Published:Updated:

ஆதிசங்கரர், ராமாநுஜர்... இந்திய பக்தி மரபை செழிக்கச் செய்த இறை அவதாரங்கள்! #Video

அந்தக் காலத்தில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் ஆசார்யர் ராமாநுஜர்.

இந்திய ஞான மரபு காலம்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு புதிய தத்துவங்களை ஏற்கும் தன்மையுடையது. இந்த மண்ணில் சைவம் வைணவம் ஆகிய பெரிய மதங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு மதத்தின் ஆத்மாவான மனித நேயத்தை இழந்துவிட்டன. குறிப்பாக சங்கரர் காலத்தில் பண்டிதர்கள் ஞான மரபையும் பக்தியையும் புறந்தள்ளி வெறும் கர்ம மரபை மட்டும் பின்பற்றினர். அதாவது வேள்விகள், சடங்குகள் ஆகியவற்றைச் செய்வது கர்ம மார்க்கம். ஆனால் அவை அனைத்து மக்களுக்குமான ஆன்மிக மரபாக இல்லாமல் குறிப்பிட்ட சிலரோடு சுருங்கிப் போய் விட்டன. இதைப் பயன்படுத்தி சமணமும் பௌத்தமும் இந்த மண்ணில் பெரும் செல்வாக்குப் பெற்றுப் பரவியது. அந்தக் காலகட்டத்தில் அதற்கு மாற்றாகப் புதிய சிந்தனைப் போக்கோடு தோன்றி இந்தியாவெங்கும் பயணித்து `அத்வைதம்’ என்னும் சித்தாந்தத்தைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வு ஓங்கச் செய்து நல்வழிப்படுத்தியவர் ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்

பிரம்மம் சத்யம் ஜகன் மித்யா

ஆதிசங்கரர் காலத்தில் பௌத்தமே பெரும் மதமாக இருந்தது. பௌத்தர்களின் தத்துவம் சூன்ய வாதம். இந்த உலகில் காணும் அனைத்தும் சூன்யமே. ஏன் உலகமே சூன்யம் என்று பொருள். சூன்யம் என்பதை மாயை என்றும் கொள்ளலாம். ஆனால், ஆதிசங்கரர் அனைத்தும் மாயை என்றால் இந்த உலகைத் தோற்றுவித்தவர் யார்... இந்த உடலை இயக்கும் உயிர் எது... என்ற கேள்வியை முன்வைத்து ஒரு தரிசனத்தைக் கண்டடைந்தார். அது, `பிரம்மம் சத்யம், ஜகன் மித்யா’ என்பது. இந்த உலகம் மாயை அழியக்கூடியதுதான். ஆனால் இந்த உலகை தோற்றுவித்த - இயக்குகிற பிரம்மம் அழிவில்லாதது என்ற தத்துவத்தை அறிவித்தார். இந்த உலகமெங்கும் வியாபித்திருக்கும் பொருள்களில் நிறைந்திருப்பது பரப் பிரம்மமே என்று அறிவித்து பரமாத்மாவும் ஜீவத்மாவும் ஒன்றே என்று விளக்கினார். இதற்கு அத்வைதம் என்று பெயரிட்டார். அத்வைதம் என்றால் இரண்டல்ல என்று பொருள். இது அதுகாறும் இருந்த சிந்தனை மரபில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது.

