Published:Updated:

`சாதம் போதும்.. சோறு கொடு!' - சிவாலயங்களில் பாவம் நீக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்

சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக ஐப்பசி மாத பௌர்ணமி தினம் கருதப்படுகிறது. இன்று சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் பலன்கள் எண்ணிலடங்காதவை.

அன்னாபிஷேகம்!
அன்னாபிஷேகம்!

ஐப்பசி மாதப் பௌர்ணமி, சிவபெருமான் வழிபாட்டுக்கு உகந்தது. இந்த நாளில் அமிர்த கலை கொண்டு பூர்ண சந்திரன் வெள்ளொளி பொழியும் வேளையில் சிவபெருமானின் லிங்க ரூபத்துக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். பொதுவாக, அன்னத்தை நிவேதனம் செய்ததோடு சரி. அதைச் சுவாமியின் திருமேனியில் பட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்த ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னத்தாலேயே அபிஷேகம் செய்து வழிபடுவர். சுவாமியின் திருமேனி எங்கும் அன்னம் கொண்டு சந்தனக் காப்பிடுவதுபோலக் காப்பிட்டு அலங்கரிப்பர். அப்போது சுவாமியைத் தரிசித்து வழிபடுவதன் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் அன்னத்துக்குக் குறைவில்லாத ஒரு வாழ்வை ஈசன் நமக்கு அருள்வார் என்பது ஐதிகம்.

அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்

இந்த உலகம் அன்னமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் அன்னம் பஞ்சபூதங்களின் அருளால் உருவானது. பூமி நெல்லைத் தந்தது. காற்றும் மழையும் அந்த நெல்லை வளர்த்தெடுத்தது. நெருப்பு அதை உண்ணும் உணவாக்கியது. இப்படிப் பஞ்சபூதங்களால் ஆன உணவை, பஞ்சபூதங்களால் ஆன இந்த மனித உடல் உண்டு தன் உயிரைப் பெருக்கிக்கொள்கிறது. அதற்கு நன்றிக் கடனாக ஒருநாள் நாம் ஈசனுக்கு அன்னத்தாலேயே அபிஷேகம் செய்து வழிபடுவது என்று நம் பெரியோர்கள் நிச்சயித்தனர்.

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் பிறவிப்பிணி தீரும் என்பது ஐதிகம். பெரியவர்கள் 'சாதம் போதும், சோறு கொடு' என்று சொல்வது உண்டு. சாதம் என்ற சொல்லைத் தவிர்த்து அழகிய தமிழில் சோறு எனும் சொல் பொருள் விளங்கினாலும் இதன் உண்மைப் பொருளை பெரியவர்கள் கூறும்போது,

சிவபெருமான்
சிவபெருமான்

"`சாதம்’ என்ற சொல்லுக்குப் `பிறப்பு’ என்பது பொருள்; `சோறு’ என்ற சொல்லுக்கு `முக்தி’ என்பது பொருள். இதன்படி சாதத்தைப்படைத்து, சோற்றை - அதாவது முக்தியை வேண்டுவதே அன்னாபிஷேக வைபவம். அதையே 'சாதம் போதும் சோறு கொடு' என்று சொல்வது வழக்கம்" என்பர். சிதம்பரத்தில் தினமும் பகல்வேளையில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க அன்னாபிஷேகம், ஐப்பசி பௌர்ணமியையொட்டி நேற்றும் இன்றும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றுவருகிறது. நேற்று மாலை 7 மணி முதல் இன்று மாலை 7.30 வரை பௌர்ணமி திதி உள்ளது.

எனவே, இன்றும் பல சிவாலயங்களில் மாலை அன்னாபிஷேக தரிசனம் காணலாம். நேற்று கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.