Election bannerElection banner
Published:Updated:

2021 தைப்பொங்கல் நாளின் சிறப்புகள்... பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? #PongalFestival
பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? #PongalFestival

இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

ஆடிப் பட்டம் தேடி விதை என்பார்கள். அப்படி ஆடி மாதத்தில் விதைக்கப்பட்டவை விளைச்சலோடு அறுவடைக்குத் தயாராகும் காலம் தை. விளைவு மகிழ்வாக இருந்தால் கொண்டாட்டம்தானே. அவ்வகையில் வியர்வை சிந்த உழைத்த மக்களுக்குப் பலனைத் தரும் காலத்தைக் கொண்டாடும் விதமாகவும், வாழ்வளித்த இயற்கைக்கும் இறைக்கும் நன்றி செலுத்தும் வகையிலும் கொண்டாடப்படும் அற்புதத் திருநாள் தைத் திங்களின் முதல் நாளாம் பொங்கல் திருநாள்.

தமிழர்தம் மண்ணின் பெருமைக்கும் அவர்தம் மரபுக்கும் புகழ் சேர்க்கும் அற்புதத் திருநாள் இது. இங்ஙனம் மண் மணக்கும் தைப் பொங்கல் திருநாளுக்கு ஆன்மிகப் பெருமைகளும் உண்டு. அதுபற்றி விவரிக்கிறார் `காளிகாம்பாள் கோயில்’ சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.

சூரியன்
சூரியன்

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள். உத்தராயன காலத்தை தேவர்களின் பகல் பொழுது என்றும், தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவுப் பொழுது என்றும் சொல்வர்.

சரி, தக்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்குகிற சிறப்பைப் பார்ப்போமா?

தை மாத விரதங்கள்

தை மாதப் பிறப்பான (14.1.21) நாளைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை ‘மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள்.

இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

பகலவனைத் துதிக்கப் பன்னிரு திருப்பெயர்கள்... மந்திரங்கள்!

இந்தத் திருநாளில் சூரியனின் திருப்பெயர் மகிமைகளைப் போற்றும் விதம் கீழ்க்காணும் வரிகளைச் சொல்லி வழிபடுவதால் புண்ணிய பலன்கள் வாய்க்கும் என்கின்றன சாஸ்திரங்கள்

ஓம் மித்ராய நம:

ஓம் ரவயே நம:

ஓம் சூர்யாய நம:

ஓம் பாநவே நம:

ஓம் ககாய நம:

ஓம் பூஷ்னே நம:

ஓம் ஹிரண்யகர்பாய நம:

ஓம் மரீசயே நம:

ஓம் ஆதித்யாய நம:

ஓம் ஸவித்ரே நம:

ஓம் அர்காய நம:

ஓம் பாஸ்கராய நம

சூரிய வழிபாடு
சூரிய வழிபாடு

பொங்கல் திருநாளில் மட்டுமல்ல, அனுதினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமன்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட தைப்பொங்கல் திருநாளின் சிறப்பு... பொங்கல் வைக்க நல்ல நேரம்!

தைப்பொங்கல்
தைப்பொங்கல்

சனாதன தர்மத்தில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரணமில்லாமல் செய்யாதே என்கிறது சாஸ்திரம். யாராவது ஒருவர் பயன் அடையவேண்டும். ஏதாவது ஒரு பலன் கிடைக்க வேண்டும்.

ஓர் ஆண்டில் 12 சங்கராந்திகள் வரும். சங்கராந்தி என்றால் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பெயர்வது. சூரியபகவான் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார். அவ்வாறு அவர் இடம் பெயரும் நாள்களே சங்கராந்தி. மேஷ ராசியில் சூரியன் உச்சமடைவார் என்பதால் மேஷ சங்கராந்தி நாளே (சித்திரை) நம் வருடப் பிறப்பாக அமைகிறது. சூரியனே இந்த உலகின் மையமாகத் திகழ்வதால் அவர் இடம் பெயரும் நாளே மாதப்பிறப்பாகக் கருதப்படுகிறது. சூரியனிலிருந்தே நமக்கு சக்தி கிடைக்கிறது.

பொங்கல்
பொங்கல்

சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் நாளே மகர சங்கராந்தி. அதுவே தை மாதப் பிறப்பாக அமைகிறது. 2021 ம் ஆண்டு மகர சங்கராந்தி என்பது வாக்கியப் பஞ்சாங்கப்படி காலை 11.50 மணிக்கு நிகழ்கிறது. எனவே பொங்கல் வைப்பது என்பது அந்த நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்.11.50 லிருந்து 12.30க்குள் பொங்கல் வைத்து வழிபடலாம். அதிகபட்சமாக மதியம் 1.30க்குள் வைத்துவிடவேண்டும். காரணம் வியாழக்கிழமை 1.30- 3 ராகுகாலமாக அமையும் என்பதால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு திருவோண நட்சத்திர தினத்தன்று மாதம் பிறக்கிறது. இந்த நாள் வஜ்ர யோகம், பாலவ கரணம், மீன லக்னத்தில் அமைகிறது. இதெல்லாமே மிகச்சிறந்த முகூர்த்தமாக அமைகிறது. குறிப்பாக குருவாரமான வியாழக்கிழமை மீன லக்னத்தில் ( தனுசுவும் மீனமும் குருவுக்குண்டான லக்னங்கள்) அமைவது சிறப்புடையது. அதனால் இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு குருவினுடைய கடாட்சத்தைப் பெற்றுத்தரும். குருவின் அருள் இருந்தால் எந்தவிதமான துன்பமும் பறந்துவிடும். எனவே நாளைய தினம், பொங்கல் வைத்துவழிபட மிகவும் சிறப்புடைய தினமாக அமைந்துள்ளது.

இந்த நன்னாளில் ஆலயம் தொழுவது மிகவும் சிறப்பானது. உத்திராயனப் புண்யகாலத்தின் தொடக்க நாள் என்பதால் மந்திர உபதேசம் பெற மிகவும் சிறந்தநாள். இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்வதும் அவசியம். புண்ணியகால தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் கட்டாயம் அதைச் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கமுமே தானங்கள் செய்ய ஏற்ற தினமாகும். அதிலும் மகர சங்கராந்தி தினம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் கட்டாயம் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதன்மூலம் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

சண்முக சிவாசார்யர்
சண்முக சிவாசார்யர்

மாட்டுப் பொங்கல் தினத்தில் என்ன செய்யலாம்?

தை மாதத்தின் 2-ஆம் நாள் (15-ம் தேதி), மாட்டுப் பொங்கல். ‘காவோ வை ஸர்வா தேவதா:’ என்கிற வாக்கின்படி, கோமாதாவைப் போற்றுகிற அற்புதமான நாள்.

மகாலட்சுமி மட்டுமின்றி அனைத்துத் தெய்வங்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம்! எனவே, பசுவுக்கான அனைத்து வழிபாடுகளைச் செய்வது உத்தமம். பசுவுக்கு உணவளிப்பதும் அதனைப் பராமரிப்பதும் நம் பாவங்களை விலக்கி, சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை அறிந்து, வணங்குங்கள்!

இவற்றைக் கடைப்பிடித்த நம் முன்னோர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு நாமும் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமின்றி நம் சந்ததியினரது வாழ்க்கையும் சிறக்கும்!

‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவை யான உணவுகளுக் காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கு இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு