Published:Updated:

வாரணமும் தோரணமும்! - 8

தோரணமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகன்

தோரண மலை அற்புதங்கள்

வாரணமும் தோரணமும்! - 8

தோரண மலை அற்புதங்கள்

Published:Updated:
தோரணமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகன்

அனைத்துக்கும் மூலம் ஆதிசிவன். அந்தப் பேரொளியின் அருள் பிரவாகம் கந்தன். கந்தனை அவன் அடியார்கள் ஆறுமுக சிவம் என்று போற்றுவார்கள். அந்த அழகனின் அணுக்கத்தோடும் அருளோடும் அகத்தியரும் தேரையரும் திருப்பணி செய்த தோரண மலையை தரிசிப்பதும் வழிபடுவதும் நாம் பெற்ற பெரும்பேறு.

வாரணமும் தோரணமும்! - 8

மலைக்கு மேலே குகைக்கோயிலில் கிழக்கு நோக்கி ஞானசொரூப னாக எழில்கோலம் காட்டுகிறான் அழகு முருகன். முன்னர், சித்தர் பெருமக்களால் போற்றி வழிபடப் பட்டு, பின்வந்த காலத்தில் தன்னை மறைத்துக் கொண்டு, பிறகு மீண்டும் தென்னகம் செழிக்க அடியார்களின் வாழ்வு வளம் பெற சுனை ஒன்றில் தன்னைத் தானே வெளிப்படுத்தி அருள் செய்த தோரணமலையானை தரிசிக்கும் தருணத்தில் நம்மை நாம் மறந்து போய்விடுவோம். அவ்வளவு சாந்நித்தியம்... அவ்வளவு அருள்பெருக்கு அவன் சந்நிதியில்!

இதழின் புன்னகையை தண்ணருள் பொங்கும் கண்களிலும் காட்டி, வேலும் மயிலும் உடனிருக்க அருளும் தோரணமலைக் கந்தனை தரிசிக்கும்போது, ‘யாமிருக்க பயமேன்?’ எனக் கேட்பதாகத் தோன்றுகிறது.

அதற்கேற்ப நம் மனமும் ‘குறையொன்றும் இல்லை நீயிருக்க’ எனத் துள்ளலோடு அவனைக் கொண்டாடி மகிழ்கிறதே தவிர, நாம் மனதில் நினைத்து வந்த வேண்டுதலை முன்வைக்க மறந்துபோகிறது. ``அதனால் ஒன்றும் பாதகம் இல்லை... நாம் சொல்லாவிட்டாலும் நம் குறையை நீக்கி அருளும் அற்புத தெய்வம் எங்கள் முருகன்’’ என்கிறார், ஆலயத்தை நிர்வகிக்கும் அன்பர் செண்பகராமன்.

தோரணமலையான் மட்டுமா... அவன், தான் குடியிருக்கும் இந்த மலைதீரம் முழுக்கவும் அல்லவா அற்புதங்களை நிறைத் திருக்கிறான்! அதனாலன்றோ அகத்தியர் இங்கே அற்புதமாய் தமிழ்ப்பணி செய்தார். தேரையரோ மருத்துவத்தில் அற்புதங்கள் செய்தார்!

ஸித்திகளில் எட்டு வகை உண்டு!

உருவை அணுபோன்று சிறுக்கச் செய்யும் அணிமா.

மலை போன்று பெருக்கச் செய்யும் மஹிமா.

எடையளவில் பெரிதும் கனக்கச் செய்யும் கரிமா.

பஞ்சு போன்று இலகாகிவிடச் செய்யும் லஹிமா.

ஈர்க்கும் வல்லமை தரும் வசித்வம்.

கூடு மாறும் சக்தி தரும் பரகாயம்.

விரும்பியதை அடையச் செய்யும் காரிய ஸித்தி.

இறை நிலையில் லயிக்கச் செய்யும் ஈசத்வம்.

இந்த எண்வகை ஸித்திகளையும் பெற்றவன் சித்தனாகலாம். ஆனால், இவற்றையும் கடந்து நின்றவர்களே நம் சித்த புருஷர்கள். அவர்கள் விரும்பி உறையும் மலைத் தீரங்களில் தோரணமலை குறிப்பிடத் தக்கது. காரணம் இந்த மலை தன்னிடம் பொதிந்து வைத்திருக்கும் அற்புதங்கள்தான்.

வாரணமும் தோரணமும்! - 8

அவற்றில் ஒன்றுதான் தாமரைச் சுனை. ``தோரணமலையின் தாமரைச் சுனை தெய்வ சாந்நித்தியம் நிறைந்தது. சித்தர் பெருமானின் திருவருள் சூழ்ந்த இடம் அது’’ என்று நம்மிடம் பகிர்ந்துகொண்ட உலக சித்தர் கலைகள் ஆய்வு மையத்தின் நிறுவனரான அன்பர் மு.அரி, அதுபற்றி மேலும் விவரித்தார்.

