Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை!
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை!

தோரணமலை அற்புதங்கள்!

வாரணமும் தோரணமும்!

தோரணமலை அற்புதங்கள்!

Published:Updated:
தோரணமலை!
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை!

மங்கலம் அருளும் மூர்த்தம் சிவலிங்கம். கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும் புலப்படாத அருவத் திருமேனிக்கும் மூலமானவர் சிவபெருமான். அவரை வழிபட ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. உலக முடிவில் அண்ட சராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் லிங்கம் என்றும் போற்றுவார்கள் ஞானிகள்.

வாரணமும் தோரணமும்!

மும்மூர்த்தியரின் அம்சங்களையும் உள்ளடக்கியது லிங்கம். அதன் அடிப்பகுதி- பிரம்ம பாகம்; நடுப்பகுதி- ஆவுடை என்ற பீடத்துள் அமைந்துள்ள விஷ்ணு பாகம்; மேற்பகுதியில் உள்ள பாணம்- ருத்ர பாகம். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும்.

லிங்கத்தில் பல வகை உண்டு. குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறுவது இஷ்ட லிங்கம். இது ஆன்மார்த்த லிங்கம் என்றும் கூறப்படும். உலக உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களால் விதிப்படி ஸ்தாபிக்கப்பட்டவை பரார்த்த லிங்கம். தானாக உண்டாவது சுயம்பு லிங்கம். அம்பிகையால் வழிபடப் பெற்றது தேவிக லிங்கம். தேவர்கள் அர்ச்சித்தது, திவ்ய லிங்கம் எனப்படும். அசுரர்களால் பூஜிக்கப்பட்டது ராட்சச லிங்கம் மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம். முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷக லிங்கம்.

தோரணமலையில், சுனைகளின் ஓரம் கொட்டிக்கிடக்கும் சிறு கற்களும்கூட லிங்கத் திருவடிவைக் காட்டி நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன. மலைப்பாதையில் - படிக்கட்டுகளில்... ஏறக்கூறைய பாதிதூரம் கடந்துவிட்ட நிலையில், ஓரிடத்தில் வித்தியாசமான இரண்டு பாறைகளைக் காணமுடிகிறது. சற்று நிதானித்து கூர்ந்து கவனிப்போருக்கு இருபெரும் சித்தர்கள் காட்சியளிப்பதுபோன்று தோன்றும். பக்தர்கள் சித்தர் பாறை என்றே அழைக்கிறார்கள்.

அங்கேயே ஓரிடத்தில் பாறையிலேயே லிங்க வடிவைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். எப்போது எவரால் உருவாக்கப்பட்டது என்று அறியமுடியவில்லை. அந்த இடத்தில் தெய்வச் சாந்நித்தியம் நிறைந்திருப்பதை உணரமுடியும். இங்கேயும் ஒரு குகை உள்ளது. இந்த இடத்திலிருந்து லட்சுமிச் சுனைக்குச் செல்ல முடியும். இதற்கும் மேலாக தொடர்ந்து மேலே ஏறினால், இடையில் சிற்சில இடங்கள் சமவெளிப் பரப்பாகத் திகழ்கின்றன. அப்படியான ஓரிடத்தில் சுயம்புலிங்கம் ஒன்று உண்டு என்கிறார்கள் பக்தர்கள். அகத்தியர் வழிபட்ட லிங்கமாம். அதன் அருகிலும் சிறு சுனை ஒன்று உண்டு. அந்த நீரைக்கொண்டு பக்தர்களே அந்தச் சிறிய சுயம்புலிங்கத்தை அபிஷேகித்து வழிபடலாம் என்கிறார்கள், தோரணமலைக்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்கள்.

வாரணமும் தோரணமும்!

தோரணமலை முழுக்கவும் இதுபோன்ற பல சுனைகள் உண்டு. அவற்றில் சில அக்காலத்தில் மருத்துவத் தயாரிப்புக்குப் பயன் பட்டிருக்கலாம் என்கிறார் ஆலய நிர்வாகி செண்பகராமன். ``இந்த மலையிலும் பொதிகை மலை தீரங்களில் இன்னும்பல இடங்களிலும் உதகநீர்ச் சுனைகளும் உண்டு என்றொரு தகவலைப் பகிர்ந்து கொண்டார் அன்பர் மு.அரி.

இதுபற்றி சித்தர்பிரான் கோரக்கர் அருளிய மலைவாகடம் எனும் நூல் தெளிவாக விவரிக்கிறது. சித்தபுருஷர்களில் குறிப்பிடத் தக்கவர் கோரக்கர். விபூதியில் தோன்றியவர் என்கிறது இவரைப் பற்றிய வரலாறு. வெகுநாள்களாகப் பிள்ளை இல்லாமல் வருந்திக்கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி. அவள் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தின் பலனாக சித்தர் மச்சேந்திரர் பிக்ஷை கேட்டு அவளின் இல்லம் வந்தார். அவருக்குப் பிக்ஷையிட்ட அந்தப் பெண்ணுக்கு விபூதிப் பிரசாதம் தந்தார். விபூதி பிள்ளை வரம் தரும் என்றார். ஆனால் அவளோ அதன் மகத்துவத்தை அறியாமல் கோவகத்தில்... அதாவது. மாட்டுத் தொழுவத்தில் இருந்த வெந்நீர் அடுப்பில் விபூதியைக் கொட்டிவிட்டாள்.

