
திருவாசகச் சித்தர் சிவ.தாமோதரன் ஐயா
வணக்கம் வாழிய நலம்!
ஒளி பரவும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பெரியவர்களுக்கு எனது வணக்கத்தையும் இளையோருக்கு என் ஆசிகளையும் கூறிக் கொள்கிறேன். இல்லங்களில் ஏற்றப்படும் ஒளி உங்கள் உள்ளங்க ளிலும் பரவட்டும். அதனால் உங்கள் உடல் மற்றும் மன ஆற்றல் சிறக்கட்டும்.

`கூட்டம் கூட்டமாக இணைந்து திருவாசகம் ஓதுவதால் என்ன நன்மை. இதனால் பயன் உண்டா?’ என்ற கேள்வியை அன்பர் ஒருவர் கேட்டுள்ளார்.
கூட்டமாக இணைந்து வெட்டிக்கதைகளும் புறணிகளும் பேசுவதால் ஏதும் பயன் உண்டா?
‘பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.’
எத்தனையோ பாவங்களை நம் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும், தெரிந்தும் தெரியாமலும் செய்துவருகிறோம். அதற்காக `நமசிவாய’ என்று உச்சரித்து வேண்டிக்கொண்டால், அந்தப் பாவங்கள் விலகிவிடும் என்கிறார் அப்பர் பெருமான்.

`நமசிவாய’ என்று உச்சரிக்க உடலெங்கும் அமிர்த வெள்ளம் பரவும் என்கிறார்கள் சித்தர்கள். அதிலும் கூட்டமாகத் திரண்டு இந்த நமசிவாய மந்திரத்தை ஓதினால், அந்த இடமெங்கும் அருள் கொண்ட அதிர்வுகள் உண்டாகும். ஆக `நமசிவாய’ என்றே தொடங்கும்... நமசிவாய மந்திரத்தின் விரிவான விளக்கமாக எழுந்த தேவாரத்தை - திருவாசகத்தை அனைவரும் திரண்டு பாடும்போது, அங்கு விவரிக்க முடியாத இறை ஆற்றல் பெருகும்.
மரங்கள்கூட அடிமுடி தேடி பரவி வாழ்கிறது. இறைவனின் அம்ச மான நாமோ, இறைசக்தியின் ஆற்றலை உணராமல் வாழ்கிறோம். இறைசக்தியின் ஆற்றலை எளிமையாகப் பெற கூட்டு வழிபாடும் முற்றோதலும் நிச்சயம் உதவும். இறைவனின் எழுத்து வடிவம் தேவாரம் - திருவாசகம்.
ஓடினாலும் கங்கை... குவளைக்குள் இருந்தாலும் கங்கைதான் இல்லையா! அப்படியே பிரபஞ்சத்தில் எங்கும் இருக்கும் ஈசன், திருவாசகத்தில் மந்திர வடிவாக இருக்கிறார். திருவாசகம் ஓத மன வாசகம் ஒடுங்கும். இறை ஆற்றல் நம்முள் பொங்கும்.
வேறுவேறு கூட்டம் வந்து நம்மை ஒடுக்கியபோதெல்லாம் சைவம் உறுதியாக நின்றது, இத்தகைய கூட்டு வழிபட்டால்தான். நாவுக்கரசர் இதைத் தொடங்கிவைத்தார். நம் திருக்கூட்டம் அதை இன்றும் செய்துவருகிறது. கூட்டான வழிபாட்டின் மூலம் உயர்ந்த சைவ வாழ்வியல் நமக்கு அறிமுகமாகிறது. கூட்டு வழிபாட்டில் நாம் பேதங்களை அறுக்கிறோம். வளைந்து குனிந்து அடியார்களை வணங்கும்போது, ஆணவம் துறக்கிறோம். எனவே, தனித்த இறைவழிபாட்டைவிடவும் கூட்டு வழிபாடு சிறந்தது. அதிலும் பதிகங்கள் பாடித் தொழுவது இன்னும் உயர்வானது ஆகும்.
