புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

விரும்பியதை அளிக்கும் விபூதி!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

அ.திருமலை, சென்னை-55

நிலையான செல்வம், தீவினைகளை விலகி ஓடச் செய்யும் வல்லமை, கடன் இல்லாத வாழ்வு, நல்ல குடும்பம், ஆரோக்கியமான வாழ்வு, நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைத் தரும் சிவ ஐஸ்வர்யம்தான் விபூதி.

விரும்பியதை அளிக்கும் விபூதி!

ப்போதும் திருமேனியில் திருநீற்றுடன் திகழும் வாரியார் சுவாமிகளிடம் ஒருமுறை இளைஞர் ஒருவர் துடுக்காக ஒரு கேள்வி கேட்டார். ‘`சுவாமி, நீங்கள் ஏன் தங்கள் உடல் முழுவதும் வெள்ளை அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டுவிட்டார்.

வாரியார் என்ன சொன்னார் தெரியுமா? ‘`சாதாரண மனிதர்கள் குடியிருக்கும் வீடு பிரகாசமாகவும் பூச்சித் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அடிக்கிறோம். அப்படியிருக்க, என் உள்ளத்தில் இறைவன் குடியிருக்கிறான். அவன் குடியிருக்கும் உள்ளத்தைப் பெற்றிருக்கும் இந்த உடலுக்கு நான் வெள்ளை அடித்துக் கொள்வதில் என்ன தவறு?’’ என்று கேட்டாராம்!

ஆமாம்! திருநீறு ஆகிய விபூதி மகத்துவமானது. விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள்- மகிமை என்று பொருள். விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும் முதலில் கறுப்பாகும்; மேலும் மேலும் நெருப்பில் சுட்டால் நீற்றுப் போய் சாம்பலாகிவிடும். சாம்பலின் நிறம் வெளுப்பு. அதை மீண்டும் நெருப்பில் இட்டாலும் அதன் நிறம் மாறாது. அதுவே நிறைவான நிலை. ஆக, நீரற்றுப் போனதே திருநீறு ஆகும்.

கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தோதான் விபூதி அணியவேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும். சம்புடத்தில் இருந்து விபூதியை எடுக்கும்போது, ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் விபூதியை தரிக்கும்போது பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபிக்கவேண்டும்.

விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும். காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.

விபூதியிலும் ஐந்து வகை உண்டு. சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து வகை விபூதி தோன்றியது என்கின்றன ஞானநூல்கள். என்னென்ன தெரியுமா?

விபூதி - விரும்பிய செல்வத்தை அளிக்கும்.
பசிதம்- பரசிவத்துடன் நம்மை ஒன்றவைக்கும்.
பஸ்மம் - பாவங்களை விலக்கும்
சாரம் - துன்பங்களை நீக்கும்
ரக்ஷை - தீமைகள் அணுகாது.

- அ.திருமலை, சென்னை-55