Published:Updated:

அரங்கன் நடத்திய நாடகம்!

அரங்கனின் அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
News
அரங்கனின் அற்புதம்

`சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்

‘தெய்வங்கள் பல இருக்கலாம். ஆனால், பேதங்கள் இருக்கக் கூடாது’ என்று உணர்ந்தவர்; மற்றவர்களுக்கும் உணர்த்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். செந்தமிழ் பாடல்களால் அனைத்து தெய்வங்களையும் போற்றி துதித்தவர்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

ருமுறை தண்டபாணி சுவாமிகள், தாம் ஏற்கெனவே பாடிய ‘திருவரங்கத் திருவாயிரம்’ என்ற பாடல் தொகுப்புடன் ரங்கம் சென்றார். அங்கு, ஆயிரம் பாடல்களையும் அரங்கேற்ற அவருக்கு அருள்புரிந்த அரங்கநாதர், ரங்கத்தில் உள்ள தன் பக்தர்களின் கனவில் தோன்றி, ‘‘திருவரங்கத் திருவாயிரத்தை இங்கே அரங்கேற்றம் புரிய வேண்டி யதைச் செய்யுங்கள்!’’ என்று கட்டளையிட்டார்.

ஏற்பாடுகள் தடபுடலாகச் செய்யப்பட்டன. ‘திருவரங்கத் திருவாயிரம்’ பாடல்கள், தினந்தோறும் சீரும்சிறப்புமாக அரங்கேற்றப்பட்டன. ஏராளமானோர் வந்து கேட்டு இன்புற்றனர். நாளாக நாளாகக் கூட்டம் அதிகரித்தது. அப்போது, கருடனின் பெருமையையும், தண்டபாணி சுவாமிகளின் பக்தியையும் உலகுக்கு உணர்த்த திருவரங்கன் திருவுளம் கொண்டார் போலும். ஒரு நாள் அரங்கேற்றத்தில் பெரும் பங்கு வகித்து தொண்டு செய்த பக்தர் ஒருவரின் மகளை, பாம்பு தீண்டியது. இந்தத் தகவல், மேடையில் இருந்த தண்ட பாணி சுவாமிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், கருடன் சந்நிதி முன் நின்று,

‘அரங்கன் திருமுன்ப மருங் கருடா

இரங்கிரங்கிப் பார்ப்பனப் பெண் ஏங்க

சிரங்கொண்ட பொல்லா விடத்தைப்

பொடியாக்கிப் பூவுலகோர்

நல்லா னென்றோத அருள் நல்கு’

என்ற வெண்பாவைப் பாடினார். பிறகு, ‘‘பாம்பின் விஷம் இறங்கி அந்தப் பெண் உயிர் பிழைத்த பிறகே, அரங்கேற்றத்தைத் தொடர்வேன்!’’ என்று அங்கு கூடி இருந்த வர்களிடம் கூறிவிட்டு, தன் இருப்பிடத்தை அடைந்தார். அப்போது கருட பகவான், அந்தணர் வடிவில் தண்டபாணி சுவாமிகளிடம் வந்தார். அவரிடம், ‘‘உங்கள் பெயர் என்ன?’’ எனக் கேட்டார் சுவாமிகள். ‘‘கருடாச்சாரி’’ என்று பதில் சொன்ன அந்தணர், சிறிது நேரம் தண்டபாணி சுவாமிகளுடன் பேசிவிட்டுத் திடீரென மறைந்தார். அதன் பிறகே, ‘வந்தது கருட பகவான்’ என உணர்ந்தார் தண்டபாணி சுவாமிகள்.

`ஓதும் கருடன் ஒரு மனிதன் போல் உருக்கொண்டு ஏதும் அறியான் எனத் தோன்றிப் பேதமற நம்மோடு உறவாடி நான் கருடா சாரி மென்றது அம்மா'

- என இந்த நிகழ்ச்சியை தண்டபாணி சுவாமிகள் பாடலால் தெரிவித்துள்ளார். பின்னர், பாம்பு தீண்டிய பெண் உயிர் பிழைத்தாள். அரங்கேற்றம் மீண்டும் தொடர்ந்து, சிறப்பாக நடந்து முடிந்தது.