Published:Updated:

இறை தரிசனம்!

ஶ்ரீஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீஆஞ்சநேயர்

தலங்கள்... தகவல்கள்!

சாக்கு மூட்டையில் வந்த ஆஞ்சநேயர்!

திருச்சி மாநகர ரயில் நிலையத்துக்குப் பின்புறம் உள்ளது கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில். இவர் இங்கு எழுந்தருளிய கதை சுவாரஸ்யமானது.

இறை தரிசனம்!
DIXITH

ஆங்கிலேயேர் காலத்தில் வரிவசூல் கண்டிப்புடன் நடைபெற்றது. அப்போது வடக்கே இருந்து வைணவ அடியவர் ஒருவர் வந்தார். அவரிடம் இருந்த சாக்கு மூட்டை எடை போடப்பட்டது. எடை அதிகம் இருந்ததால், சரக்கு வரி அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. `அவ்வளவு தொகையை என்னால் தரமுடியாது. மூட்டையில் தானியங்களே உள்ளன’ என்று கூறி, மூட்டையை ரயில் நிலையத்திலேயே விட்டுச் சென்றார் அவர். ம்

வெகுநாளாகியும் அவர் திரும்பாததால், அதிகாரிகள் மூட்டையைப் பிரித்தனர். உள்ளே தானியங்களை எதிர்பார்த் தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அழகிய அனுமன் திருமேனி இருந்தது. `எல்லாம் அனுமன் அருள்' என்று பக்தர்கள் மகிழ, பின்னாளில் திருக்கோயில் எழும்பியது. அனுமன் ஜயந்தி நாளில் இங்கே அனுமனுக்கு10,008 வடை மாலை, வெற்றிலை, துளசி மாலை மற்றும் ஜாங்கிரி மாலையும் சாத்தி விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த வைபவத்தை தரிசிப்பது பெரும் புண்ணியம்!

- கே.முருகவேல், முசிறி

இறை தரிசனம்!
DIXITH

பிள்ளை வரம் தருவார்!

திருவரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது காட்டழகிய சிங்கர் நரசிம்மர் ஆலயம். தலவிருட்சம் வன்னி. ஆதியில் யானைகளின் தொந்தரவு அதிகம் இருந்த இந்தக் காட்டுப் பகுதியில் அழகிய நரசிம்மரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அதன்பிறகு யானைகளின் தொந்தரவு விலகியதும் காட்டைத் திருத்தி ஆலயம் எழுப்பினார்களாம்.

ஶ்ரீபிள்ளைலோகாசார்யர் இங்குள்ள நரசிம்மரைப் போற்றி ஶ்ரீவசநவ பூஷணம் போன்ற 18 கிரந்தங்களை இயற்றியுள்ளார். பிரதோஷ நாளில் நரசிம்மருக்கு செய்யப்படும் விசேஷ பூஜையில் கலந்துகொண்டால், குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- எம்.செந்தில், திருச்சி-2

இறை தரிசனம்!
dixithphotography

பெண்களின் குறை தீரும்!

தி
ருச்சி - கரூர் வழியில், திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது பேட்டவாய்த் தலை. இங்குள்ள சிவாலயம் மத்தியார்ஜுனம் எனும் சிறப்புப் பெற்றது. இக்கோயிலின் நாயகி ஶ்ரீபாலாம்பிகை. முற்காலத்தில் இந்தப் பகுதியில் வசித்த பெண்கள் பலரும் மாதவிடாய் சம்பந்தமான குறைபாடுகளால் அவதிப்பட்டனராம். அப்போது இங்கு வசித்த பொற்றாளப் பூவாய் சித்தர் என்பவர் அவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். அப்போ தும் குறை தீரவில்லை. அவர் அம்பாளிடம் பிரார்த்தித்தார்.

பாலாம்பிகை பிரதட்சயமாக அவருக்குத் தோன்றி மூலிகைகளையும் சிகிச்சை முறைகளையும் சொல்லி அருள்புரிந்தாள். மேலும் ‘தம்மைச் சரணடையும் பெண்களை, கருப்பை சம்பந்தமான அத்தனை துன்பங்களிலிருந்தும் காப்பேன்’ என்று உறுதி அளித்தாளாம்.

இன்றும் இங்கு ஒரு விசேஷ வழிபாட்டைச் செய்கிறார்கள் பக்தர்கள். மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை பிரச்னை முதலானவை குணமாக வேண்டி பிரார்த்தனைச் சீட்டு எழுதி, சித்தரின் திருவுருவம் உள்ள தூணில் கட்டிவைத்து வழிபடுகின்றனர். இதன் மூலம் விரைவில் குறை தீரும் என்பது நம்பிக்கை.

- கே.ரமா, சென்னை-44