வர்ணங்களின் அடிப்படையில் இருந்த பாகுபாடுகள் தீர்க்கப்பட வேண்டியது ஆன்மிக எழுச்சிக்கு அவசியம் என்பதை சங்கரர் உணர்ந்தார். அதற்கு அடிப்படையாக அவர் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றைக் குறிப்பிடுவது உண்டு. ஈசனே ஆதிசங்கரர் முன் தோன்றி இந்த உலகில் பிறப்பால் பேதமில்லை என்பதை உணர்த்தினார். இதை ஆதிசங்கரர் நாடெங்கும் எடுத்துரைத்தார். ஏற்கெனவே பிரிந்திருந்த ஷண்மதங்களையும் அதன் வழிபாடுகளையும் ஒன்றிணைத்தார். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலினார். லலிதாம்பிகையின் உபாசகராக விளங்கிய சங்கரர் விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினார். பிரம்ம சூத்திர பாஷ்யம். விவேக சூடாமணி முதலிய பாஷ்யங்களையும் பஜ கோவிந்தம், ஸௌந்தர்ய லஹரி, மனிஷா பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம், காலபைரவாஷ்டகம், சுப்ரமணிய புஜங்கம் போன்ற ஸ்தோத்திரங்களையும் எழுதினார்.

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பல இடங்களில் பலியிடும் வழக்கம் இருந்தது. சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி உயிர்பலி கூடாது என்ற நியமத்தைக் கொண்டுவந்தார். இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் இந்த நியதியை உருவாக்கிய பெருமை சங்கரரையே சாரும்.

உலகில் இருந்த பேதத்தை நீக்கி நல்வழிகாட்ட அந்த ஈசனே சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக வந்து உதித்தார். சிறுவயதிலேயே தன் வாழ்வை ஆன்மிக நெறிப்படி வகுத்துக்கொண்ட ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி சொரூபமாக இந்தப் பாரத தேசமெங்கும் தன் திருப்பாதங்களால் நடந்து மடங்களை ஸ்தாபிதம் செய்து, ஆலயங்களை உருவாக்கி மக்களிடையே புதிய ஆன்மிக ஒளி பரவச் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஹூயா ஆஹூயே

வைஷ்ணவ ஆசார்யர்களுள் ஸ்ரீமத் ராமாநுஜர் பற்றிக் குறிப்பிடும்போது, க்ருபா பிரசன்னாச்சார்யர் என்று குறிப்பிடுவதுண்டு. பகவானுடைய கிருபையே ஆசார்யராக அவதரித்தது என்பது அதன் பொருள். வைஷ்ணவ சம்ஹிதை இவரை ‘ஆஹுயா ஆஹுயே’ என்ற பதத்தைச் சொல்லி, ‘அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கூப்பிட்டுக் கூப்பிட்டு வைகுண்டத்தை அருளியவர்’ என்று சொல்கிறது. அந்த அளவுக்கு ராமாநுஜர் தம் வாழ்நாள் முழுவதும் மக்களை இறைவனின் பாதையில் நடத்தியதோடு அனைவரோடும் அன்பையே பரிமாறிக்கொண்டார்.

ராமாநுஜர்
ராமாநுஜர்

ராமாநுஜர் உபதேசம் பெற்ற உடனேயே அதை அனைத்து மக்களுக்கும் உபதேசித்தருளினார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமாநுஜர் என்று உபதேசம் பெற்றாரோ அன்றிலிருந்து அவரை அணுகியவர்கள் அணுகாதவர்கள் என அனைவரையுமே அன்பின் வழியில் நடத்தினார். அந்தக் காலத்தில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் ஆசார்யர் ராமாநுஜர். யார் அரங்கனை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் எல்லோரும் வைணவர்களே என்று முழங்கினார். அவர்களிடம் நீங்கள் என்ன சாதி என்று கேட்கக் கூடாது என்று அனைவருக்கும் கட்டளையிட்டார். சமய வாதங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றாலும் தோற்றவர்களுக்கு தண்டனை தராமல் தன் அன்பினால் அவர்களை ஆஸ்ரயித்தார். எண்ணாயிரம் என்னும் ஊரில் வாழ்ந்த சமணர்கள் ராமாநுஜரை வாதத்துக்கு அழைத்தனர். தோற்றால் கழுவேற வேண்டும் என்பது நிபந்தனை. ராமாநுஜர் வாதத்தில் ஜெயித்தபோதும் யாரும் கழுவேறத் தேவையில்லை என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார். அதனால் எண்ணாயிரம் பேரும் வைணவத்தைத் தழுவினர் என்பது வரலாறு.

