வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று வடபத்ர காளியை வலம் வந்து வழிபடுவது மிகவும் விசேஷம். சுபகாரியங்கள் தடைகள் இல்லாமல் நல்லபடியாக நடந்தேறவும், தீவினைப் பாதிப்புகள் நீங்கவும் இந்த அன்னையை வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்தக் காளியை வழிபட்டு தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றியாகவே முடியும்’ என்பது நம்பிக்கை!
தஞ்சை மாவட்டம் - கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது சன்னாபுரம். இங்கே கோயில் கொண்டிருக்கும் வடபத்ரகாளி அம்மன் சுற்றுவட்டார மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். இந்த அன்னையை தரிசித்து வழிபட்டால், காரிய வெற்றி கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.கருவறையில் ஆயுதம் தரித்த 16 கரங்களும், கோரைப் பற்களுமாக சந்நிதியில் காலடியில் கிடக்கும் அசுரனை வதைக்கும் திருக்கோலத்தில் மறக்கருணை காட்டியபடி அருள்கிறாள் வடபத்ரகாளி. இந்த அன்னையை ஒருமுறை தரிசித்தால் போதும்; நம் தீவினைகள் யாவும் நீங்கிவிடும்.

அம்மன் சந்நிதியின் எதிரில் இருக்கும் ஆலமரம் மிகத் தொன்மையானது என்கிறார்கள். கோயிலை வலம்வரும்போது இடது ஓரத்தில் இன்னொரு வடபத்ரகாளி காட்சி தருகிறாள். ஒரு காலத்தில் இரு சிலைகளும் ஒரே இடத்தில் இருந்ததாகச் சொல்கின்றனர். ராஜராஜ சோழன் நகர்வலம் வரும்போது, கிளி ரூபத்தில் வந்து வழிகாட்டியதுடன் அவனுக்குக் காப்பாகவும் இருந்து அருளினாளாம் இந்த அம்மன். கிளி ரூபத்தில் காளிதேவியே வருகிறாள் என்பதை உணர்ந்த மன்னன், அன்னையின் சுயரூபத்தைத் தரிசிக்கும் ஆவலோடு இருந்தார்.

ஒருநாள் அவர் முன் தோன்றிய கிளி, `உரல்-உலக்கை சத்தம் ஒலிக்காத சன்னாபுர வனத்தில் குடியிருக்கிறேன். எந்தக் காரியத்தையும் எம்மைத் தொழுதபின் தொடங்கு; வெற்றி காண்பாய்’ என்று அருள்வாக்கு தந்ததாம். அதன்படியே சன்னாபுரம் வந்து காளிதேவியை தரிசித்து மகிழ்ந்தார் ராஜராஜர். அந்த அன்னையின் அருளால் புகழும் வெற்றியும் பெற்றார் எனும் தகவல் சொல்லப்படுகிறது.