Published:Updated:

தன்னைத் தானே வழிபட்ட ஈசன்!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

திருவையாறில் நிகழ்ந்த அற்புதம் - சக்திதர் -

தன்னைத் தானே வழிபட்ட ஈசன்!

திருவையாறில் நிகழ்ந்த அற்புதம் - சக்திதர் -

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

அற்புதமான சிவத்தலம் அது. அங்குள்ள ஈசனை 24 ஆதிசைவப் பெருமக்கள் பூஜித்து வந்தனர். இந்த ஆதிசைவப் பெருமக்கள் அனைவரும் தங்கள் முறை வரும்போது பூசை செய்வார்கள். இவர்களுள் ஒருவர் காசி யாத்திரை சென்றார். நெடுநாட்களாகியும் திரும்பி வரவில்லை.

தன்னைத் தானே வழிபட்ட ஈசன்!

இதற்கிடையில், அவருக்குச் சொந்தமான காணி மற்றும் பல்வேறு சொத்துகளை மற்ற ஆதி சைவப் பெருமக்கள் அனுபவிக்கத் தொடங்கினர். காசிக்குப் போனவரின் மனைவியும் குழந்தைகளும் வேறு கதியின்றி அவ்வூரில் கோயில்கொண்டுள்ள ஈசனிடம் முறையிட்டனர்.

பார்த்தார் பரமசிவனார். வயோதிக வேடம் பூண்டார். காசிக்குப் போன ஆதிசைவரின் கோலத்தில் இல்லம் புகுந்தார். இறைவனை அவர் பூஜிக்கும் முறை வந்தது. பூஜைகள் புரிந்து ஆலய மடத்தில் தங்கியிருந்தார். சென்றவர் வந்துவிட்டார் என்று எண்ணிய மற்றவர்கள், மெள்ள மெள்ள அவருடைய சொத்துகளிலிருந்து விலகினர். இந்த நிலையில் காசிக்குச் சென்றிருந்த வேதியர், நிஜமாகவே ஊர் வந்து சேர்ந்தார்.

ஏற்கெனவேதான் திரும்பி வந்துவிட்டாரே! இவர் யார் புதிதாக? ஊர்க்காரர்களுக்குச் சந்தேகம். ஊர் மன்றம் இருவரையும் விசாரணைக்கு அழைத்தது. இரண்டு பேரும், தத்தமது ஆவணங்களைக் காட்டினர். கையெழுத்து ஒப்பீடும் நடந்தது. இரண்டாமவருடைய ஆவணங்களே உண்மை என்பதை ஊர் தெரிந்து கொண்டது.

எனில், முன்னால் வந்த ஏமாற்றுக்காரன் யார்? அனைவரும் சுற்றித் தேடும்போதே ரிஷபாரூடராக, பரமேஸ்வரி பக்கத்தில் இருக்கக் காட்சி கொடுத்தார் பரமேஸ்வரர். எல்லோரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியுமாய் ஈசனைத் தொழுது வணங்கினர். இந்த அற்புத அருளாடல் நிகழ்ந்த தலம் எது தெரியுமா? திருவையாறு! இந்த நிகழ்ச்சியை ‘ஐயாறு அதனில் சைவனாகினாய்’ என்பார் மாணிக்கவாசகர்.

இங்கே மூலவர் பஞ்சநதேஸ்வரர் - சுயம்பு மூர்த்தி. இவரின் லிங்கத் திருமேனி ப்ருத்வி (மண்) லிங்கம் என்பதால், லிங்க பாணத்துக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம். பாணத்துக்குப் புனுகுச் சட்டம் சார்த்தப்படும். ஐயாற்றீஸ்வரர், செம்பொற் சோதி, ஜெப்பேசர், கயிலாயநாதர், பிராணதார்த்திஹரர், மகாதேவ பண்டாரகர், பஞ்ச நதேஸ்வரர் என்று திருநாமங்கள் கொண்ட இவருக்குக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். அந்தப் பெரிய கவசத்தில் பசுவின் உருவமும் அதன்மீது திரிசூல வடிவமும் உள்ளன. எனவே, இவருக்கு ‘திரிசூலி’ என்றும் ஒரு பெயர் உண்டு.

அம்பாள் அறம்வளர்த்த நாயகியாம் தர்மஸம் வர்த்தினியும் விசேஷமானவள். இங்கே இவள் விஷ்ணு ஸ்வரூபினி; சங்கு சக்கரத்துடன் காட்சி தருபவள். வெள்ளிக்கிழமை இரவுகளில், மகா லட்சுமி வந்து தர்மஸம்வர்த்தனி சந்நிதியில் நிற்க, தீபாராதனை நடைபெறும். விஷ்ணுவைச் சந்திக்க லட்சுமி வருவதாக ஐதீகம்!