ராமாநுஜரை ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றும் சொல்வதும் உண்டு. வியாசாய விஷ்ணுரூபாய என்று சொல்வார்கள். விஷ்ணுவே வியாசராக அவதரித்தார் என்றும் பின்பு வியாசரே நம்மாழ்வாராக அவதரித்தார் என்றும் நம்மாழ்வாரே பிற்காலத்தில் ராமாநுஜராக அவதரித்தார் என்றும் சொல்வதுண்டு. அதே போன்று விஷ்ணுவின் ஆயுதங்கள் எல்லாம் ஆழ்வார்களாக இந்த பூமியில் அவதரிக்க ஆதிசேஷன் ராமாநுஜராக அவதரித்தார் என்று சொல்வதுண்டு. 

ஸ்ரீரங்கத்தில் உண்டான அரசியல் மாற்றங்களால், ராமாநுஜர் சில காலம் கர்நாடக தேசம் நோக்கிச் செல்லவேண்டியதாயிற்று. அப்படிச் செல்லும்போது ஒரு தேசத்தை விட்டல தேவன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். மாற்றுமதத்தைச் சேர்ந்த அவன் அவையில் ஆயிரம் பண்டிதர்கள் இருந்தனர். ராமாநுஜர் அவர்கள் அவைக்குத் தன் சிஷ்யனான முதலியாண்டானோடு சென்றார். அங்கிருந்தவர்கள் எல்லாம் அவரை வாதத்துக்கு அழைத்தனர். தனித்தனியாக அல்ல, ஒரே நேரத்தில். அதற்கு ஒரே நேரத்தில் பதில் சொல்ல வேண்டும் என்றும் சவால் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் ராமாநுஜர்.

தனியே அமர்ந்து தன் முன் திரை ஒன்றைப் போடச் சொன்னார். ஆயிரம் பேரும் ஆயிரம் கேள்விகளை முன்வைத்தபோது திரைக்குப் பின்னிருந்து ஒரே நேரத்தில் ஆயிரம் பதில்களும் ஒலிக்கத் தொடங்கியன. இதைக் கண்ட முதலியாண்டான் திகைத்துப் போய் திரையைச் சற்றே நீக்கி உள்ளே பார்த்தார். உள்ளே ராமாநுஜர் தன் ஆதி சொருபமான ஆதிசேஷனாகி ஆயிரம் தலைகளோடு ஆயிரம் பதில்களைச் சொல்வதைக் கண்டு சிலிர்த்தார். ஆயிரம் பண்டிதர்களும் தம் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மன்னன் விட்டல தேவன் தன் பெயரை விஷ்ணுவர்த்தன் என்று மாற்றிக்கொண்டு வைணவத்தைத் தழுவினான் என்று வரலாறு சொல்கிறது. இவ்வாறு செல்லுமிடங்கள் எல்லாம் அன்பாலும் பெருமாளின் திருநாமத்தாலும் விசிஷ்டாத்வைதத்தைப் பரப்பி அனைவரையும் இறைவன் மேல் பக்தி கொள்ள வகைசெய்தார்.

ராமாநுஜர் சம்ஸ்கிருத வேதங்களுக்கு இணையாகத் தமிழ்மறையான நாலாயிரம் திவ்யப் பிரபந்தங்களைப் போற்றினார். மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களுக்குச் சென்று அங்கு நித்திய ஆராதனைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்தார். அனைத்து மதத்தினரும் பேதமின்றி பெருமாளின் திருவடிகளைத் தொழ வேண்டும் என்பதே அவரின் லட்சியமாக இருந்தது.

இன்று ஆதிசங்கரர் மற்றும் ராமாநுஜர் அவதரித்த தினம். இந்த நல்ல நாளில் குருபரம்பரையின் பூர்வாசிரம ஆசார்யர்களான இருவரையும் தியானித்து வழிபடுவதன் மூலம் குருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு