Published:Updated:

வேல் வகுப்பு வேல் வழிபாட்டுத் துதிப்பாடல்!

வேலாயுதம்
பிரீமியம் ஸ்டோரி
வேலாயுதம்

தொகுப்பு: வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

வேல் வகுப்பு வேல் வழிபாட்டுத் துதிப்பாடல்!

தொகுப்பு: வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
வேலாயுதம்
பிரீமியம் ஸ்டோரி
வேலாயுதம்

வேலவனின் அடியார்களைத் தீவினை எதுவும் நெருங்காதபடி, வேல் வடிவில் முருகனின் அருள் துணை நிற்கும். வாழ்வில் தீர்க்க முடியாத சங்கடங்கள், கடன் தொல்லை, மனத்தையும் உடலையும் வாட்டும் பிணிகள், நல்லதொரு வேலை வாய்க்காமை, கல்யாணத் தடைகள், தம்பதியிடையேயான மனப் பிணக்குகள், குழந்தைச் செல்வம் இல்லாமை... இப்படியான சகல பிரச்னைகளையும் அவற்றுக்குக் காரணமான முன்வினைகளையும் களைந்து நல்வாழ்வு தரும் வல்லமை முருகன்கை வேலாயுதத்துக்கு உண்டு.

வேல் வகுப்பு 
வேல் வழிபாட்டுத் துதிப்பாடல்!

ற்புதமான இந்த வேலாயுதத்தைப் போற்றி, அருணகிரிநாதர் அருளியதுதான் வேல் வகுப்பு எனும் துதிப்பாடல். ஒரு மண்டல காலம் இந்த வேல் வகுப்பு பாடலைப் பாடி முருகனையும் சக்திவேலையும் வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும்; தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.

சஷ்டி தினங்கள், கார்த்திகை, விசாக நட்சத்திர நாள்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகள்... இவற்றில் ஏதேனும் ஒருநாளில் ஆரம்பித்து ஒரு மண்டல காலம் தொடர்ந்து வழிபடுவது விசேஷம்.

குறிப்பிட்ட காலம் மட்டுமன்றி தினமும் காலையும் மாலையும் குடும்பத்துடன் சேர்ந்து வேல்வகுப்பு பாடலைப் பாடி வழிபடுவதால், சகலவிதமான தடைகளும் நீங்கும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேல் வகுப்பு 
வேல் வழிபாட்டுத் துதிப்பாடல்!

வேல் வகுப்பு பாடல்கள்

பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்த நகை

கறுத்த குழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி

விழிக்கு நிகராகும்

கருத்து: ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாக இருக்கும் வேல், கூரிய நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். வள்ளிப் பிராட்டியின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பு.

பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கசக்கடவுள் பதத்(து) இடு நிகளத்துமுளை

தெறிக்க வரமாகும்

கருத்து: பனை போல் நீண்ட துதிக்கை, அலங்காரத் துணியை அணிந்த முகம், மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றுடன் திகழ்வது வெள்ளை யானை.இதன் அதிபதியான இந்திரனின் கால்களைப் பூட்டியிருந்த விலங்குகளைத் தெறிக்கச் செய்த ஆற்றல் மிக்கது வேல்.

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு

கவிப் புலவன் இசைக்குருகி வரைக்குகையை

இடித்து வழிகாணும்

கருத்து: சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப் படைக்கு உருகி, அவர் அடைப்பட்டிருந்த குகையை இடித்து, அவரை வெளியேற்றி அருளியது வேல்.

பசித்(து) அலகை முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்து அவுணர் உரத்துதிரம் நிணத்தசைகள்

புசிக்க அருள் நேரும்

கருத்து: பசியால் துன்புறும் பேய்கள் புலம்பி அழாதபடி, அசுரர்களின் தேகத்தையும் குருதியையும் அந்தப் பேய்கள் உண்டு களிக்கும்படி அருள்வது வேல். அதர்மவாதிகளுக்குப் பகை வேல் என்பது கருத்து.

சுரர்க்கும் முநிவரர்க்கும் மகபதிக்கும் விதி

தனக்கும் அரிதனக்கும் நரர்தமக்கும் உறும்

இடுக்கண்வினை சாடும்

கருத்து: தேவர்களுக்கும் மனிதர்கள் யாவருக்கும் நேரும் துன்பத்தையும் அதற்குக் காரணமான கர்ம வினைகளையும் அழிப்பது வேல்.