வருடங்கள் ஓடின. மீண்டும் வந்தார் மச்சேந்திரர். விஷயம் அறிந்து அந்தப் பெண்ணைக் கடிந்துகொண்டார். `சித்தன் வாக்கு சிவன் வாக்கு. நிச்சயம் பலிக்கும்!’ என்றவர், அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார். கோவகத்தில் விபூதி கொட்டப்பட்ட வெந்நீர் அடுப்புச் சாம்பல் குவிந்திருந்த இடத்திலிருந்து வெளிப்பட்டான் சிறுவன் ஒருவன். அவனே கோரகன் என்றும் கோரக்கன் என்றும் மருவியது என்கிறது கோரக்கச்சித்தரின் திருக்கதை.

வாரணமும் தோரணமும்!

கோரக்கர் அபூர்வத் தகவல்கள் மூலிகை மருத்துவக் குறிப்புகளை அருளியிருக்கிறார். அவ்வாறு அவர், நாகார்ச்சுனாதி முனிவர்களுக்கு அருளிய உபதேச தகவல் தொகுப்பே கோரக்கர் மலைவாகடம் ஆகும். இதை மலைவள சாஸ்திரம் என்று போற்றுவார்கள் சித்த மரபினர். இந்த நூல் முப்பூ உண்டாகும் விவரத்தைக் கூறுகிறது.

சமுத்திரத்தில் சூரியனால் உறிஞ்சப்பட்டு மேகங்களில் களியுப்பாகத் தேங்கிநிற்பது, மேகங்கள் இழையும்போது இடியாய் மழையாய் கீழே வந்து சேர்கிறது. அவை நிலங்களில் விழும்போது நிலத்தில் சில இடங்களை உவர்நிலமாக்கி உவர் உப்பாய் பூத்திருக்கும். இதை பூநீர் உப்பு என்பார்கள். இப்படியே கடலில் விழுவது பாறை உப்பாகிக் கிடக்கும். அவற்றில் சில நீரில் மிதப்பதும் உண்டு.

விண்ணிலிருந்து இடி மலைகளில் பாயும்போது, இடி விழுந்த இடம் பிளந்துகொள்ள, இடைவெளிகளில் உட்சென்று மணற் வடிவில் தேங்கும். பின்னர் மழைபொழியும்போது பாறை இடுக்களின் வழியே வெளியேறி சிறு பள்ளம் போன்ற இடங்களில் தேங்கிநிற்கும். இதையே உதகநீர் என்பார்கள்.

மஞ்சள் கலந்தது போன்று கருமையும் லேசாகப் பசுமைப் படர்ந்தும் திகழும் இந்த நீர் பிசுபிசுப்பாக இருக்கும். மேற்கொண்டு மழை பொழிந்தாலும் மழை நீர் உதகத்தின் மேலேயே தேங்கும். பின்னர் வெயிலில் மழை நீர் வற்றினாலும் உதகநீர் வற்றாது. இதில் இலைகளோ, குச்சிகளோ விழுந்தால் கல்லாகிவிடும். பறவைகளோ, விலங்குகளோ இந்த நீரைப் பருகினால், அவையும் கல்லாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்கிறது கோரக்கர் மலைவாகடம்.

``ஆனால் இப்படி ஏற்படும் உதகநீர்ச் சுனைகள் வெகுஅபூர்வம். இந்த மலைத்தீரத்திலும் உதகநீர்ச் சுனைகள் இருக்க வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார் சித்தர் கலை ஆர்வலரும் ஆய்வாளருமான மு.அரி. அபூர்வச் சுனைகளைப் போன்றே விநோதக் குகைகளும் உண்டு. அந்தக் குகைகளின் முகப்பு நுழைவாய் மேல்நோக்கியபடி, அதாவது வானம் நோக்கியபடி திகழும். இதுபோன்ற குகைகளைச் சித்தர்கள் பரகாயப் பிரவேசத்துக்கும், ஆகாய மார்க்கப் பயணத்துக்கும் பயன்படுத்துவது உண்டாம்!

தோரணமலையிலும் அப்படியான குகை உண்டு. இங்கு மருத் துவப் பணி செய்த தேரையரும் ஆகாயமார்க்கமாக விண்ணெழுந்து பறந்து தேசம் கடந்திருக்கிறார் எனும் தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன!

- தரிசிப்போம்...

சதாசிவ மூர்த்தம்!

சி
வப்பேறு அருளும் சிவ வடிவங்களுள் சதாசிவ மூர்த்தமும் ஒன்று. சிவ ஆகமத்தை உபதேசிக்கும் பொருட்டு, பெருமான் ஐந்து முகங்களுடன் சதாசிவனாகக் காட்சியளிக்கிறார்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேலைக் கோபுரத்தின் முதல் நிலை- மேற்புறத்தில் வலப் பக்கம் சதாசிவ வடிவம் உள்ளது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மேலைக் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் சதாசிவரை தரிசிக்கலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2-ஆம் கோபுரத்தில் சதாசிவ திருவடிவம் உள்ளது.

எலிபெண்டா குகையில் ஐந்து முகங்கள், பத்து திருக்கரங்களுடன் நிற்கும் நிலையில் சதாசிவ மூர்த்தியின் வடிவம் காணப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism