திருத்தலங்கள்
Published:Updated:

குழந்தை வரம் தருவான் விட்டலபுரம் கண்ணன்!

விட்டலபுரம் கண்ணன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
விட்டலபுரம் கண்ணன் கோயில்

தமிழ்நாட்டுப் பண்டரிபுரம்

மராட்டிய மாநிலத்தின் சந்திரபாகா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பண்டரிபுரம். தாய்-தந்தை சேவையே பரமபக்தி என்று வாழ்ந்த பக்தர் புண்டரீகரின் மகிமையை உலகுக்குச் சொல்லும் விதம் பாண்டுரங்கன் கோயில் கொண்ட தலம் அது. அதற்கு நிகராக நம் தமிழ்நாட்டிலும் ஓர் ஆலயம் உண்டு. மாமல்லபுரம் அருகிலுள்ள இந்தக் கோயிலுக்குச் சென்று கண்ணனை வழிபட்டால் குழந்தைப் பேறு முதலான வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

குழந்தை வரம் தருவான் விட்டலபுரம் கண்ணன்!

`பாண்டுரங்கா, பண்டரிநாதா, விட்டலா, விட்டோபா’ என்று எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் கண்ணன் தோன்றிவிடுவான் என்கிறார் பக்த புண்டரீகர்.
தாய்-தந்தை சேவையே பரமபக்தி என்று வாழ்ந்தவர் புண்டரீகர். அவரின் இந்தப் பக்தியின் மேன்மையை ருக்மிணிக்கு எடுத்துக்காட்ட பண்டரிபுரத்துக்கு வந்தார் ஶ்ரீகிருஷ்ணர். புண்டரீகரின் குடிசை வாசலில் சேறு நிறைந்த இடத்தில் நின்ற ருக்மிணி சமேத கிருஷ்ணரை, ஒரு செங்கல்லின் மீது நிற்குமாறு கூறிவிட்டுத் தன் பெற்றோருக்குப் பாதசேவை செய்யலானார் புண்டரீகர்.

‘நீ வந்து வரம் கேட்கும்வரை நான் இங்கேயே நிற்பேன்’ என்று நின்றார் ஶ்ரீஹரி. செங்கல்லின் மீது நின்ற ஶ்ரீகிருஷ்ணர் புண்டரீகரின் விருப்பப் படி அங்கே ஶ்ரீவிட்டலர் என்று திருநாமத் துடன் கோயில் கொண்டார்.

பண்டரிபுரத்தில் ஶ்ரீவிட்டலர் நடத்திய, லீலைகள் அநேகம். ஆபத்தில் அழைத்ததும் ஓடிவரும் தீனதயாளனாகவே இன்றும் விளங்கி வருகிறார். அவரால் ஆட்கொள்ளப்பட்டு ஞானியரானோர் அநேகம். பானுதாஸர், ராமாபாய், சோகாமேளர், ஞானேஷ்வரர், சக்குபாய், நாமதேவர், துக்காராம், ஏகநாதர், ஜனாபாய் என விட்ட லரின் தரிசனம் கண்ட பெரியோரின் பட்டியல் நீளும்! இந்தக் கலியுகத்திலும் நம்பியவரை விடாமல் காப்பதில் விட்டலனுக்கு இணை வேறு யாரும் இல்லை என்பார்கள் பக்தர்கள். நம் தேசத்தில் நாம சங்கீர்த்தனம் எனும் பக்தி முறை செழித்து வளர்ந்ததே பாண்டுரங்கன் அருளால்தான்!

பாரதத்தின் வடக்கே கோயில் கொண்டு கருணை செய்யும் அந்தப் பாண்டுரங்கன் தெற்கேயும் வராமல் இருப்பானா என்ன!

குழந்தை வரம் தருவான் விட்டலபுரம் கண்ணன்!

தொண்டை மண்டலத்தை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் சார்பில் அப்போது (1507-1529) ஆட்சி செய்துவந்தவர் கொண்டையதேவ மகாராஜா. இவர் விட்டலனின் பரமபக்தர். இவருக்கு அருள்செய்த விட்டலன், இவரின் விருப்பப்படி மாமல்லபுரத்தை அடுத்த துளசிவனத்தில், பண்டரிபுரத்தில் உள்ளவாறே எழுந்தருளினார். அங்கேயே ஶ்ரீவிட்டலனுக்கு ஆலயம் எழுப்பி அந்த ஊரையும் `விட்டலபுரம்' என்று மாற்றினார் கொண்டைய தேவமகாராஜா.

இவர் காலத்துக்குப் பிறகு சதாசிவராயர் காலத்தில் (1558-ம் ஆண்டு) இந்தக் கோயில் விஸ்தரிக்கப்பட்டு, திருத்தேர் ஒன்றும் செய்யப்பட்ட வரலாற்றை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. பழைமையைப் பறைசாற்றும் அழகான கற்றளி இந்தக் கோயில். கோபுரம் தாண்டி உள்ளே சென்றால், கொடிமரம் பலிபீடமும் திகழ... கோயிலின் பரந்த அமைப்பும் அமைதியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.

தொடர்ந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்துடன் கூடிய கருவறை. அங்கே ருக்மிணி, சத்யபாமா சமேதராகஶ்ரீபிரேமிக விட்டலன் அருள்கிறார். சுமார் 5 அடி உயரத்தில், இடுப்பில் கை வைத்து நின்ற கோலத்தில் நமக்காகக் காத்து நிற்கிறார்.