சுடர் பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி

ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்பவொளிர்

ஒளிப்பிரபை வீசும்

கருத்து: சூரியன், சந்திரன், கரை மீறி உலகைச் சூழ்ந்து அழித்துவிடாதபடி கடலைக் கட்டுப் படுத்தும் வடவா முகாக்னி ஆகியவை நாணும் விதம், தன் ஒளியால் எங்கெங்கும் பிரகாசிப்பது வேல்.

துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்கஇடர்

நினைக்கின் அவர் குலத்தை முதலறக்களையும்

எனக்கோர் துணையாகும்

கருத்து: அடியார்களை எவரேனும் கெடுக்க நினைத் தால், அக்கணத்திலேயே அந்தப் பகைவரைச் சாய்த்து, நமக்குத் துணையாகும் வேல்.

சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும்

அறத்தை நிலை காணும்

கருத்து: முருகனின் திருவடிகளைப் புகழும் திருப்புகழ் பாக்களை ஓதி வழிபடும் அடியார்களின் பகையை அழிக்க சினத்துடன் பாய்வது வேல்.

தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி

தரித்த முடிபடைத்த விறல் படைத்த இறை

கழற்கு நிகராகும்

கருத்து: பக்தர்களின் உயிருக்கு ஆபத்து எனில், சிவனாரின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று, காத்து நிற்பது வேல்.

தலத்திலுள கணத்தொகுதி களிப்பின் உணவு

அழைப்பதென மலர்க்கமல கரத்தின் முனை

விதிர்க்க வளைவாகும்

கருத்து: உயிர்கள் மகிழும்படி உணவளிக்க நேரிடும் போது, முருகனின் திருக்கரத்தில் இருந்த படியே... அவர் அதன் நுனியைச் சிறிது அசைத்ததும், தேவையானவற்றைக் கொண்டு வந்து சேர்க்கும் வேல் (வேல், அடியாரின் எண்ணங்களை நிறைவேற்றுமாம்).

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு

வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து

இரவு பகல் துணையதாகும்

கருத்து: தனியாகச் செல்லும் நமக்கு, வலது-இடது புறமும் முன்னும் பின்னும் நின்று இரவு - பகல் எப்போதும் துணை நிற்கும் வேல்.

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்துவளர்

பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில்

விருப்பமொடு சூடும்

கருத்து: அசுரர்களை வீழ்த்தி அவர்களின் தடித்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போன்று தனது திருமுடியில் சூட்டிக்கொள்ளும் வேல். நம் வினைகளை அடியோடு அழிப்பது வேல் என்பது கருத்து.

திரைக்கடலை உடைத்து நிறை புனல் கடிது

குடித்து உடையும் உடைப்படைய அடைத்து

உதிரம் நிறைத்து விளையாடும்

கருத்து:அலைகடலில் உடைப்பு உண்டு பண்ணி யும், அதன் நீரை நொடியில் பருகியும், அதன் உடைப்பு முழுவதையும் அடைத்து அங்கு அசுரர்தம் குருதியை நிறைத்து விளையாடும் வல்லமை கொண்டது வேல்.

திசைக்கரியை முதற் குலிசன் அறுத்தசிறை

முளைத்ததென முகட்டின் இடை பறக்க அற

விசைத்து அதிர ஓடும்

கருத்து: ஆதியில் இறக்கைகளுடன் திகழ்ந்தன மலைகள். அவற்றை இந்திரன் அறுத்தெறிந்தான் என்பது கதை. அந்த மலைகளுக்கு மீண்டும் இறக்கைகள் முளைத்துவிட்டனவோ என்று எண்ணும்படி, அண்டம் அதிர விரையும் வேல், அளவில்லாத ஆற்றல் கொண்டது!

சினத்தவுணர் எதிர்த்த ரணகளத்தில் வெகு

குறைத் தலைகள் சிரித்தெயிறு கடித்து விழி

விழித்தலற மோதும்

கருத்து: களத்தில் வீழ்ந்து கிடக்கும் அசுரர்தம் சிரங்கள் சிரிக்கும்படியும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியும், வாய்கள் அலறும்படியும் சாடுவது வேல்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தன் எனது உளத்தில் உறை

கருத்தன் மயில் நடத்து குகன் வேலே!

கருத்து: உயிர்களின் அக இருள் அகலும்படி திருத்தணியில் ஞானச் சூரியனாக அருள்ப வனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் நம் உள்ளக் குகையில் உறைபவனும், கருணை கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனும், மயூர வாகனத்தைச் செலுத்தும் தலைவனுமாகிய முருகனின் திருவருள் சக்தியே... ஞானமே உருவான வேலே... உன்னை வணங்குகிறேன்.