்... சார் அருள் இல்லன்னா இது நடந்திருக்கவே நடந்திருக்காது!

இந்தக் காலனியில் நிறைய வீடுங்க இருக்கு. நான் வேலை செய்ற வீடுகளில் யாராவது வேறு வீடு மாற்றிப் போய்ட் டாங்கன்னா, ஒரு ரெண்டு, மூணு நாள்தான் வேலை இல்லாம இருப்பேன். அதுக்கு அடுத்த நாளே வேற வீட்டில் வேலை கிடைச்சிடும். மற்ற வீடுகளில் வேலை செய்ற அக்காங்க எல்லாம் என்னைப் பார்த்து ஆச்சர்யப்படுவாங்க.

`உனக்கு மட்டும் எப்படி ஜெயந்தி உடனே வேலை கிடைச்சிடுது. எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி கிடைக்க மாட்டேங்குதே’ன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போவாங்க. எனக்கு மட்டும் என்ன தெரியும். எல்லாமே அவர்தானே பார்த்துக்கிறார். அவர்தான் எல்லாமே செய்றார்னு நான் நம்புறேன்.

சார்கிட்ட என் கவலைகளை ஒப்படைச் சிட்டா அவர் பார்த்துக்குவார். முன்னே எல்லாம் எனக்குச் சம்பளம் போதாது. இப்போ எனக்குப் போதுமான சம்பளம் கிடைக்குது. பசங்களைப் படிக்க வைக்கிறேன். குடும்பம் நல்ல நிலைமையில் இருக்கு. எதுனா ஒரு கஷ்டம்னா அவரிடம் `சார். என்னா சார் இப்படி?’ன்னு போய் நின்னால் போதும். அவர் அதைத் தீர்த்து வெச்சிடுவார். பல தடவை இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கேன்.

எளியவள் எனக்கு 
எல்லாமே சிவன் சார்தான்!

எங்க அம்மா உயிரைக் காப்பாத்தினது சார்தான். கொஞ்ச நாள் முன்னால அம்மாவுக் குத் திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு. அடையாரில் பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டோம். அபரேஷனுக்கு 4 லட்ச ரூபா செலவாகும்னு சொல்லி, பணத்தை ரெடி பண்ணச் சொல்லிட்டாங்க. மூச்சே நின்னு போச்சு எனக்கு.

வழக்கம்போல சார்கிட்டதான் அழுது வேண்டினேன். ஆஸ்பத்திரியில் அம்மாவைத் தனியா விட்டுட்டு சிவசாகரத்துக்கு வர முடியல. சிவராமன் அண்ணாவின் அக்காகிட்டே சொல்லி, ‘அக்கா, என்னால வர முடியல. ‘சார்’கிட்ட சொல்லுங்க’ன்னு போனில் அழுதேன்.

கொஞ்ச நேரத்தில் அம்மாவுக்கு வைத்தியம் பார்த்த பெரிய டாக்டர் கூப்பிட்டு ‘காப்பீட்டு கார்டு இருக்கா’ன்னு கேட்டார். அந்த அட்டை இருந்தால் செலவே இல்லாமல் அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணலாம்னும் சொன்னார்.

சென்னை அட்ரஸில் எங்களுக்கு எந்த கார்டும் இல்லை. ஏற்கெனவே இருந்த கார்டு வேற அட்ரஸில் இருந்த தால், இந்த அட்ரஸுக்கு மாற்ற முடியல. எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியாமல் விட்டுட்டோம். ஆனா சிவன் சார் அருளால். அந்தப் பெரிய டாக்டரே, காப்பீட்டு அட்டைக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எத்தனையோ அலைஞ்சும் முடியாத விஷயம் அன்னைக்கு ஒரே நாளில்... கார்டு அட்ரஸ் மாற்றி கைக்கு வந்துச்சு. அதை வெச்சு அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிட் டோம். இது நினைச்சே பார்க்க முடியாத அதிசயம் இல்லையா!

சாரைக் கும்பிட ஆரம்பிச்சதிலருந்து வீட்டில் பிரச்னைகள் சரியாச்சு. ஒண்ணா, ரெண்டா... பல விஷயங்கள் நடந்திருக்கு. சொல்லிக்கிட்டே போகலாம். என்னால் எதுவுமே இல்லை. சார்தான் வழிநடத்துறார். நான் ரொம்ப சாதாரணமான ஆள் மேடம். ஆனா என் மேலயும் கருணை காட்டி, எனக்கு எல்லாமாகவும் இருக்கிறது சார்தான்!” – விகல்பமில்லாத, வெகுளித்தனமான பக்தியாலும் சரணாகதியாலும் பிரமிக்க வைக்கிறார் ஜெயந்தி!