Published:Updated:

திருமலை திருப்பதி!

திருவேங்கடவன்
பிரீமியம் ஸ்டோரி
திருவேங்கடவன்

திருப்பதி அற்புதங்கள்!

திருமலை திருப்பதி!

திருப்பதி அற்புதங்கள்!

Published:Updated:
திருவேங்கடவன்
பிரீமியம் ஸ்டோரி
திருவேங்கடவன்

`வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரணி தடே !

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்

- ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ஸ்லோகம்

பகவான் கலியுகத்தில் சகலருக்கும் அருள் செய்வதற்காகவே தன் நிரந்தர வாசஸ்தலமான ஶ்ரீவைகுண்டத்தை விட்டு இறங்கி வந்து புஷ்கரணி தீர்த்தக் கரையிலே நிற்கிறார். எவன் ஒருவன், இந்த உலகில் தான் செய்த பாவங்களை உணர்ந்து தன்னை சுத்தி செய்துகொள்ள விரும்புகிறானோ அவனுக்கு நல்லருளைத் தருவதற்கா கவே சிலாரூபமாக நிற்கிறார். அதற்கு ஶ்ரீவேங்கடேச மகாத்மியத்திலும் பல சரிதங்களிலும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

திருமலை திருப்பதி!

‘திருவேங்கடம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திருமலையோ ஏழு சிகரங்களை உடையது. அந்த ஏழு சிகரங்களும் தனித்தனி மலைகளாகத் தனித் தனிப் பெருமைகளோடும் மகிமைகளோடும் விளங்கும் சிறப்பினைக் கொண்டது. வேங்கடவனுக்குக் கோயில் எழும்பியது கலியுகத்தில்தான் என்றாலும் அவரது சாந்நித்தியம் நிறைந்த இந்தத் தலமானது யுகம் யுகங்களாக நிலைத்து நிற்பது.

அப்படிப்பட்ட அந்த ஏழுமலையில் ஒருமலைதான் விருஷபாத்ரி எனப்படுவது. ரிஷபன் என்கிற அசுரன் இந்த மலையில் தவம் செய்த முனிவர்களைத் துன்புறுத்திவர அவன் செய்த அதர்மங்களை நிறுத்துவதற்காக வேங்கடவன் ஒரு வேடுவராஜனைப் போல வந்து போர் புரிந்தார். போர் உக்கிரமடைந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு வந்திருப்பது யார் என்று தெரிந்துவிட்டது. பரம்பொருளை உணர்ந்துகொண்டாலே ஞானம் தோன்றிவிடும் அல்லவா. ஆனாலும் ‘அழியும் இந்த உடல் அவர் கை அம்பினால் வீழட்டும்’ என்று நினைத்தான்.

தொடர்ந்து உக்கிரமாக யுத்தம் செய்தான். பெருமாள் புரிந்துகொண்டார். அவனை நிக்ரகம் செய்வதன் மூலம் அனுக்கிரகம் செய்வது என்று முடிவு செய்து ஒரு அம்பினால் அவனை வீழ்த்தினார். ரிஷபனும் வீழ்ந்தான். அவன் கீழே விழும்போது பெருமாளைக் கையெடுத்து வணங்கிச் சரணாகதி செய்தான்.

பெருமாளின் சுபாவங்களில் ஒன்று அனுக்கிரகம் செய்வது. அவர் நிக்ரகமே செய்தாலும் அது அனுக்கிரகமாகவே முடியும். ஜய விஜயர்கள் அசுரர்களானபோது அவர் செய்த நிக்ரகமே அவர்களுக்கு அனுக்கிரகமானது. மகாபலிக்கும் அவர் அனுக்கிரகமே செய்தார்.அப்படி யிருக்க விருஷபாசுரனை மட்டும் விட்டுவிடுவாரா என்ன? அவனுக்கு நற்கதி வழங்கி, ‘இனி இந்த மலை விருஷபாத்ரி’ என்று உன் பெயராலே விளங்கட்டும் என்று சொல்லி அருளினார்.

திருமலையில் ஒரு மலைக்கு ‘வேங்கடாத்ரி’ என்று பெயர். ஒவ்வொரு மலைக்கும் பல பெயர்க் காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக அதன் ஜீவனான காரணம் எது என்பதைச் சொல்லும் காரணங்களும் வரலாறும் முக்கியமானது.