``பொதுவாக சுனைகளில் தடாகங்களில் தாமரை ஒன்று மலர்ந்தால் அடுத்தடுத்து வளர்ந்து நீர்ப்பரப்பை மறைக்கும்படி நிறைந்துவிடும். ஆனால், தோரணமலை தாமரைச் சுனையில் ஓரிரு தாமரைகளே மலர்ந்திருப்பது ஆச்சர்யம்தான். அதுமட்டுமன்றி, அதிகம் புழக்கத்தில் இல்லாத நீர்நிலைகளில் பாசி படர்ந்துவிடும். தாமரைச் சுனை அப்படி யல்ல, தெளிந்த நீர் பரப்போடு திகழ்கிறது. சுனைப் பகுதியும் சுற்று வட்டாரமும் ஒருவித அதிர்வோடு திகழ்வதை அனுபவத்தில் உணர முடிகிறது’’ என்கிறார் வியப்புடன்!

தோரண மலை சார்ந்த மேற்குமலைத் தொடர் பகுதிகளில் கல்தாமரையும் உண்டு என்கிறார்கள், இந்தப் பகுதி மக்கள்.

கல் தாமரை அபூர்வமானது. சம அளவு இரவும் பகலும் உள்ள ஒரு நிலப்பரப்பில் தோன்றுவது. அதுவும் குறிப்பிட்ட சில ஆண்டு களில்தான் மலைப்பகுதிப் பாறை இடுக்குகளில் தோன்றும். ``இதன் கிழங்குகளுக்கு விநோத ஆற்றல் உண்டு. இரும்பு, செம்பு ஆகிய உலோகங்களின் தன்மையையே மாற்றிவிடும் சக்தி உண்டு’’ என்கிறார்கள், இப்பகுதிப் பெரியவர்கள் சிலர். கல்தாமரைப் பொடியை, விசேஷமான ரசமணி செய்வதற்கும் பயன்படுத்துவார்களாம்!

இவை மட்டுமன்றி இரும்புளி, கல்லால மரம் போன்ற விருட்சங்களும் இங்கே உண்டு. இரும்புளி என்ற விருட்சம் உறுதித்தன்மையில் தேக்குக்கு நிகரானது. சித்திரை மாதம் மட்டுமே பூ பூக்கும். அப்போது இந்தப் பிராந்தியம் முழுக்க அதன் நறுமணத்தை நுகரலாம் என்கிறார்கள். இதன் அடியில் நின்றால், சிறிது நேரத்திலேயே நம் உடல்சூடு தணிந்து தேகம் குளிர்ந்துபோகுமாம்! தினமும் இதன் அடியில் சிறிது நேரம் தங்கினாலே பிணிகள் மட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள்.

அதேபோல் கல்லால மரமும் சிறப்புக்குரிய விருட்சம். குரு பகவானின் ஆதிக்கம் உடையது இந்த மூலிகை. மூலிகை சக்தி ரகசியங்களை விவரிக்கும் ஞானநூல்கள் ‘அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்...’ என்று குறிப்பிடுகின்றன. குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபடுவதால், குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லைகள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த விருட்சங்கள் இப்படியென்றால், தெய்வமாகவே மக்கள் போற்றும் ஒரு விருட்சமும் இங்கு உண்டு. ஆம்! லட்சுமி தீர்த்தத்துக்கு மேலே... படிப்பாதையில் பயணித்தால் சிறிது தொலைவில் வேம்பு மரம் ஒன்றை தரிசிக்கலாம். இதை கற்பகாம்பிகையாகவே பாவித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

வாரணமும் தோரணமும்! - 8

கர்ப்பிணி ஒருத்தியைக் கொள்ளையர்கள் சிலர் துரத்தி வந்தார்களாம். பாறைகள் சூழ்ந்த ஓரிடத்தை அடைந்ததும், தப்பிக்க வேறு பாதைகள் இல்லாமல் மாட்டிக்கொண்டாள் அந்தப் பெண். திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. ``அம்மா காப்பாற்று’’ என்று தெய்வத்தைத் துணைக்கு அழைத்தாளாம். அப்போது அம்பாளின் அருளால் பாறை ஒன்று பிளந்து அவள் தப்பிக்க வழிகாட்டியதாம். அந்தப் பெண்ணுக்கு அருள்செய்த அம்பிகையே இந்த வேம்பில் உறைந்திருக்கிறாள் என்பது நம்பிக்கை!

அதேபோல், தோரணமலையில் புற்று ஒன்றும் அதன் அருகிலேயே உரல் வடிவில் திகழும் சுனை ஒன்றும் இருக்கின்றன. மட்டுமன்றி, அகத்தியர் வழிபட்டதாகச் சொல்லப்படும் சுயம்பு லிங்கம் ஒன்றும் உண்டு.

மூர்த்தி சிறியதெனினும் கீர்த்தியில் பெரிது அந்தச் சுயம்புலிங்கம்!

- தரிசிப்போம்...

குருவாக அருளும் சிவபெருமான்!

திண்டிவனம் - மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரில் இருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். தேவ குரு வழிபட்டு அருள்பெற்ற தலம் இது. மூலவர் சிவபெருமானே குருவாக அருளும் ஆலயம். ஜாதகத்தில் குருபலம் சரியாக அமையாதவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism