Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரண மலையிலிருந்து...
பிரீமியம் ஸ்டோரி
தோரண மலையிலிருந்து...

தோரண மலை அற்புதங்கள் தேரையர் தரும் மருத்துவ விளக்கங்கள்!

வாரணமும் தோரணமும்!

தோரண மலை அற்புதங்கள் தேரையர் தரும் மருத்துவ விளக்கங்கள்!

Published:Updated:
தோரண மலையிலிருந்து...
பிரீமியம் ஸ்டோரி
தோரண மலையிலிருந்து...

`விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்பாதங்கள்; மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்; முன்பு செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ எனப் போற்றிப் பரவுகிறது கந்தர் அலங்காரம்.

வாரணமும் தோரணமும்!

ண்மைதானே... எக்காலமும் நம்மைக் காத்து நிற்கும் தெய்வம் அல்லவா கந்தன். வேண்டும் வரங்களை நாம் கேட்பதற்குமுன் வாரி வழங்கும் வள்ளலும் அவனே. இதற்கு உதாரணமாகத் தோரண மலை பக்தர்கள் பலரின் வாழ்வில், அவர்களுக்குக் கிடைத்த வரங்களைச் சொல்லலாம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமத்தில் வசித்தவர் அந்த அன்பர். ஒருநாள் அவருக்கு ஒரு கனவு. பிரமாண்டமான யானை ஒன்று படுத்திருப்பது போன்று ஒரு காட்சி. கனவு தொடர... அந்தக் காட்சி மேலும் தெளிவானபோது, அவர் கண்டது யானையைப் போன்றதொரு மலையை.

அந்த மலைதீரத்தில் கோயில் ஒன்றையும் கண்டார். பக்தியோடு இவர் அந்தக் கோயிலுக்குச் செல்ல அங்கே அவருக்குப் பரிவட்டம் கட்டப்படுகிறது. யானை ஒன்று அவருக்கு மாலையிடுகிறது. அவ்வளவுதன் சட்டென்று விழித்துக்கொண்டார் அன்பர். கனவு குறித்து பெரிவர்களிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் கூற, `பரிவட்டம் கட்றதும் யானை மாலை போடுறதும் அதிர்ஷ்டத்துக்கான அறிகுறி. இனி எல்லாமே முன்னேற்றம்தான்’ என்று கூறியிருக்கிறார்கள்.

அன்பருக்கு மிகவும் சந்தோஷம். ஆனாலும் அடுத்த சில நாள்களில் அந்தக் கனவை மறந்தே போனார் அன்பர். ஓரிரு மாதங் களுக்குப் பிறகு, யதேச்சையாக ஒரு பத்திரிகையை அவர் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு படம் அவரின் கவனத்தை ஈர்த்தது. அதை உன்னிப்பாகக் கவனித்தவர், ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளானார்.

ஆம்! அவர் கனவில் கண்டது போன்ற அதே தோற்றத்தில் ஒரு மலைக்கோயில். பரவசத்துடன் கோயில் பற்றிய விவரத்தைப் படிக்கத் தொடங்கினார். அந்தக் கட்டுரை தோரணமலையின் மகிமையை விவரித்திருந்தது. விரைவில் கோயிலுக்குச் செல்வதென்று முடிவெடுத்தார். அடுத்த சில வாரங்களில் புறப்பட்டும்விட்டார்.

தோரணமலையை அடைந்தவர், அங்கிருந்த ஒவ்வொரு கணமும் இனம்புரியா ஆனந்தத்தில் திளைத்ததாகச் சொல்கிறார். மட்டுமன்றி, அவர் தோரணமலைக்கு வந்து சென்றபிறகு, வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷடகரமான திருப்பங்கள், தொழிலில் முன்னேற்றம், விவசாயத்தில் லாபம் என படிப் படியான வளர்ச்சியைக் கண்டார். அப்புறம் என்ன... அனைத்துக்கும் காரணமான தோரணமலையானைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார்.