திருமலை திருப்பதி!

முன்னொரு காலத்திலே மாதவன் என்றொரு பிராமண இளைஞன் இருந்தான். நல்ல அழகான தோற்றம் உடைய அவன் உரிய வயதிலேயே உபநயனம் ஆகி வேதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தான். ஆனால், கல்வி மட்டும் ஒருவனை நல்லவனாக்கிவிடாது அல்லவா...

மாதவன் ஒரு நாள் காட்டுப்பாதையிலே வந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு காட்டு வாசிப் பெண் ஒருத்தியைக் கண்டான். அவளைக் கண்டதும் அவனுக்கு மோகம் உண்டானது. அவளை அழைத்தான். அவளோ அவனிடமிருந்து தப்பி அஞ்சி ஓடினாள். ஆனால் அவன் அவளை ஓடிப்பிடித்துத் தன் ஆசைக்கு இணங்கச் செய்துவிட்டான்.

பாவங்களில் பெரிய பாவம் பெண் பாவம். விருப்பமில்லாத பெண்ணைத் தொடுவது மட்டுமல்ல, ஆசையோடு பார்ப்பதுகூடப் பாவம் என்கின்றன புராணங்கள். ஆனால் வேத புராணங்களைக் கற்றிருந்தாலும் மாதவன் அந்த கணத்தில் உணர்வுவசப்பட்டுத் தவறு செய்துவிட்டான். அந்தப் பெண் அழுது கொண்டே ஓடிச் சென்று தன் உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் வந்து இவனை நன்கு அடித்து விரட்டினர். இவன் அடிவாங்கிய செய்தி ஊரெல்லாம் பரவிவிட ஊருக்குள்ளேயே விடமறுத்தனர். சொந்தக்காரர்களும் கைவிட்டனர். வேறு வழியில்லாமல் அவன் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியதாயிற்று. கற்றது பெற்றோரிடமிருந்து பெற்றது என அனைத்து நன்மைகளையும் மறந்து திருடுவது துர்மாக்கங் களில் போவது என்று அலைய ஆரம்பித்தான்.

ரு கட்டத்தில் அவன் நோய்வாய்ப்பட்டான். அவன் பாவங்கள் அனைத்தும் நோயாக மாறின. உடல் எங்கும் பற்றி எரிவதைப் போன்று வெப்பம் உண்டானது. கைகால்கள் எல்லாம் அழுக ஆரம்பித்தன. அவனைக் கண்டதும் எல்லோரும் அலறி ஓட ஆரம்பித் தனர். அதனால் ஊருக்குள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட, அவன் வனப் பகுதிகளுக்குள் நுழைந்து அலைந்து திரிய ஆரம்பித்தான். அப்போது அவன் ஒரு மலைக்கு வந்தான்.

அந்த மலையில் ஞானிகளும் தபசிகளும் தவம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் பார்வை அவன் மேல் விழுந்தது. எப்போது குருவின் பார்வை நம் மீது விழுகிறதோ அப்போது நம் பாவங்கள் எல்லாம் பொசுங்கி விடும் என்பதுதானே ஞானநூல்கள் நமக்குச் சொல்லும் செய்தி. அப்படி அவன் மகான்களின் பார்வையில் பட்டதும் அவனுள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஞானிகளும் அவன் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தள்ளாடித் தள்ளாடி அவன் நடந்து வந்தவனின் உடல் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தபசிகள் எல்லாம் அதிர்ச்சியாகப் பார்த்தனர். ஆனால் சில நொடிகளில் அவன் உடல் எரிந்து சாம்பலாக விழுவதுபோல் விழுந்தது. என்ன ஆச்சர்யம், அந்த இடத்திலே ஒரு தேஜஸ்வி நிற்கிறான். அது மாதவன்தான். பழைய குரூபியான தோற்றம் மாறியிருந்தது.

மாதவன் ஓடிவந்து மகான்களின் பாதங் களைத் தொட்டு, தான் அதுவரை செய்த பாவங்களை எல்லாம் அவர்களிடம் முறையிட்டு, ‘தங்களைப் போன்ற சாதுக்களின் தரிசனம் கிட்டியதால்தான் தனக்குப் பாவங்கள் நீங்கின’ என்று சொல்லி வணங்கினான்.

அதைக் கேட்ட ரிஷிகள், “அப்பா, எங்களின் தரிசனம் காரணம் என்று நீ நினைக்கலாம். ஆனால் இந்தத் தலத்தின் மகிமை என்று நாங்கள் நினைக்கிறோம். இது வேங்கட மலை. ‘வே’ என்றால் பாவம்... ‘கட’ என்றால் தீர்தல் அல்லது பொசுக்குதல் என்று பொருள். அதனால்தான் பாவியாகிய நீ பொசுங்காமல் உன் பாவங்கள் மட்டும் பொசுங்கிப்போயின.

இந்த மலைக்கு வந்து வழிபாடு செய்தாலே பாவங்கள் தொலைந்துபோகும் என்பதற்கு நீதான் உதாரணம். அதனால் இன்று முதல் இந்த மலை ‘வேங்கடாத்ரி’ என்று போற்றப் பெறும்” கூறி அருளினார்கள்.

இப்படித் திருமலையின் ஒவ்வொரு மலைக்கும் ஒரு மகிமை உண்டு. பாவம் தீர்க்கும் மலை மட்டுமல்ல அது. கேட்கும் வரம் தரும் மலையும்கூட. இங்கு வந்து அந்த வேங்கடவனை வேண்டிக்கொண்டால் சகல சாதனைகளையும் செய்யலாம். அதற்கு உதாரணமாகத் திகழ்வதுதான் அஞ்சனாத்ரி.

திருமலை திருப்பதி!

முன்னொரு காலத்தில் கேசரி என்றொரு வானர ராஜன் இருந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் அஞ்சனாதேவி. நல் ஒழுக்கங்கள் நிறைந்த அந்தக் குமாரத்தியை கேசரி என்னும் பெயருள்ள ஒரு இளவரசனுக்கே திருமணம் செய்துகொடுத்தனர்.

அரி என்றால் சிங்கம். கேசரி என்றால் பிடரியில் மயிர் நிறைந்தவன் என்று பெயர். அப்படி சிங்கம் போன்ற ஒரு இளவரசனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார். ஆனாலும் அவர்கள் வாழ்வில் ஒரு குறை ஏற்பட்டது. அதைத் தீர்க்க வழி தேடினார்கள். அப்போது அவர்கள் குறைதீரும் தலமாக ஏழுமலையைக் காட்டினார்கள் ஞானிகள்.

அவள் குறை எது, அது தீர்ந்த விதம் எப்படி என்பதை அடுத்த பகுதியில் அறிந்துகொள்வோம்.

- தரிசிப்போம்...

திருமலை திருப்பதி!

`வேங்கடவனே துணை!'

திருப்பதி பெருமாள் எங்கள் குலதெய்வம். அதிலும் என் தந்தை வேங்கடவனின் தீவிர பக்தர். ஆண்டுக்கொருமுறை திருப்பதி சென்று தரிசனம் செய்து விடுவார். கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே செல்வார்.

அம்மா உயிரோடு இருந்தவரை அம்மாவும் அப்பாவோடு நடந்துதான் மலைக்கு வருவார். திருமணத்துக்கு முன் நானும் உடன் செல்வது வழக்கம். திருமணமான பின் நான் பாதயாத்திரை செல்வதை விட்டுவிட்டேன். மாறாகப் பேருந்தில் சென்று வர ஆரம்பித்தேன். நான், என் மனைவி என் குழந்தை மூவரும் பேருந்தில் சென்றுவிடுவோம். அப்பாவும் அம்மாவும் நடந்து வந்து விடுவார்கள்.

மூச்சிரைப்பு ஏற்படடபோதுகூட அப்பா விடாப் பிடியாக நடந்தேதான் வருவேன் என்று அடம் பிடிப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முழு உடம்பையும் ஸ்கேன் செய்து பார்த்தோம். அதில் டாக்டர்கள் சந்தேகப் பட்டதைப்போல ஒரு பெரிய நோய் இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் `அதிகபட்சமாக அப்பா ஆறு மாதங்கள் உயிரோடு இருக்க வாய்ப் பிருக்கிறது' என்று சொன்னார்கள். அதைக்கேட்டதும் நானும் என் மனைவியும் ஆடிப்போனோம். என்ன வைத்தியம் செய்தாலும் இந்த வயதில் அப்பாவின் உடல்நிலை அதைத் தாங்காது என்றனர். நாங்கள் இடிந்துபோய்விட்டோம்.

அடுத்த நாளே வீட்டுக்கு அப்பாவை அழைத்துச் சென்றோம். எங்கள் முக மாற்றத்திலிருந்தே பிரச்னையைப் புரிந்துகொண்ட அப்பா, “எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல்லுங்க” என்று சொன்னார். நாங்கள் ஏதேதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தோம். ஆனால் முடியவில்லை. கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டோம்.

“அவ்வளவுதானா... இதற்கா இப்படி அழுது வடிகிறீர்கள்... மனிதனாய் பிறந்த எல்லாருக்கும் மரணம் வரத்தான் செய்யும். இதில் நான் என்ன ஒசத்தி... வேங்கடேசன் கூப்பிட்டால் போக வேண்டியதுதான். அவன்தான் சகலத்துக்கும் அதிபதி. வா, ஒருமுறை திருப்பதி போவோம். அவனிடமே வேண்டுவோம். அவன் அருள் கிடைத்தால் உடல் நிலை சரியாகி மீண்டும் மீண்டும் அவனைத் திருப்பதி சென்று தரிசிப்போம். அப்படி இல்லையா... அவன் விருப்பப்படி பரமபதம் அடைந்து அவனை நேரடியாக தரிசனம் செய்து கொள்கிறேன்” என்றார். இதைக் கேட்டதும் என் உடல் சிலிர்த்துவிட்டது.

உடனே கார் பிடித்து திருப்பதி கிளம்பினோம். இந்த முறை அப்பாவைக் காரிலேயே வரும்படிக் கேட்டோம். அவர் மறுக்கவே எல்லோரும் நடந்தே மலை ஏறத் தொடங்கினோம். அப்பா எந்தக் குறையும் இல்லாமல் ஏறிவந்தார். என் மனமெல்லாம் அந்த மலையப்ப சுவாமி மீதே இருந்தது. ‘பெருமாளே எப்படியாவது அப்பாவின் நோயை நீக்கி அருள் செய்’ என்று வேண்டிக்கொண்டே வந்தேன். அன்று மாலை திருமலையை அடைந்து இரவு தங்கி மறுநாள் அதிகாலை தரிசனம் செய்தோம்.

அப்படி ஒரு தரிசனம். ஏதோ ஒரு காரணத்தால் சந்நிதிக்குள் ஒரு ஐம்பதுபேரை அனுமதித்தபிறகு கதவை மூடிவிட்டார்கள். நாங்கள் நால்வரும் வேங்கடவன் முன்பாக ஐந்து நிமிடம் நிற்கும் பாக்கியம் கிட்டியது. அற்புதமான பரவச தரிசனம். மலை ஏறும்போதெல்லாம் வேண்டிக்கொண்ட நான் அந்த மாதவனை தரிசித்ததும் என் வேண்டுதலைச் சொல்லவே மறந்துவிட்டேன்.

தரிசனத்திலேயே மூழ்கியிருந்தேன். பிறகு அங்கிருந்து வெளியே வந்த பின்புதான் ஆகா, சந்நிதியில் வேண்டுதலைச் சொல்லவே இல்லையே என்று தோன்றியது. அப்பாவிடம் சொன்னேன். அவர் சொன்னார், ‘அந்த இடத்தின் மகிமை அது. அவன் முன் எந்தக் கவலையும் நில்லாது. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. அனைத்தையும் அவன் அறிவான்” என்றார்.

ஆறுமாதங்கள் சென்றன. அப்பா முன்னைவிட ஆரோக்கியமாக இருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று டாக்டரிடம் சென்று மீண்டும் எல்லா டெஸ்ட்களையும் எடுத்தோம். என்ன அதிசயம்... போனமுறை இந்த நோய் இந்தமுறை மறைந்திருந்தது. டாக்டர் அசந்துப்போனார். அப்பாவின் ‘தன்னம்பிக்கைதான் அவரைக் காப்பாற்றியிருக்கிறது’ என்றார். அப்பாவுக்கு இருந்தது தன்னம்பிக்கை மட்டுமில்லை அந்த வேங்கடவன் மேல் வைத்த நன்னம்பிக்கையும்தான் அல்லவா!

- எஸ். ரகுநந்தன், மதுரை