Published:Updated:

திருமலை திருப்பதி!

திருவேங்கடவன்
பிரீமியம் ஸ்டோரி
திருவேங்கடவன்

திருப்பதியில் கோவிந்த நாமம் பிறந்த கதை!

திருமலை திருப்பதி!

திருப்பதியில் கோவிந்த நாமம் பிறந்த கதை!

Published:Updated:
திருவேங்கடவன்
பிரீமியம் ஸ்டோரி
திருவேங்கடவன்

திருப்பதி வேங்கடவனை `கோவிந்தா... கோவிந்தா...' என்று அழைத்து வழிபடுவதற்கான காரணத்தைச் சொல்கிறது ஒரு திருக்கதை. அகத்தியர் தொடர்பான அந்தக் கதை நம்மைச் சிலிர்க்கவைப்பது!

திருமலை திருப்பதி!

எழுவார் விடைகொள்வார் ஈன்துழாயானை,
வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்-
மனச்சுடரைத் தூண்டும் மலை.

- பொய்கையாழ்வார்

வேங்கடவனை நாடிவரும் பக்தர்களை எழுவார், விடை கொள்வார், வைகல் தொழுவார் என மூன்றுவிதமாகச் சொல்கிறார் பொய்கையாழ்வார்.

ஒருவர் இந்த உலகத்தின் செல்வத்தைக் கேட்டு அவன் சந்நிதிக்கு வந்து அமர்கிறார். வேங்கடவனோ கேட்கும் வரம் கொடுப்பவன். உடனே செல்வம் கிடைக்கிறது. பக்தர் திருப்தியாகி அவனை நமஸ்கரித்துவிட்டு அவன் சந்நிதியிலிருந்து விலகித் தன் வேலையைப் பார்க்க எழுந்து புறப்பட்டுவிடுகிறார். இவரைத்தான் ஆழ்வார், ‘எழுவார்’ என்கிறார்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இறைவனைச் சரணடைந்து, ‘அப்பா எனக்குப் பிறவிப் பிணி தீர்த்துவிடு’ என்று வேண்டிக்கொண்டு முக்தி ஒன்றையே கேட்டு, அதையே விடையாகக் கொள்ளும் பக்தர் களும் உண்டு. அவர்களையே, ‘விடைகொள்வார்’ என்கிறார்.

மூன்றாம் வகையினரோ பக்தியில் தன்னையே மறந்தவர்; தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மறந்தவர். அவர் சிந்தனையில் எப்போதும் துளசி மாலை அணிந்த அந்த வேங்கடவனின் தியானமே இருக்கிறது. இவர்களே வைகல் தொழுவார்.

பக்தர்களில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வேங்கடவனோ அருள்பாலிப்பதில் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. மூவருக் குள்ளும் இருக்கும் தீவினையை அழிக்கிறவன் அந்தத் திருவேங்கடவன் என்கிறார் ஆழ்வார்.

ஆசையே பிறப்புக்குக் காரணம் என்கிறார்கள் ஞானிகள். பகவானையே அடையவேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும் அதுவும் ஓர் ஆசைதான். வேதவதி ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியைக் கணவனாக அடைய பேராவல் கொண்டாள். அதுவே அவளை பத்மாவதியாகப் பிறக்கச் செய்தது. பெருமாள் ஶ்ரீநிவாஸராக அவதரித்து, பத்மாவதியைத் தேடிவந்து திருமணம் செய்துகொண்டார்.

ஶ்ரீநிவாஸர் திருக்கல்யாணம் சிறப்பாக முடிந்தது. பெருமாள் திருமலைக்குப் புறப்படுவது என்று முடிவு செய்தார். பத்மாவதியோடு புறப்படத் தயாரானபோது ஆகாசராஜன் மனம் வருந்தினான். தான் செல்லமாய் சீராட்டி வளர்த்த மகள் எந்த வசதியும் இல்லாத திருமலையில் கஷ்டப்படுவாளோ என்று வருந்தினார்.

அவரின் எண்ண ஓட்டத்தை அறிந்த மகாலட்சுமி, ‘தாயைப் போல வகுளாதேவி உடன் இருந்து பணிவிடை செய்ய பத்மாவதிக்கு எந்தக் குறையும் நேராது’ என்று தேற்றினார். ஆகாசராஜன் மனம் தேறி இருவருக்கும் விடைகொடுத்தான்.ஶ்ரீநிவாஸனும் பத்மாவதியும் கருட வாகனம் ஏறி வேங்கடாசலம் விரைந்தனர். தேவர்களும், பிரம்மனும் பெருமாளைப் பின்தொடர்ந்தனர்.

திருமலை திருப்பதி!

திருமலையில் குடியேறும் முன்பாக அகஸ்திய முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றனர். அவர்களை அகஸ்தியர் வரவேற்றார். ஆகாசராஜன் மன்னர். அவர் தேவாதிதேவர்களை உபசரிக்கும் செல்வச்செழிப்பு மிக்கவர்.

ஆனால் ரிஷி ஏகாந்தம் விரும்புபவர். அவருக்குப் பெருங்கூட்டம் தொந்தரவாகிவிடக் கூடாது என்று தேவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார் பெருமாள். பிரம்மாவும் பெருமாளின் சம்மதத்தைப் பெற்று அங்கிருந்து புறப்பட்டார். மகாலட்சுமித் தாயாரும் பெருமாளை வேண்டி அவரின் சம்மதம் பெற்று, அங்கிருந்து புறப்பட்டு கொல்லாபுரம் சென்றாள். அகஸ்தியர் பெருமாளையும் பத்மாவதியையும் வணங்கி வழிபட்டு சில காலம் அங்கேயே தங்கியிருக்க வேண்டிக்கொண்டார். பெருமாளும் அதற்குச் சம்மதித்து அங்கு தங்கினாராம். இது புராணம் சொல்லும் திருக்கதை.

இவ்வாறு திருமலை திருப்பதி தொடர்பாக புராணங்களில் காணப்படும் செய்திகள் பலவாறு இருக்க, நாட்டுப்புறக் கதைகளாகவும் வாய்மொழிக் கதைகளாகவும் பல கதைகள் மக்களிடையே புகழ் பெற்று விளங்கின. அவற்றில் ஒன்றுதான் ‘திருப்பதி பெருமாளை ஏன் கோவிந்தா என்று அழைக்கிறோம்’ என்பதற்கு விளக்கமாக அமையும் நாட்டுப்புறக் கதையும். இதோ அந்தக் கதை...

அகத்தியர் தன் ஆசிரமத்தில் பெரிய கோசாலை வைத்திருந்தார். அதில் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்தன. பத்மாவதியைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக ஒருமுறை வேங்கடவன் அவர் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார். முனிவரும் வேங்கடேசனை வணங்கி வரவேற்றார். அப்போது வேங்கடவன் அகத்தியரிடம் தனக்கு ஒரு பசுவினைத் தானம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.

மூவுலகையும் காக்கும் இறைவன் தன் குடிலுக்கு வந்து தன்னிடம் தானம் கேட்பது குறித்துப் பெருமகிழ்ச்சியடைந்தார் அகத்தியர். ஆனாலும், “ஐயனே, நீர் யார் என்பதை நான் அறிவேன். நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய நியதி எதுவுமில்லை. என்றாலும் சொல்கிறேன். பசுவினை பிரம்மசாரிக்குத் தானம் செய்யக்கூடாது. ஒருவன் இல்லறத்தில் இருக்கும்போதுதான், அவனுக்குத் தானமாகத் தரப்படும் பசுவை நல்ல முறையில் பராமரிப்பான்.

பசு மகாலட்சுமியின் அம்சம். ஒருவீட்டில் பசு இருந்தால், அதைப் பராமரித்து முறையாக கோபூஜை செய்யவேண்டும். இல்லத்தரசி இருக்கும் வீட்டில் அது சிறப்பாக நடைபெறும். அப்படிப் பணிவிடை செய்ய ஆள் இல்லாத பிரம்மசாரிக்குப் பசுவைத் தானமாகத் தர இயலாது. மேலும் கலியுகத்தில் தாங்கள் அவதரித்ததுபோல், அன்னை பத்மாவதியும் அவதரித்திருக்கிறார். நீங்கள் அன்னையைக் கரம் பற்றி தம்பதி சமேதராக இங்கு வருவீர்கள் என்றால், நான் அக்கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானம் அளிக்கிறேன்” என்றார் பணிவுடன்.

பெருமாளும் முனிவர் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்துகொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குப் புறப்பட்டார். முன்னதாக அகத்தியரின் ஆசிரமத்துக்குச் சென்று அவர் தருவதாகச் சொன்ன பசுவையும் வாங்கிச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.

திருமலை திருப்பதி!

அகத்தியரின் ஆசிரமத்துக்குச் சென்றார். அங்கே முனிவர் இல்லை. ஆகவே சீடர்களிடம் வந்த விஷயத்தைக் கூறினார். பசு தானம் கிடைக்குமா எனக் கேட்டார். சீடர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. குருதேவர் இல்லாதபோது, எப்படி அவரின் உரிமையான பசுவை தானம் கொடுப்பது என்று தயங்கினர்.

“குருதேவர் வரும்வரை இங்கேயே தங்கியிருந்தால் நாங்கள் தங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக்கிறோம் குருதேவர் வந்ததும், நீங்கள் அவரின் திருக்கரத்தாலேயே பசுவைப் பெற்றுச் செல்லலாம்’ என்றனர்.

பெருமாள் அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டார். “பரவாயில்லை... நான் புறப்படுகிறேன்” என்று கூறிவிட்டு திருமலைக்குப் புறப்பட்டுவிட்டார். சற்றுநேரத்தில் அங்கு வந்த அகத்தியர் நடந்தவற் றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார். உலகையே காக்கும் நாயகனை ஒரு பசுவின் காரணமாக அலைக்கழித்துவிட்டதற்காக வருந்தினார்.

எப்படியும் பெருமாளைச் சந்தித்து தன்னிடம் உள்ளதில் ஆகச் சிறந்த பசுவினைத் தந்துவிடுவது என்று முடிவு செய்தார். காமதேனு வைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக்கொண்டு, பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக்கொண்டே ஓடினார்.

சிறிது நேரத்தில் எல்லாம், தூரத்தில் பெருமாள் நடந்துசெல்வதை அகத்தியர் பார்த்துவிட்டார். பெருமாளை நோக்கிக் குரல் கொடுத்தார். “சுவாமி கோவு - இந்தா” என்று சத்தமிட்டார்.

தெலுங்கில் ‘கோவு’ என்றால் பசு. ‘இந்தா’ என்றால் எடுத்துக்கொள் என்று பொருள். ஆனால் சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும். மீண்டும் சத்தமாக `சுவாமி கோவு இந்தா’ என்று சொன் னார். அப்போதும் அவர் திரும்பவில்லை.

மீண்டும் மீண்டும் “கோவு இந்தா... சுவாமி கோவு இந்தா... சுவாமி கோவு இந்தா” என்று அழைத்துக் கொண்டேயிருந்தார் அகத்தியர்.

அதுவரை அன்னநடை போட்டுக்கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் இப்போது விரைவாக நடக்க ஆரம்பித்துவிட்டனர். அகத்தியரோ தன் குரலை இன்னும் உயர்த்தி `கோவு இந்தா... கோவு இந்தா’ என்று வேகவேகமாக உச்சரிக்க... அது கேட்பதற்கு ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று ஆனது.

இப்படி, `கோவிந்தா கோவிந்தா’ என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார். திரும்பிப் பார்த்தார். அகத்தியர் மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு அவரிடம் வந்தார். பெருமாள் அவரை ஆசுவாசப்படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், “நீங்கள் `கோவு - இந்தா’ என்று சொன்னதன் மூலம் `கோவிந்தா’ என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப் படுத்தினீர். இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க உகந்த நாமம் ‘கோவிந்தா’ என்பதே. இனி யார் யார் எல்லாம் தம் ஜீவனாகிய பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் எல்லாம்‘கோவிந்தா’ என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும். நான் உடனடியாக அவர்களை நோக்கி அனுக்கிரகம் செய்வேன்” என்று சொல்லி விடைபெற்றுத் திருமலையில் குடிபுகுந்தார் என்கிறது அந்தக் கதை.

அதனால்தான் சங்கரரும் ‘பஜகோவிந்தம் பஜகோவிந்தம்’ என்றார்.

‘கோவிந்தநாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா!’

- தரிசனம் தொடரும்...

நிந்தனை கூடாது!

கான் ஒருவருக்கு ஏராளமான சீடர்கள். அவர்களில் ஒருவன் சற்று மாறுபட்டவன். குரு மெச்சும் வகையில் நடந்து கொள்பவன்.

ஒரு நாள், அதிகாலை எழுந்தவன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குளித்து முடித்து விட்டு, பிரார்த்தனையில் ஆழ்ந்தான். அந்த நேரம் பார்த்து அங்கே குரு வந்தார். அவரை கவனித்து விட்ட சீடன் பெருமையோடு ''குருதேவரே! அதிகாலை பிரார்த்தனை என்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் பாருங்கள்... இவர்கள் எல்லோரும் எப்படித் தூங்குகிறார்கள் என்று!''

இதைக் கேட்டு புன்னகைத்த மகான், ''சீடனே... ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்களை நிந்திப்பதற்காகவே அதிகாலையில் எழுந்து பிரார்த்திக்கிறாய் போலும். இதற்கு பதில், நீ சீக்கிரம் துயில் எழாமல் இருப்பது எவ்வளவோ மேல்!'' என்றார்.

ஆம்... இறைவனைக் குறித்த நமது பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஒப்பீடுகளும் நிந்தனைகளும் கூடாது.

- கே. சுதர்ஷன், தூத்துக்குடி-2