``இப்போதும், எவ்வித காரியங்களை - புதிய முயற்சிகளைத் தொடங்குவதாக இருந்தாலும் தோரணமலை முருகனைத் தரிசித்து அவரின் உத்தரவு பெற்ற பிறகே தொடங்குகிறேன். அந்தக் காரியங் களும் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றியாகவே முடிகின்றன. தோரணமலை முருகனின் துணை இருந்தால் நாம் தொட்டதெல்லாம் துலங்கும்!’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொண்டார்.

இங்ஙனம் குமரனின் திருவருள் இந்தத் தலத்தில் பொங்கிப் பெருகித் திகழ்ந்ததால்தான் அகத்தியரின் சீடரான தேரையர் இங்கே விரும்பி உறைந்தார் போலும். இப்படியும் சொல்லலாம்... கந்தனே அவரை இங்கு வரவழைத்து மருத்துவப் பணி செய்யும் சிந்தையை அவருள் நுழைத்து மகத்தான பல அற்புதங்கள் நிகழவும் வழிவகுத்து அருள்செய்திருக்கிறான்!

தோரணமலை
தோரணமலை
ஓவியர் ஸ்யாம்

தேரையரின் மருத்துவப் பணிகளும் அவர் அருளிச்செய்த மருத்துவ விளக்கங்களும் மகத்துவமானவை. அவர் தம்முடைய ஞானநூல்களில் வெந்நீர் குடித்தால் என்னவாகும், குளிர்ந்த நீர் எதற்கான அருமருந்து என்றும் விளக்குகிறார். ஆம், குளிர்ந்த நீர் வெறிநோயைச் சாந்தப் படுத்தும். வெந்நீர் குளிர்ச்சியைப் போக்கும் என்பது அவர் தரும் விளக்கம்.

மேலும், கோட்டையைக் காக்கும் அகழி போன்று உடலைக் காக் கும் பச்சடி குறித்தும் சுவாரஸ்ய தகவலைச் சொல்கிறார் தேரையர். அது என்ன பச்சடி தெரியுமா? முதலில் இந்தப் பாடலைக் கவனியுங்கள்...

பொரிய லாற்பித்த மிரியலாமது
பூசங்கதலி பீரம்பூசினி வழுதுணை
கருணைபாக லவரை கொத்தவரை
முருங்கையிலை முதலாக முள்ளங்கியும்

பச்சடிக்கிணை வச்சிராயுதப்
பகழியால் கோடை யகழிபோல்
மெய்யுற்ற கபச் செருக்கினைத்
துரத்தி யாயுளை யிருத்துமாலது...


இப்பாடல் மூலம் சித்தர் பிரான் தேரையர் விளக்குவது என்ன தெரியுமா? கறிகாய்களைப் பொரியல் செய்து உண்டால், பித்த நோய் நீங்கும். உடற்சூடு விலகும். இனிப்புப் பூசனிக்காய், வாழைக்காய், பீர்க்கங்காய், வெண் பூசனிக்காய், கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, பாகற்காய், அவரைக்காய், முருங்கை, கொத்தவரைக்காய், முள்ளங்கி முதலானவற்றைப் பொரியல் செய்து உண்பது மிகவும் நல்லது.

கோட்டையைக் காக்கும் அகழியைப் போன்று நம் உடலைக் காக்கக் கூடியது இஞ்சிப் பச்சடி. கபப் பெருக்கை ஓட்டி, உயிரைக் காக்கும் ஆதலால் இஞ்சிப் பச்சடி, வெள்ளரிப் பிஞ்சு பச்சடி, பாகற்காய் பச்சடி, இளங்கத்தரிக்காய் பச்சடி, மிளகாய்ப் பச்சடி, நெல்லிக்காய் பச்சடி, வேப்பம் பூ பச்சடி ஆகியவை உடலுக்கு நல்லனவாம் என்று விளக்குகிறார் தேரையர்.

