Published:Updated:

முன்னோர்களின் ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் ஆடி அமாவாசை... சில வழிகாட்டுதல்கள்!

ஆடி அமாவாசை - விளக்கமும் வழிகாட்டுதலும்!

எல்லா நாள்களும் இறைவனையும் நம் முன்னோர்களையும் வழிபட உகந்தநாள்களே. ஆனபோதும், சில நாள்களில் நிச்சயம் இந்த வழிபாடுகளை முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என்று வகுத்துள்ளனர் பெரியோர்கள். பொதுவாக, பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்றே தங்கள் சந்ததியினரைப் பார்க்க பூமிக்கு வரத் தொடங்குவார்கள். புரட்டாசி மாத அமாவாசையன்று பூமிக்கு வந்து சேர்வார்கள்.

முன்னோர் வழிபாடு
முன்னோர் வழிபாடு

பின்பு தை அமாவாசை அன்று மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்பது ஐதிகம். எனவே, இந்த மூன்று அமாவாசைகளையும் பித்ரு வழிபாட்டுக்கு நிச்சயம் அனுசரிக்க வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசிகளை நிச்சயம் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள். ஆடி அமாவாசையின் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

Vikatan

``இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சாஸ்திரங்கள் அறிவுறுத்தியிருக்கும் அந்தக் கடமைகள் `சம்ஸ்காரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. நாற்பது சம்ஸ்காரங்களில் `சோடஷ சம்ஸ்காரம்' என்று சொல்லப்படும் பதினாறு கர்மாக்களைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அந்தப் பதினாறு கர்மாக்கள், பிறப்புக்குக் காரணமான கர்ப்பாதானம் என்னும் சாந்திமுகூர்த்தம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், உபநிஷ்கர்மணம், அன்னபிராசனம், சௌளம், உபநயனம், கோதார விரதம், உபநிஷத விரதம், சுக்ரியம், கோதான விரதம், சமாவர்த்தனம், கல்யாணம், அக்னியாதானம் என்று விதிக்கப் பட்டிருக்கின்றன.

முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரி
முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரி

அதேபோல் ஒருவர் மறைந்த பிறகு நாம் செய்யவேண்டிய கர்மாக்களும் பதினாறு. அவை மந்த்ர சம்ஸ்காரம், தண்ணீர் கொடுத்தல், மூன்று முதல் பன்னிரண்டு வரை என்பது பத்து நாள்களில் நாம் கொடுக்கின்ற பிண்டம், அஸ்தி சஞ்சயனம், பதினொன்றாவது நாள் ஏகாதச பிண்டம், பன்னிரண்டாவது நாள் சபிண்டீகரணம், பிறகு ஆப்திகம் போன்ற பதினாறு காரியங்கள் இறந்த பிறகு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிராத்தம் அல்லது திதி கொடுத்தல் என்பது, ஐந்து வகைகளாக உள்ளது. அன்ன சிராத்தம், ஹிரண்ய சிராத்தம், ஆம சிராத்தம், பார்வன சிராத்தம், சபிண்டீகரண சிராத்தம் என்று ஐந்து விதமான சிராத்தங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிரத்தை என்றால், மறைந்த நம் பெற்றோர்களுக்கு எந்த தோஷமும் இல்லாமல் செய்யக்கூடிய கர்மாக்களையே சிராத்தம் என்று கூறுவார்கள்.

முன்னோர் வழிபாடு
முன்னோர் வழிபாடு

சுகமாக வாழ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதற்குக் கண்டிப்பாக பித்ருக்களின் ஆசிகள் நமக்குத் தேவை. எனவே, சிவராத்திரியன்று சிவராத்திரி விரதம், அன்று பலிதர்ப்பணம், திலஹோமம், ஆடி அமாவாசையன்று திலஹோமம், பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் பித்ரு தோஷம் ஏற்படாது.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறுநாள்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாள்களாகும். அட்சயதிருதியை என்பது தங்கம் வாங்குவதற்கான நாள் என்று சொல்வார்கள். ஆனால், அன்று பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு உகந்த ஒரு நாளாகும். நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள்...
முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரி

சிராத்தத்தின் முக்கியத்துவம் பற்றி கூர்மபுராணம், பிரம்ம புராணம், கருட புராணம், ஆதித்ய புராணம் போன்ற நூல்களில் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராயனமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணாயனம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

நாளை ஆடி அமாவாசை. இந்த நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். `திலம்' என்றால் `விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள்.

முன்னோர் வழிபாடு
முன்னோர் வழிபாடு

எனவே, `திலதானாது அசக்யம் மே பாபம் நாசய கேசவ' என்று கூறுவார்கள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம். இந்த எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய தினம் பித்ருக்களை - மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

Vikatan

யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

முன்னோர் வழிபாடு
முன்னோர் வழிபாடு

அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள். இதற்குக் குறிப்பிட்ட காரணம் என்று எதுவுமில்லை. இருப்பினும் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள்.

சந்திரன் விராட புருஷனாகிய பெருமாளின் மனதிலிருந்து தோன்றியவர் என்று வேதம் கூறுகிறது. சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடி வெற்றி பெறும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். ஏனென்றால், நாளை முதல் நாம் உலகத்தைப் பார்க்கலாம் என்ற ஆசையும் ஆர்வமும்தான் சந்திரனின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

முன்னோர் வழிபாடு
முன்னோர் வழிபாடு

சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாகச் சொல்லப்பட்டிருக்கிறது போலும்!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு