தொடர்கள்
Published:Updated:

அனைத்து செல்வங்களையும் அள்ளித் தரும் ஐஸ்வர்ய பாபா

ஐஸ்வர்ய பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்ய பாபா

பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொலிக்கும் காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்ப்பார்கள். ஆனந்தத் தால் நிரம்புவார்கள்.

`மகாலட்சுமியும் நானே குபேரனும் நானே.

சகல ஐஸ்வர்யங்களையும் நானே

உனக்கு அருளிச் செய்வேன்.

நம்பிக்கையோடு கேளுங்கள்;

பொறுமையோடு காத்திருங்கள்.

கேட்டது கிடைக்கும்; கிடைத்தது நிலைக்கும்!”

ஐஸ்வர்ய பாபா
ஐஸ்வர்ய பாபா


- இது பாபாவின் அருள்மொழிகள். அவரே மொழிந்த வார்த்தைகள். சத்தியமான வாக்கு! இதற்கு ‘ஶ்ரீசாயி சத்சரிதம்’ நூலே ஆதாரம்.

பாபாவை ஈஸ்வரனாகவும் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வரித்து வணங்குபவர்களுக்கு, அந்தந்த தெய்வமாகவே தோன்றி அருள் வழங்கி அற்புதங்கள் நிகழ்த்துபவர் அவர்.

அது மட்டுமல்ல; அனைத்து செல்வங்களையும் அள்ளி வழங்கும் அன்னை ஶ்ரீமகாலெட்சுமியாகவும் அவரை வணங்கலாம். பக்தர்கள் அவரை ஐஸ்வர்ய லட்சுமியாக பாவித்து, அலங்கரித்து வணங்கியதை ‘சத்சரிதம்’ விளக்கமாகக் கூறுகிறது.

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

ஶ்ரீசாயி சத்சரிதத்தில் ‘சாவடி ஊர்வலம்’ என்னும் அத்தியாயத்தில், பாபாவின் லட்சுமி சொரூபத்தை வாசித்து, உணர்ந்து, வணங்கலாம்.

துவாரகாமாயியில் இருந்து சாவடிக்குச் செல்லும் ஊர்வலம். அதற்கு முன்னர் பக்தர்கள் பாபாவை அலங்கரிக்கும் காட்சியை நாம் மனதில் கொண்டு வருவோம். பாபாவின் திருமுகத்தின் தேஜஸும், அதற்குப் பின் தோன்றும் ஒளிவட்டமும்... தாழம்பூவின் நடுப்பாகம் போல கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், அருணோதய நேரத்து வானம் போல அப்படி ஜொலிக்குமாம். அந்த அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது; நேரில் பார்த்துத்தான் அனுபவிக்க முடியும் என்கிறது சத்சரிதம்.

பாபா
பாபா

ஊர்வலத்தில் மஹால்ஸாபதி பாபாவின் கப்னியின் நுனியைப் பிடித்துக்கொண்டு அவருக்கு வலப்பக்கத்தில் நடந்து வருவார். பாபாவின் இடப்பக்கத்தில் தாத்ய கோதே பாடீல் ஒரு லாந்தரைக் கையில் பிடித்துக் கொண்டு வருவார். அந்த ஊர்வலம் ஓர் உற்சவம் போல அவ்வளவு விமர்சையானது; காண்பதற்கு அற்புதமானது! அந்தப் பிரேம பக்தி எவ்வளவு உன்னதமானது! அந்தக் கோலாகலத்தைக் காண்பதற்குச் சான்றோர்களும் செல்வர்களும் அங்கு ஒன்றுகூடுவர்.

பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொலிக்கும் காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்ப்பார்கள். ஆனந்தத்தால் நிரம்புவார்கள்.

இங்ஙனம் எல்லையற்ற பிரேமபக்தியாலும் இதயத்தை மூழ்கடிக்கும் ஆனந்தத்தாலும் நிரம்பியவர்களாய் அந்த மக்கள் இருமருங்கிலும் மெதுவாக ஊர்வலத்தில் நடப்பார்கள். போகும் வழியில் பக்கவாட்டில் திரும்பி, ஶ்ரீஅனுமாரைத் தரிசனம் செய்துவிட்டு, சில வார்த்தைகளை முணுமுணுப்பார் பாபா. ஆஞ்சநேயரைத் தன் சகோதரன் என்று அடிக்கடி பாபா கூறுவதுண்டு.

இவ்விதமாக, வாத்தியங்களின் இன்னிசைக் கும் அவ்வப்போது எழும் ஜயகோஷத்திற்கும் இடையே, பாபா சாவடியிலிருந்த ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். கோயில்களில் தெய்வங்களுக்குச் செய்யக்கூடிய உபசாரங்கள் அவருக்குச் செய்யப்பட்டன. தலைக்குமேல் வெள்ளைத் துணியொன்று விதானமாக (கூரை போன்ற விரித்து) கட்டப்படும். தொங்கும் சரக்கொத்து விளக்குகளும் சாதாரண விளக்குகளும் ஏற்றப்படும். பல இடங்களில் வைக்கப்பட்டிருக் கும் கண்ணாடிகளில் விளக்குகளின் ஒளி பிரதிபலிக்கும். அந்த ஒளியில் சாவடி பார்ப்பதற்கு ஜகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும்!

பக்தர்கள் ஒன்றுசேர்ந்து சாவடிக்குள் சென்று, பாபாவைக் கையைப் பிடித்து அழைத்து வந்து அவருக்கான ஆசனத்தில் அமரவைப்பார்கள். சாய்ந்து உட்காருவதற்காக, பஞ்சடைக்கப்பட்ட நீண்ட திண்டுடன் விளங்கிய உன்னதமான ஆசனத்தில் பாபா அமர்ந்தவுடன், அவருக்கு மேலாக ஒரு நீளமான அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும். இதயத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி பொங்க, அவர்கள் பாபாவுக்கு மிக அழகிய ஆடைகளை அணிவித்தபின், பக்தியுடன் பூஜையைத் தொடங்குவர். அவருக்கு மாலைகளை அணிவித்து, மகிழ்ச்சியுடன் ஆரத்திப் பாட்டை உரக்கப் பாடுவார்கள்.

தொடர்ந்து, மணம் கமழும் சந்தனத்தை இடுவார்கள். கைகளில் வாசனைத் திரவியங்களைப் பூசுவார்கள். அழகான ஆபரணங்களையும் அணிவிப்பர். கடைசியாக, ஒரு கிரீடத்தைத் தலைமேல் பொருத்துவர். சில நேரங்களில் பொன்னாலான கிரீடம்; சில நேரங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் மயிற்பீலி செருகப்பட்டதுமான தலைப்பாகை. கழுத்தில் நேராக வைரமும் மாணிக்கமும் அணிவிப்பர். பிறகு நல்முத்து மணிமாலைகளை அணிவிப்பர். தீபங்களின் ஒளியில் இவ்வழகான ஆடைகளும் அணிகலன்களும் ஜொலிக்கும் அழகே அலாதியானது.

சாயி சத்சரிதம்
சாயி சத்சரிதம்

அதுமட்டுமா? பாபாவின் நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரியால் கறுப்பு நிறத்தில் ஒற்றைக்கோடு நாமம் இடப்படும். நடுவில் வைஷ்ணவ குல சம்பிரதாயத்தையொட்டி ஒரு கறுப்புநிற வட்டப் புள்ளியும் இடப்படும். நுணுக்கமான தங்கச்சரிகை வேலைப்பாடு நிறைந்த, விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிற அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும். அது நழுவினால், இரண்டு பக்கங்களிலிருந்தும் பக்தர்கள் பிடித்துக் கொள் வார்கள். அதுபோலவே, தங்கக்கிரீடத்தையோ தலைப்பாகை யையோ, அது விழுந்து விடாமல் இருக்க பின்னாலிருந்து பக்தர்கள் லாகவமாகவும் ஜாக்கிரதையாகவும் முறைபோட்டுப் பிடித்துக்கொள்வது வழக்கம்.

தப்பித்தவறித் தலையிலிருக்கும் பளு தெரிந்துவிட்டால், பாபா அதைத் தூக்கி எறிந்துவிடுவார் என்பதே பக்தர்களுடைய பயமும் விசாரமும். ஆயினும், பாபாவின் தலையில் மகுடம் அணிவிக்கவேண்டும் என்ற எல்லையில்லாத ஆசையை அவர்கள் நிறைவேற்றாமல் விட்டதில்லை. ஆகவே அவருக்குக் கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். நானாவிதமாக அலங்காரங்களும் செய்து மகிழ்ந்தனர். இவ்வாறான சின்னச் சின்ன விஷயங்களை அனுமதித்து பாபா அவர்களுக்குச் செல்லம் கொடுத்தார்.

சர்வாந்தர்ஞானியான பாபாவுக்கா அவர்களுடைய தந்திரம் தெரியாமல் இருக்கும்? பக்தர்களின் உற்சாகத்திற்கு இடமளித்து (விருப்பப்பட்டே) பாபா மௌனமாக இருப்பார். பிரம்மானுபவத்தில் மூழ்கியவருக்கு தங்கஜரிகை வேய்ந்த அங்கவஸ்திரம் எதற்கு? கிரீடம் எதற்கு? உண்மையான சாந்தியின் சோபையால் ஒளிர்பவருக்கு மணிமகுடம் என்ன அழகு சேர்க்கும்?

இருப்பினும், ஒரு தாய் தன் பிள்ளைகள் தனக்கு தலைவாரிப் பொட்டிட்டு அழகு பார்ப்பதை அனுமதித்து ரசிப்பது போல, பக்தர்களின் பிரேமைக்கு இணங்கி மௌனமாக அனைத்தையும் ஏற்றுக்கொள்வார்.

எல்லாச் சிங்காரிப்புகளும் முடிந்து, நவரத்தின மாலைகள் கழுத்தில் ஜொலிக்க, தலைமேல் மகுடம் வைக்கப்பட்டவுடன் வீசும் சோபை காண்பதற்கு மிக அற்புதமாக இருக்கும். நானாஸாஹேப் நிமோண்கர், குஞ்சலங்கள் தொங்கும் மஞ்சள் நிறத் துணிக்குடையை பாபாவின் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு, பிடியுடன் சேர்த்துக் குடையைச் சக்கரம்போல் சுழற்றிக்கொண்டேயிருப்பார்.

பாபுஸாஹேப் ஜோக்(G), குருவின் பாதங்களை ஒரு வெள்ளித்தட்டில் வைத்து, அன்போடு அவற்றைக் கழுவி, பாத பூஜை செய்து பிற உபசாரங்களையும் மிகுந்த பக்தியுடன் செய்வார். பிறகு விதிமுறைகளின்படி பாபாவுக்குப் பூஜை செய்வார். குங்குமப்பூக் குழம்பைப் பேலாவில் எடுத்துக்கொண்டு குழம்பை பாபாவின் கைகளுக் குப் பூசுவார். பின்னர் உள்ளங்கையில் ஒரு பீடாவை வைப்பார். இவற்றை எல்லாம் பாபா புன்னகை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார். அரியணையில் பாபா அமர்ந்திருக்கையில் தாத்யாவும் மற்றும் சிலரும் பாபாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்க உதவி செய்வார்கள். பாதபூஜை முடிந்த பிறகு அவருடைய பாதங்களை மரியாதையுடன் வணங்குவார்கள்.

பின்னர், பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து, கற்பூரமும் குங்குமப்பூவும் சந்தனமும் சேர்த்து அரைத்த குழம்பை பாபாவின் கைகளில் பூசுவர். கழுத்தில் பூமாலைகளை அணிவித்து கைகளில் ஒரு பூச்செண்டையும் அளிப்பர். அந்தச் சேவையில் அவர்களுக்கு அப்படி ஓர் அளவிலாத ஆனந்தம்!

சதா புன்னகைபூத்த முகத்துடனும், மிகுந்த பிரேமையுடனும், தயையுடனும் பக்தர்களை நோக்குபவருக்குத் தம்மைச் சிங்காரித்துக்கொள்வதில் என்ன அபிமானம் இருந்திருக்க முடியும்? பக்தர் களைத் திருப்திசெய்வதற்காகவே இவை அனைத்தையும் பாபா ஏற்றுக்கொண்டார்.

பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து சாந்தியென்னும் அழகில் மூழ்கியவருக்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலக நடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்? துறவின் உருவாக வாழ்ந்தவருக்கு மரகதக் கற்களா லான அட்டிகை எதற்கு?

ஆயினும், பக்தர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டபோது, அவர்களுடைய நாட்டத்தைத் திருப்தி செய்யவே கழுத்தில் அவற்றை அணிந்துகொள்வார்.

`மரகதம் இழைத்த தங்கச் சங்கிலிகளும் பதினாறு சரம் முத்துமாலைகளும் அன்றலர்ந்த தாமரைகளுடன் சேர்ந்து அவருடைய கழுத்தை அலங்கரித்தன. மல்லிகையும், முல்லையும், துளசியும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைகள் அவருடைய கழுத்திலிருந்து கால்வரை நீண்டு புரண்டன. கழுத்தைச் சுற்றி முத்தாலான ஆபரணங்கள் அபூர்வமாக ஜொலித்தன. அவருடைய மார்பில் தங்கப்பதக்கம் பதிக்கப்பட்ட மரகத அட்டிகை தவழ்ந்தது. நெற்றியில் இடப்பட்ட கறுப்பு நிறத் திலகம் அழகுக்கு அழகு சேர்த்தது...!'