கொசுக்களை விரட்ட மூலிகைப் புகை உதவுவது போன்று தீய ஆற்றல்கள் விலக பதிகங்கள் உதவும். இந்தப் பிரபஞ்சத்தில் ஒலிதான் ஆதாரம். 10 பேர் அமர்ந்து பதிகங்கள் பாடினால், அந்த மந்திர சத்தத்தின் விளைவால் பிரபஞ்சம் எங்கும் பெரும் ஆற்றல் எழும். அது இயற்கையைச் சமன்படுத்தும்.
அற்புதமான எழுத்துக்களின் சேர்க்கையால் உருவான பதிகங்களால் மெல்லிய இறை அதிர்வு உண்டாகி, அது அந்தச் சூழலை இனிமையாக்கும். மந்திர ஒலிகளால் தாவரங்கள் உற்சாக மாகும். அதனுள் ஜீவ ஆற்றல் பெருகி வேகமாகச் செழித்து வளரும். புழு, பூச்சிகள், விலங்குகள் நாம் படிக்கும் பதிக ஒலிகளைக் கேட்டுச் சாந்தமாகும். மட்டுமன்றி பதிக ஒலிகளைக் கேட்டு வளரும் தாவரத்தை உண்ணும் ஜீவன்களும் அமைதியாக, செழுமையாக வளரும். இதைக் கண்கூடாக நானே கண்டிருக்கிறேன்.
பலரும் ஒன்றுகூடி முற்றோதல் செய்யும் இடத்தில் தோன்றும் ஆற்றல் மனஅமைதியைக் கொடுக்கும்; நோய்களைத் தீர்க்கும். அங்கு தோன்றும் உற்சாகத்தால் வாழ்க்கை சிறக்கும். பதிகம் ஒலிக்கும் இடத்தில் தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை. இயற்கையைச் சமன்படுத்தவே பதிகங்கள் தோன்றின. ஜனனம், மரணம், புயல், வெள்ளம், கடும் கோடை என இயற்கையின் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றைச் சமன்படுத்தி நல்ல விளைவுகளை உருவாக்க பதிகங்கள் உதவும்.
பிறவிப் பிணி நீக்கும், இனிமையான நிறைவான மரணத்தைக் கொடுக்கும், கோடையைத் தணிக்கும், வெள்ளத்தை வடிய வைக்கும். சகல ஜீவன்களும் ஆபத்தின்றி உயிர்ப் பிழைத்திருக்க பதிகங்களே உதவும் என நிச்சயமாகச் சொல்வேன்.
நல்ல விதைகள்தான் முளைக்கும். அதுபோல், நல்லவர்களை உருவாக்க பதிகங்களே உதவும். பதிகங்கள் ஓதி ஓதி வழிபட, உங்கள் வாக்கு சுத்தமாகும்; மந்திரம் போன்று உங்கள் வாக்கும் பலிக்கும்.பதிகம் பாடுபவருக்கு நன்மை தீமைகள் முன்னமே உணர்த்தப்படும். அவர்கள் தீண்டினால், இறையாற்றலின் காரணமாக நோயும் குறைகளும் நீங்கும்; வாழ்வு பற்றிய கவலைகள் அகலும்.
தேவை எது, போகம் எது என்பதை உணரவைக்கும். மொத்தத்தில் உங்களின் தேவைகளைக் குறைத்து நிறைவான வாழ்க்கை வாழ பதிகங்களும் கூட்டு வழிபாடும் நிச்சயம் அளிக்கும். ஒன்றுமே இல்லாமல் வந்தோம்; ஒன்றுமே இல்லாமல் போகவும் போகிறோம். இடைப்பட்ட காலத்தில் அங்கு இருப்பதை இங்கும், இங்கு இருப்பதை அங்கும் கொடுத்து வாழ்கிறோம். அவ்வளவுதான்.
ஒரு நெல்மணிகூட நம்மால் உருவானது இல்லை; இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையில், நம் வாழ்க்கை எத்தனை அநித்யமானது என்பது புரிகிறதா? அதை அர்த்தப்படுத்த கூட்டு வழிபாடு உதவும். எங்கே அன்பர்கள் கூடி வழிபாடு செய்கிறார்களோ, அங்கு நிச்சயம் அன்பு வெள்ளம் பாயும். அன்பு இருக்கும் இடத்தில் சிவமும் இருக்கும்!