காலம் காலமாக நம்மை விடாது ரட்சித்து வரும் இந்த பிரேமிக விட்டலன் கேட்கும் வரம் அளிக்கும் தயாபரன் என்கிறார்கள். மங்கிய விளக்கொளியில் இந்த ஆனந்தக் கண்ணனை தரிசிக்கும்போதே, நம்முள் கவலைகள் மறந்து களிப்பும் நம்பிக்கையும் பிறக்கின்றன. ‘ஜெய் ஜெய் விட்டலா, ஜெயஹரி விட்டலா, பிரேமிக விட்டலா, பாண்டுரங்க விட்டலா!’ என்று நம்மையும் மீறி விட்டல சங்கீர்த்தனம் வெளியாகிறது.

`பிரேமிகன்' என்றால் அன்பானவன், அழகானவன், ஆசையுள்ளவன் என்று பொருள். அழகானதால் ஆசையும் ஆசையால் அன்பும் இவரைக் கண்டாலே பெருகுவது நிஜம்தானே! இங்கு நாமசங்கீர்தன முறைப்படியே அர்ச்சனை என்பதால், மந்திரங் களுக்குப் பதிலாக ‘ஹரே ராம ஹரே ராம, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண...’ எனும் நாமமே ஒலிக்கிறது. இங்கு தினமும் மாலையில் கிருஷ்ண நாம சங்கீர்த்த பஜனையும் நடக்கிறது.

குழந்தை வரம் அருளும் கண்ணனாக இந்தப் பிரேமிக விட்டலன் விளங்குகிறார் என்கிறார்கள் இங்குள்ள அர்ச்சகர்கள். திருமண வரம் அருளும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டு நோய்நொடிகள் தீர்ந்தவர்கள் அநேகம்பேர் என்கிறார்கள். அதுமட்டுமா? இங்கு வந்து விட்டலனை தரிசித்து, அவரின் திருவருளால் தீர்த்துக்கொண்ட பிரச்னைகளும் ஏராளம் என சத்திய சாட்சி சொல்கிறார்கள் பக்தர்கள்.

கேட்க கேட்க பரவசத்தில் கண்மூடி நின்றோம். மூலவருக்கு முன்பு உற்சவர் திருமேனி. இரு தேவியருடன் காட்சி தருகிறார் உற்சவர். கூடவே ஶ்ரீசந்தான லட்சுமி தாயார், சக்கரத் தாழ்வார் ஆகியோரின் உற்சவத் திருமேனி களும் உள்ளன. நெடுநேரம் நின்று கண்ணனை தரிசித்து, தீர்த்தமும் துளசியும் பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தை வரம் தருவான் விட்டலபுரம் கண்ணன்!

கருவறைக்கு எதிரே 5 படிகளுடன்கூடிய தனிச் சந்நிதியில் ஶ்ரீகருடாழ்வார் கண்ணனை கும்பிட்ட நிலையில் காட்சி தருகிறார். கோயில் திருச்சுற்றில் ஶ்ரீசந்தான லட்சுமி தாயார், ஶ்ரீநிவாசப் பெருமாள், ஶ்ரீவரதராஜப் பெருமாள், ஶ்ரீவிக்ஷ்வக்சேனர், ஶ்ரீராமாநுஜர் சந்நிதிகள் அழகிய கற்றளிகளாக உள்ளன. அழகிய விமானத்தோடு காணப்படும் இந்தக் கோயிலின் சுற்றில் நந்தவனமும் இரு உடைபட்ட சிலைகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

இங்கு வந்து திரட்டுப்பால் வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், இந்தக் கோயிலுக்கு வந்து சந்தான மகாலட்சுமி யையும், சந்தான கிருஷ்ணரையும் வழிபட, விரைவில் புத்திரப் பாக்கியம் கிட்டும்; பால் பாயசம் படைத்து வழிபட்டால் கல்வியில் மேன்மை உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

காலை 7 முதல் 10.30 மணி வரையும்; மாலை 5 முதல் 6.30 மணி வரையும் பிரேமிக விட்டலன் ஆலயம் திறந்திருக்கும். ஏகாதசி நாளில் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இங்கு கண்ணன் சிவ-விஷ்ணு அம்சத்துடன் அருள்வதாக ஐதிகம். ஆகவே, சிவராத்திரியும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட வைபவங்களும் இந்த ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

பெரிதும் கூட்டமின்றி அமைதியும் பெரும் சாந்நித்தியமும் கொண்டு விளங்கும் இந்தத் தென்னக பண்டரிபுரம், அடியார்தம் குறைகளை எல்லாம் போக்கும் தலமாக விளங்குகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம் மிக சுத்தமாகவும் தெய்விகத் தன்மையுடனும் பரமாரிக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் செல்பவர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய அற்புத ஆலயம் இது. நீங்களும் ஒருமுறை குடும்பத்தோடு சென்று, உங்களுக்காக காத்திருக்கும் அழகிய கண் ணனை ஒருமுறை தரிசித்து வாருங்களேன்!

எப்படிச் செல்வது?: சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது விட்டலபுரம் பிரேமிக விட்டலர் திருக்கோயில்.