மீண்டும் மீண்டும் இந்த அலங்காரங்களைப் பற்றியும் பாபாவின் பேரழகு பற்றியும் சத்சரிதத்தில் வருவதை வாசிக்கும்போதே தெரிகிறது, பாபாவின் பக்தர்கள் எவ்வளவு ஈடுபாட்டுடனும், அன்புடனும் பக்தியுடனும் இவற்றையெல்லாம் செய்திருப்பார்கள் என்று!

மங்கல வாத்தியங்கள் பின்புலத்தில் முழங்க... ஜோக், தாமே பெரும்பாலும் ஐந்து விளக்குகள் பிரகாசமாக எரியும் ஆரத்தியைச் சுற்றுவார். ஐந்து உபசாரங்களுடன் கூடிய பூஜை முடிந்த பிறகு, பளபளக்கும் பெரிய பஞ்சாரத்தித் தட்டைப் பத்திரமாக எடுத்து ஐந்து திரிகளையும் கற்பூரத்தையும் ஏற்றி பாபாவுக்கு ஆரத்தி சுற்றுவார். ஆரத்தி நடந்து முடிந்த பிறகு எல்லா பக்தர் களும் ஒவ்வொருவராக வந்து பாபாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த பின்னர் வீடுகளுக்குச் செல்வர்.

இப்போது நாமே சாவடியில் அந்த மங்கள வாத்திய முழக்கங்களைக் கேட்டது போல, பாபாவின் அலங்காரத் தையும் ஆரத்தியையும் கண்டது போல ஓர் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படுகிறது அல்லவா! இதே பூஜையை நாமும் நம் இல்லத்தில் பாபாவுக்குச் செய்வோம். அவரை அலங்கரித்து அழகு பார்ப்போம். அவரும் நம்மைப் பிரீதி செய்வார்.

இந்தப் புத்தாண்டு தினத்தில், பாபாவை அவரவர் வசதிக்கேற்ப வஸ்திரத்தாலும் மணிகளாலும் அணிகலன் களாலும் அலங்கரிப்போம். வண்ணக் குடைகள் வைப்போம். சந்தனமும் குங்குமமும் இட்டு, அத்தரும் பன்னீரும் தெளித்து மணம் கமழச் செய்வோம். மலர் களையும் மாலைகளையும் சார்த்துவோம். தலைக்கு அழகிய கிரீடத்தையும் கைக்கு பூச்செண்டையும் வைப்போம். வீட்டில், இவற்றை சார்த்த இயலாதபடி சிறிய அளவில்தான் பாபா விக்கிரகம் உள்ளதா? கலங்க வேண்டாம். இவை யாவற்றையுமோ, அல்லது இயன்ற பொருள்களையோ ஒரு தட்டில் வைத்து அவருக்குச் சமர்ப்பிக்கலாம். இந்த இதழுடன் தரப்பட்டிருக்கும் ஐஸ்வர்ய பாபா படத்தை வைத்தும் வணங்கலாம்.

பின்னர், தூப தீபங்கள் காட்டி, ஒருமனதோடு நம் ஆசைகளையும் வேண்டுதல்களையும் அவர் பாதக் கமலங்களில் சமர்ப்பிப்போம். அன்பும் ஆனந்தமும் பொங்கும் நம் இதயங்களை அவருக்கு அர்ப்பணித்து, ஆரத்தி எடுத்து வணங்குவோம். நம் அலங்காரங்களையும் அன்பினையும் ஏற்று, சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு அருளிச் செய்வார் அந்த ஐஸ்வர்ய பாபா!

அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு ஆனந்தமான பொதுழுகளை வழங்க பாபா அருள்வாராக!

பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து, சாந்தியென்னும் அழகில் மூழ்கியவருக்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலக நடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்?!

சாய்பாபா
சாய்பாபா

நிரந்தரமாக நினைவில் வைப்பேன்!

முழுமையாக இறைவனிடம் சரணடைந்த பிறகு நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவை யில்லை. அவரே பொறுப்பேற்று உங்களை எல்லா வழிகளிலும் நடத்துவார்.

அதிர்ஷ்டம் உள்ளவர் களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக நினைவில் வைக்கிறேன். என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே உதவுகிறேன்.

ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும் சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம்.

என் உபதேசத்துக்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை நான் உடனடியாகக் கொடுப்பேன்.

கர்மங்களைக் குறைத்துக் கொள்ள வழி அதை தைரியமாக அனுபவிப்பதே. அதை அனுபவிக் கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்கும்.

- ஷீர்டி ஶ்ரீசாயி பாபா