சாம்பல் பூசிக்கொண்ட பெரும் நெருப்பைப் போன்றவர்கள் அடியார்கள். அவர்கள் கூடி செய்யும் வழிபாடு வேள்வியைப் போன்றது. அது நிச்சயம் சமூகத்துக்கு நன்மையைத் தரும். பதிகங்கள் எனும் மலர் கொண்டு ஈசனைத் துதிக்க, அது சகலருக் கும் நன்மையைக் கொடுக்கும்.
`கூட்டாக அமர்ந்து மந்திரங்கள் சொல்வதால் நன்மை உண்டா’ என்று கேட்பவர்களுக்கு வார்த்தைகளால் விளக்கம் சொல்வதை விடவும், ஒருமுறை முற்றோதுதல் நடக்கும் இடத்துக்கு வரவேண்டும்’ என்று அன்போடு அழைக்கிறேன். அன்பும் அருள்வெள்ளமும் பொங்கிப் பிரவகிக்கும் அந்த இடத்தில், இறை ஆற்றலை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.
நிறை மொழி, மறைமொழி என்றெல்லாம் போற்றப்படுபவை பதிகங்கள். அப்படியான தெய்விகப் பதிகங்கள் ஓதப்படும் இடத்தில், எப்போதும் நேர்மறையான ஆற்றல் வெளியாவதால் உங்கள் கவலைகள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள் என நிச்சயமாக சொல்வேன். ஞாபகங்களின் கிடங்காகத் திகழும் உங்களின் மனம் பக்குவப்பட, கூட்டு வழிபாடும் முற்றோதுதலும் வழிகாட்டும்.
அனைத்துக்கும் மூலமான சித்தனைப் பாடவென்றே முளைத்து வந்த ஆன்மாக்கள் நாம். அவனைப் பாடுவதைவிடவும் வேறு என்ன பெருமை நமக்கு இருந்துவிட முடியும்?
வாருங்கள்... எல்லோரும், எப்போதும் அவன் திருநாமத்தைப் பாடி இன்புற்று வாழ்வோம். சிவாயநம!
- பேசுவோம்...
கங்கையில் நீராடிய புண்ணியம்!
ரோம மகரிஷியின் வேண்டுகோளின்படி, ஈசன் வரமூர்த்தீஸ்வர ராக அருளும் தலம் அரியதுறை. சென்னை- காளஹஸ்தி நெடுஞ்சாலையில் சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே இறைவியின் நாமம் அருள்மிகு மரகதவல்லி.
ரோம மகரிஷியின் சீடர் முகுந்தன். ஒருமுறை, முகுந்தனுக்குக் கங்கையில் நீராடும் ஆவல் ஏற்பட, அதைத் தன் குருநாதரிடம் தெரிவித்தார். ரோம மகரிஷி, ``நாளை காலை அரணி நதியில் நீராடு’’ என்றார். அதன்படியே மறுநாள் முகுந்தன் அரணி நதியில் மூழ்கி எழுந்த போது, ஈசன் காசி காலபைரவராகக் காட்சி கொடுத்தார். அவர் அருளால் அந்த இடத்தில் கங்கை தோன்றி அரணி நதியில் கலந்தது.
அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை. இங்கே வந்து தொழுதால், கிரக தோஷப் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதிகம். அம்பாளையும் அவளின் சந்நிதி விதானத் தில் திகழும் நாகம், பல்லி போன்ற உருவங்களையும் ஒருசேர தரிசித்தால், தோஷங்கள் எதுவும் நம்மை அண்டாது. மேலும் கோயி லின் தீர்த்தக் கிணற்று நீரில் ஒரு துளி நம் மீது பட்டாலே, கங்கை யில் நீராடிய பலன் கிடைக்கும் என்கிறார்கள் அடியவர்கள்.
- எம்.மகேஷ், அரக்கோணம்