மேலும் அவர் நோய்களின் வகைகள், நோய் நீக்கு முறைகள், மருந்து செய் வகைகள், மருந்து வேகத்துக்கு உபசாந்தி, பத்திய முறைகள் ஆகியவை குறித்தும் வழிகாட்டுகிறார். அன்றாடம் நாம் பயன்படுத்தும் தானியங்களை, பொருள்களையே அவர் மருந்தாகச் சுட்டிக்காட்டி நம்மை வியக்கவைக்கிறார்.

சில எளிய தகவல்கள் உங்களுக்காகவும்...

சீரகத்தை இரும்புக் கரண்டியிலிட்டு நெய் விட்டு, வறுத்துப் பொடித்துத் தேனில் குழைத்து நாவினால் சுவைத்துச் சாப்பிடவும் இதனால் விக்கல், கபத்தினால் ஏற்படும் வாந்தி மட்டுப்படும். நன்கு பசி எடுக்கும்.

கரும்புச் சர்க்கரையைப் பாலில் கலக்கி, சோற்றில் விட்டுப் பிசைந்து உண்ணவும். அப்பம், நெய், பானகம், கனி வகைகள் உண்டு உடல் வெப்பத்தைத் தணிக்கலாம்.

வெள்ளை உள்ளிப் பூண்டினை உரித்து நெய் விட்டு, வதக்கி உண்ணலாம். இதனால் உடல் உள்வலி நீங்கும்.

கொள்ளு எனும் காணப் பயறு ரசம் வைத்து உணவில் சேர்த்து உண்டால், உடலில் நீரேற்றம் நீங்கும். தினைமாவினைத் தேன் விட்டுப் பிசைந்து உண்டுவர உடல் பருமன் நீங்கும்.

இங்ஙனம் உணவையே மருந்தாக்கி பயன்பெற வைக்கும் அரிய தகவல்கள் `தேரையர் தரு’ முதலான நூல்களில் உண்டு. இவை மட்டுமா? உடம்பு பிடித்து விடுதலையே ஒன்பது வகையாகப் பிரித்துச் சொல்கிறார் தேரையர். அவை தட்டல், முறுக்கல், இழுத்தல், இறுக்கல், கரங்கட்டுதல், மல்லாத்துதல், பிடித்தல், அழுத்தல், அசைத்தல் ஆகியவை ஆகும்.

இவை ஒவ்வொன்றின் செய்முறை குறித்தும் பலாபலன்கள் குறித்தும் தேரையர் தரும் விளக்கங்கள் நம்மை வியக்கவைப்பவை!

- தரிசிப்போம்...

அபூர்வ பொக்கிஷம்

ஆஞ்சநேய கவசம்!

கிடைப்பதற்கு அபூர்வமான ஆஞ்சநேயர் கவசம் நடுப்பக்க புத்தகமாக உங்கள் மூலம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

நீராடும்போது கடைப்பிடிக்க வேண்டிய நியதி களை அறிந்து தெளிவு பெற்றோம்! - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

உத்தியோகப் பிரச்னைகள் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு கட்டுரையும் தகவல்களும் சிறப்பு!
- இரா.ஜனனி, எரகுடி

ரலட்சுமி விரதம் குறித்த வழிகாட்டல்களும் விளக்கங்களும் பயனுள்ளவை!
- தி.சீதாபதி, சென்னை

ராகவேந்திரரின் அருள் குறித்து விளக்கிய லட்சுமி கடாட்சம் தொடர் சிலிர்க்கவைத்தது.
- நிர்மலா ராவ், சென்னை

டிப்பூர நாயகி ஆண்டாளின் கட்டுரையும் படங்களும் அற்புதமாக இருந்தன, நன்றி!
- கே.அன்னபூரணி, திருச்சி