திருத்தலங்கள்
Published:Updated:

`கனவில் வந்தார் ஶ்ரீராகவேந்திரர்!'

ஶ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீராகவேந்திரர்

- மு.ராம்குமார் -

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி... ஒருகணம் மனதில் குரு ராயரை ஶ்ரீராகவேந்திரரை பக்தியோடு மனதில் வைத்துத் தியானித்தால் போதும்; அந்தப் பிரச்னை அடியோடு விலகிவிடும். குருவே சரணம் என்று அவரின் திருப்பாதங் களைப் பற்றிக் கொண்டால் போதும்; சகலமும் நல்லதாகவே நடக்கும். இதற்கு என் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களே சாட்சி

`கனவில் வந்தார் ஶ்ரீராகவேந்திரர்!'

நான் ஶ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தன். எனக்கு 18 வயது இருக்கும் போது நண்பன் ஒருவன் மூலம் ஶ்ரீராகவேந்திரரின் மகிமையைப் பற்றி அறிந்து வழிபடத் தொடங்கினேன். அப்போது நான் தபால் துறையில் புறநிலை ஊழியன்.

வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் உள்ள ஶ்ரீராகவேந்திரர் கோயிலுக்குத் தவறாமல் சென்றுவிடுவேன். அதேபோல் வியாழனன்று என் தாயார் வீடு சுத்தம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்துவைத்துவிடுவார். வீட்டிலும் வழிபடுவோம்.

2008-ல் என் தந்தையார் காலமானார். என்னால் அந்தத் துக்கத்தைத் தாங்க இயலவில்லை. எவரும் இல்லாமல் அனாதை ஆகிவிட்டது போன்று உணர்வு; மன அழுத்தம் மிகுந்தது. திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. ஶ்ரீராகவேந்திரரின் அருளால் மெள்ள மெள்ள பழைய நிலைக்குத் திரும்பினேன் என்றே சொல்லவேண்டும்.

நாள்கள் நகர்ந்தன. ஒரு வியாழக்கிழமை வழக்கம்போல் அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தேன். அப்போது அவர் ``உனக்கு நிறைய இடங்களில் இருந்து பெண்

கொடுக்க கேட்கிறார்கள். கல்யாணம் குறித்து யோசிக்கலாமே’’ என்றார்.

நானோ`எனக்குச் சம்பளம் இப்போது மூவாயிரம்தான். குடும்பம் நடத்த இது போதாது. இப்போது கல்யாணம் வேண்டாமே’’ என்றேன்.

உடனே என் தாயார், ``போன வாரம் வியாழக்கிழமை அதிகாலை இருக்கும். கனவு கண்டேன். கனவில் சாமியார் ஒருவர் வந்தார். உன் மகனின் பெயர் என்ன... வயதென்ன... என்றெல்லாம் கேட்டார். நானும் விவரம் சொன்னேன். உடனே அவர் `கவலைப்படாதே! இன்னும் இரண்டு வருடங்களில் பேரக்குழந்தையைக் கொஞ்சுவாய்.உன் மகனுக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும்’ என்று கூறிவிட்டு மறைந்துபோனார். நானும் விழித்துக்கொண்டேன்’’ என்றார். அத்துடன் கனவில் வந்த சாமியாரின் உருவ விவரங்களையும் அம்மா விவரித்தார்.

`கனவில் வந்தார் ஶ்ரீராகவேந்திரர்!'

அவர் கூறியதைக் கேட்டு நான் சிலிர்த்துப் போனேன். வந்தவர் சாட்சாத் ராகவேந்திரரேதான்.

``அம்மா! ராகவேந்திர சுவாமி கனவில் வந்து பேசுவார் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். உன் கனவிலும் அவர்தான் வந்திருக்கிறார். என் கணிப்பு சரியென்றால் ராகவேந்திரர் அருளால் இந்த வருடத்திலேயே எனக்குப் பதவி உயர்வு கிடைக்கும் உன் கனவும் நனவாகிவிடும்’’ என்றேன் அம்மாவிடம்.

உடனே அம்மா, ``கனவில் வந்தவர் திருமணம் குறித்துதான் கூறினார்; முதலில் ஆண்குழந்தை பிறக்கும் என்றும் சொன்னார். ஆனால், உத்தியோகம் பற்றி எதுவும் சொல்லவில்லையே’’ என்றார்.

``பதவி உயர்வு சம்பள உயர்வு இல்லாமல் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டேன் அம்மா. அவர் கூறியபடி திருமணம் நடக்கும் என்றால், நான் எதிர்பார்ப்பதும் நடக்கும் என்றே நினைக்கிறேன்’’ என்று நம்பிக்கையோடு பதில் சொன்னேன் நான்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். எங்கள் குடும்பம் பகுத்தறிவு சித்தாந்தத்தில் இருப்பது. ஜாதகம் - ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், நான் வணங்கும் தெய்வம் கனவில் வந்தார் என்பதை அறிந்தபிறகு, நானும் அவற்றில் நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.நம்பினோர் கைவிடப்படுவதில்லை அல்லவா?

பதவி உயர்வுக்கான தேர்வுக்காகப் படிக்கவும் ஆரம்பித்தேன். மூன்று மாதங்கள் கழித்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கோட்டா அடிப்படையில் எனக்கு வாய்ப்புள்ள பதவிக்கான காலியிடம் ஒன்றுதான் இருந்தது. நான் `என் ராகவேந்திரர் துணையிருப்பார்’ என்ற நம்பிக்கையோடு தேர்வு எழுதினேன்.

இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் `உங்களுக்கு ஏழரைச்சனி ஆரம்பம். பதவி உயர்வுக்கு வாய்ப்பு இல்லை. இப்போதுள்ள நிலையே தொடரும்’ என்றார். பின்னர் ஒருமுறை சுசீந்திரத்தைச் சேர்ந்த நாடிஜோதிடர் ஒருவரும் இதையே கூறினார். மனம் சோர்ந்தேன்; என் நம்பிக்கையும் சற்று தளர்ந்தது என்றே சொல்லலாம்.

`அம்மாவின் ஆசையும் நினைப்புமே அவருக்குக் கனவாக வந்தது போலும்’ என்றெல்லாம் எண்ணத் தோன்றியது எனக்கு. இந்த நிலையில் தேர்வு முடிவு வந்தது. 150-க்கு 147 மதிப்பெண் எடுத்து முதல் நிலையில் தேர்ச்சி பெற்றேன். நெல்லை ஐ.சி.பேட்டை அலுவலகத்தில் தபால்காரராகப் பணியில் சேர்ந்தேன். பெண்வீட்டார் தேடி வந்தார்கள். நல்லபடியே திருமணம் முடிந்தது. என் இல்லாள் ரேவதியைக் கைப்பிடித்தேன்.

எல்லாவற்றுக்கும் ராகவேந்திரரின் திருவருளே காரணம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

இந்தக் கனவை நானோ அம்மாவோ வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்நிலை

யில் என் மனைவி கருவுற்றாள். வளைகாப்பு நிகழ்வுக்கு வந்தவர்கள் எல் லோருமே பெண் குழந்தைதான் பிறக்கும் என்று ஆருடம் சொன்னார்கள். ஆனால், கனவில் சுவாமி சொன்னபடியே ஆண் குழந்தைதான் பிறந்தது!

அவனுக்கு நாங்கள் சூட்டிய பெயர் ராகவேந்திரன்!

ஆம்! கலியுகத்தின் துன்பங்களை எல்லாம் தீர்க்கும் கற்பக விருட்ச மாகப் பக்தர்கள் போற்றி வணங்கும் மகான் ஶ்ரீராகவேந்திரர். அவரின் திருவருள், நமக்கு எப்போதும் துணையிருக்கும்!