திருத்தலங்கள்
Published:Updated:

கொடிமரம் ஏன் தெரியுமா?

கொடிமரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடிமரம்

- பி.சந்திரமெளலி -

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து அருள்மழை பொழிந்த மகான் ஸ்ரீமத் ஸ்வயம்ப்ரகாச பிரம்மேந்திர அவதூத ஸ்வாமிகள்! இவரைப் பற்றித் தமிழ்த் தாத்தா உ.வே.சா, ‘ஸ்ரீமத் ஸ்வயம்ப்ரகாச பிரம்மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்’ எனக் குறிப்பிடுகிறார்.

த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம்
த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம்


இவரின் மகிமைகளைப் போற்றும் விதமாக (1935-ல்) வெளியிடப் பட்ட ‘ஸ்வயம்ப்ரகாச விஜயம்’ எனும் புத்தகம் வெளியானது. வரகவி அ.சுப்ரமண்ய பாரதி இதை எழுதி உள்ளார். அபூர்வமான தகவல்கள் பலவற்றைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் கோயில்கள் குறித்த விவரங்களும் உண்டு.

எம்பெருமானாகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் மூலஸ்தானம் என்பது சிர(தலை)ப் பதும ஸ்தானம். அதற்கு அடுத்த இடமாகிய அந்தராளம் என்பது முகம். அதையடுத்து உள்ள அர்த்த மண்டபம் - கண்ட ஸ்தானம் (கழுத்து). அதற்கு அடுத்த மகா மண்டபம் - மார்பும் தோளும் கூடிய ஸ்தானம்.

இவையெல்லாவற்றையும் சேர்த்து, பிராகாரம் எனப்படும் பகுதி, துடைகளும் முழங்கால்களுமாகும். கோபுரம் என்பது பாதம். இவ்விதமாக, அடியார்களின் சரீரகாரமாக அமைக்கப்பட்டவையே ஆலயங்கள். பகவான் அந்தச் சரீரங்களில் வசிப்பது போலவே, ஆலயத்தில் சந்நிதிகொண்டு, ஆராதனைகளை அதாவது வழிபாடுகளை உவகையுடன் ஏற்று அருள்புரிகிறாராம்.

த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம் குறித்தத் தகவலும் இந்த நூலில் உண்டு. அதென்ன விவரம்... தெரிந்துகொள்வோமா?

த்வஜம் என்றால் தர்மம் என்று சொல்லலாம். தேகத்தில் வீணா தண்டம்போல், மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரைக்கும் மேல் நோக்கிச் செல்லுகின்ற பிரம்ம நாடியாக இதனைக் கூறுவார்கள், யோகீந்திரர்கள்.

உடம்பை த்வஜஸ்தம்பம்போல நேராக நிறுத்தி, இடகலை - பிங்கலை எனும் இரு நாடிகளின் வழியே போய்த் திரும்பும் பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி, சிறிதும் அசையாமல் தியானித்தால், பிராணவாயு நிற்கும்; பிராணவாயு நின்றால், மனம் நிற்கும்; மனம் நின்றால், ஐம்பொறிகளும் நிற்கும்; அவை நின்றால், விஷய சுகங்களில் ஆவல் அடங்கும்; அது அடங்கினால், உலகப் பரபரப்பு அடங்கும்; அப்படி அடங்கினால், ஆத்ம சாஷாத்காரமும் அதற்கு மேல் பிரம்மானந்தமும் தோன்றும்.

இதை உணர்த்துவதற்காகவே கோயில்களில் மூலஸ்தானத்துக்கு நேராக, கொடிமரத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்களாம்.