Published:Updated:

கல்வி, செல்வம் வரமருளும் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா- சிதம்பரத்தில் கோலாகலம்!

நடராஜர்
நடராஜர்

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்று, மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனப் பெருவிழா. மற்றொன்று, ஆனித் திருமஞ்சனத் திருவிழா.

சிவபெருமானை லிங்க வடிவமாக வழிபடும்போது நித்தமும் அபிஷேகம் செய்யவேண்டும். சிவனுக்கு 'அபிஷேகப் பிரியன்' என்றே பெயர் உண்டு. ஆனால், அதுவே சிவனின் 64 திருவடிவங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் நடராஜர் திருமேனிக்கோ, ஓர் ஆண்டில் ஆறுதினங்கள் மட்டுமே அபிஷேகங்கள் செய்யப்படும். மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களே அபிஷேகங்களுக்கு உகந்த தினங்கள் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நடராஜர்
நடராஜர்

இந்த ஆறில் இரண்டு அபிஷேகங்கள் பெரும்பாலான சிவாலயங்களிலும் திருவிழாவாகவே கொண்டாடப்படும் சிறப்பினைப் பெற்றவை. ஒன்று மார்கழி திருவாதிரை ,மற்றொன்று ஆனி உத்திரத் திருமஞ்சனம். திருமஞ்சனம் என்றால் நீராட்டுதல் என்று பொருள். ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனம் ஆகையால் அதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

தை மாதம் தொடங்கும் உத்திராயனப் புண்ணியகாலத்தின் இறுதி மாதம் ஆனிமாதம். வடமொழியில் ஆனி மாதத்தை 'ஜேஸ்டா' என்று அழைப்பார்கள். 'ஜேஸ்டா' என்றால் 'பெரிய' என்று பொருள். பெயருக்கேற்ப இந்த மாதமும் அனைத்துத் தமிழ்மாதங்களையும் விட அதிகமான நாள்களை உடைய மாதமாகத் திகழ்கிறது. சூரியன் ரிஷப ராசியில் இருந்து நகர்ந்து மிதுன ராசியில் பயணிக்கும் காலம். ஆனி மாதத்தில்தான் அனைத்து ஆலயங்களிலும் 'ஜேஸ்டாபிஷேகம்' நடைபெறும். ஆனி மாதத்தில் பிறந்த மகனையோ, மகளையோ 'ஜேஸ்ட குமாரன்', 'ஜேஸ்ட குமாரத்தி' என்று சிறப்பித்துக் கூறுவதுண்டு. இத்தகைய சிறப்புமிக்க ஆனி மாதத்தில்தான் ஆடல் வல்லானுக்குத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது சிதம்பரம். சைவசமயத்தில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். ஈசன் உருவம், அருவம், அருவுருவம் என மூன்று தன்மையிலும் அருளும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
சிவபெருமான்
சிவபெருமான்

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது சிதம்பரம். சைவசமயத்தில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். ஈசன் உருவம், அருவம், அருவுருவம் என மூன்று தன்மையிலும் அருளும் தலமாக இத்தலம் விளங்குகிறது. இந்தத் தலத்தில்தான் மாணிக்கவாசகர், நந்தனார், திருநீலகண்ட நாயனார் ஆகிய திருத்தொண்டர்கள் முக்திப்பேறு பெற்றனர். சமயக் குரவர்கள் நால்வரும் வந்து வழிபட்ட பேற்றினைக் கொண்ட இந்தத் தலத்தில் அமைந்துள்ள நான்கு கோபுர வாசல்களும் சமயக்குரவர் நால்வரைக் குறிக்கின்றன. மேற்குக் கோபுர வாசல்வழியாக திருநாவுக்கரசரும் தெற்குக் கோபுர வாசல் வழியாக சம்பந்தப் பெருமானும் வடக்குக் கோபுர வாசல் வழியாகச் சுந்தரரும் கிழக்குக் கோபுர வாசல்வழியாக மாணிக்க வாசகரும் கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டனர் என்று சொல்லப்படுகிறது.

சிதம்பரம் தலத்தில் இறைவன் ஆடலரசனாகக் காட்சிகொடுக்கிறார். இறைவன் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. அவை, திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் ஆகியன. இவற்றுள் சிதம்பரமே 'பொற்சபை' என்று போற்றப்படுகிறது. இங்கு இறைவன் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' எனப்படும். ஒருமுறை பாற்கடலில் நாராயணன் பள்ளிகொண்டிருந்தபோது மெள்ள தன் இதழ் விரித்துச் சிரித்தார். இத்தனை மகிழ்வோடு அவர் புன்னகைப்பதைக் கண்ட ஆதிசேஷன், " தேவரீர்... எழில் கொஞ்சும் இந்தப் புன்னகைக்குக் காரணம் என்னவோ?" என்று கேட்டார். அதற்கு நாராயணரும், "ஈசன் திருநடனம் புரிகிறார். கண்டோர் வியக்கும் இந்தப் பிரபஞ்ச ரகசியத்தின் மறுவடிவமான அந்த ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அதுதான் காரணம்" என்று பதில் உரைத்தார்.

நடராஜர்
நடராஜர்

ஆதிசேஷன், தானும் அந்த அற்புத நடனத்தைக் கண்டு களிக்க விரும்புவதாகக் கூற, நாராயணன் அவரை இந்த பூமியில் பதஞ்சலி முனிவராகப் பிறக்க வரம் அளித்தார். பதஞ்சலி முனிவர், 'இறைவனைத் தரிசிக்க உகந்த தலம் சிதம்பரம்' என்று கண்டு அங்குவந்து தவமியற்றினார். அதே போன்று சிவ நடனத்தைக் காண விரும்பிய வியாக்ரபாதரும் இந்தத் தலத்திற்கு வந்து தவமியற்றினார்.

ஆனந்த நடனமாட இசைந்தார். நடனம் ஆடியதால் சிவனுக்கு, 'கூத்தன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது. தில்லைக் கூத்தனின் தாண்டவம் , படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை நிகழ்த்தும் பிரபஞ்ச இயக்கத் தத்துவமாக விளங்குகிறது.

சிதம்பரம்
சிதம்பரம்

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்று, மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனப் பெருவிழா. மற்றொன்று, ஆனித் திருமஞ்சனத் திருவிழா. இந்த இரு தினங்களிலும் ஆடல் வல்லான் நடனக்கோலத்தில் கனக சபையில் எழுந்தருளிக் காட்சி கொடுப்பார். ஆனித் திருமஞ்சன நாளில் விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகப் பொருள்களைக்கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்விப்பர்.

இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன பிரம்மோற்சவம் கடந்த 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வின் பத்தாம் திருநாளான ஆனித் திருமஞ்சனம், நாளை ( 8.7.19) நடைபெற உள்ளது. ஆனித் திருமஞ்சனத்தைக் கண்ணாரக் கண்டால், முன்வினைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதிகம்.

நடராஜர்
நடராஜர்

நவகிரகங்களுள் சூரியன் மிதுன ராசியிலும், சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் இந்த நன்னாளில் சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த இரண்டு ராசிகளுக்கும் அதிபதி புதன். ஆகையால், ஆனித் திருமஞ்சன அபிஷேகம் கண்டு வணங்க, கல்வி மற்றும் செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு