Published:Updated:

பிள்ளை வரம் தரும் படிப்பாயசம்

ஆய்க்குடி முருகன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ஆய்க்குடி முருகன் கோயில்

ஆய்க்குடி முருகன் கோயில் அற்புதம் - நா. கோமதி சங்கர், படங்கள் பா.சுகேஷ்

பிள்ளை வரம் தரும் படிப்பாயசம்

ஆய்க்குடி முருகன் கோயில் அற்புதம் - நா. கோமதி சங்கர், படங்கள் பா.சுகேஷ்

Published:Updated:
ஆய்க்குடி முருகன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ஆய்க்குடி முருகன் கோயில்
`முருகன் குடிகொண்டிருக்கும் தலங்களில் குறிப்பிடத் தக்கது ஆய்க்குடி. இந்தத் தலத்தின் மகிமை சக்திவிகடனில் வெளிவந்தால் மகிழ்வேன்’ என்று வாசகி ராஜம் கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் வகையிலும், வாசகர்கள் அனைவருக்காகவும் ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் மகிமைகள் இங்கே...

திரேதா யுகம் - ராமாயணக் காலம். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்தார். அப்போது அவர் இருந்த பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் போக, தன் வால் நுனியின் கூர்மையால் பூமியை அகழ்ந்து சிற்றாறு ஒன்றை உருவாக்கித் தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

பின்னாளில் இலங்கைக்குச் செல்லும் வழியில் ராம பிரானும் இந்த நதியில் தாகம் தணித்தாராம். இந்த நதிக்கு அனுமன் நதி என்றே பெயர். இதன் நீர், பிணிகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். அற்புதமான இந்த அனுமன் நதிக் கரையில்தான் அழகுற கோயில்கொண்டிருக்கிறார் ஆய்க்குடி முருகன்.

ஆய்க்குடி முருகன் கோயில்
ஆய்க்குடி முருகன் கோயில்

இந்தப் பகுதியில் மல்லபுரம் என்றோரு கிராமம். அங்கே வசித்த மல்லர் என்ற சந்நியாசி சிறந்த முருகப் பக்தர். அவர் ஆய்க்குடியில் அனுமன் நதிக்கரையிலேயே ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் அரச மரம் ஒன்றை நட்டு, அவரின் குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தினரும் முறைப்படி வழிபட்டு வந்தார்களாம்.

இந்த நிலையில், மல்லபுரம் - நஞ்சைப்புரவு ஏரிக்கரையில் நான்கு திருக்கரங்களுடன் கூடிய குழந்தை வடிவ முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. முருகப்பெருமானின் விருப்பப்படி அந்தச் சிலை, ஆய்க்குடியில் உள்ள மல்ல சித்தரின் ஜீவசமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறார்கள். தொடக்கத்தில் சிறு ஓலைக் குடிலாக இருந்த கோயிலை, 1931-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசக் குடும்பத்தினர் புனரமைத்துக் கற்றளிக் கோயிலாக எழுப்பி வழிபட்டார்களாம்.

கோயிலின் மூலவரான அருள்மிகு பால சுப்ரமணிய சுவாமி... வேம்பு, கறிவேப்பிலை, அரச மரம், மாதுளை, மாவிலங்கு ஆகிய பஞ்ச விருட்சங்களின் கீழும் விநாயகர், சூரியன், மகாவிஷ்ணு, அம்பிகை, மகேஸ்வரர் ஆகிய பஞ்ச தெய்வங்கள் சூழவும் அருள்கிறார். இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பு என்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள உற்சவர் - முத்துகுமாரசாமி.

ஆய்க்குடி முருகன் கோயிலின் படிப்பாயசம் பிரசித்தி பெற்ற பிரசாதம் ஆகும். இத்தலத்தின் முருகன் குழந்தைப் பருவத்தினன். ஆகவே சுக்கு, சீரகம் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படுகிறதாம் இந்தப் பாயசம். இதை அனுமன் நதிக்கரையின் படித்துறையில் அமர்ந்து அருந்தினால், குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

‘குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டி, முருகனை தரிசித்து வழிபட்டு, படிப்பாயசம் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்’ என்று நம்பிக் கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்தப் பாயசத்தைப் பக்தர்களுடன் இணைந்து முருகப்பெருமானும் அருந்துவதாக ஐதிகம்.

ஆய்க்குடி முருகன்
ஆய்க்குடி முருகன்கல்யாண வேண்டுதல், உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் மேன்மை, பொருளாதார வளம், குடும்பச் செழிப்பு... என என்ன வேண்டுதலாக இருந்தாலும் ஆய்க் குடிக்கு வந்து முருகப்பெருமானை மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். தங்கள் வேண்டுதல் பலித்ததும் மணி எடுத்து வைத்தும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும் தலம் இது. தீபாவளிக்கு மறுநாள் கொடி ஏற்றப்பட்டு 7 நாள்கள் கந்தசஷ்டித் திருவிழா கோலாகலமாக நடை பெறும். விழாவின் 5-ம் நாளன்று பொட்டு குழைக்கும் வைபவம் நடக்கும். அப்போது முருகப்பெருமானின் வேலாயுதம் தலைகீழாக வைக்கப்பட்டு, சூரபத்மனுக்குத் தன் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக `போரிட நான் தயார்’ என்று முருகன் அறிவிப்பதைக் குறிக்கும் வைபவம் இது என்கிறார்கள் பக்தர்கள்.

திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி விசேஷம். அதேபோன்று இங்கே தரப்படும் அரச இலை விபூதி மகத்துவமானது. இங்கே சூர சம்ஹார வைபவத்தின்போது மனிதர்களே சூரபத்மனைப் போன்று வேடமிட்டுக் களம் இறங்குகிறார்கள். இது இத்தலத்தின் தனிச் சிறப்பு.

ஆய்க்குடி முருகன் கோயில்
ஆய்க்குடி முருகன் கோயில்

இங்கே புனித நதியை உருவாக்கிய ராம பக்தரான அனுமன் மீதும் பாலசுப்ரமணிய சுவாமி மீதும் கொண்ட பக்திமிகுதியால், இங்குள்ள மக்க ளில் பலரும் தங்கள் குழந்தைக்கு `ராம சுப்பிரமணியன்’ என்றே பெயர் சூட்டுகின்றன. நீங்களும் ஒருமுறை ஆய்க்குடி முருகனைத் தரிசித்து அருள் பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது?: தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுரண்டை செல்லும் பேருந்தில் ஏறிப் பயணித்தால், ஆய்க்குடி நிறுத்தத்தில் இறங்கலாம். அருகிலேயே பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆய்க்குடி முருகன் கோயில்
ஆய்க்குடி முருகன் கோயில்

`பூந்தொட்டி பத்திரம்!'

ஜென் கதைகள் எப்போதும் வித்தியாசமான சிந்தனைகளை மையமாகக் கொண்டவை. அவற்றுக்கான கேள்விகள், நமது மாற்றி யோசிக்கும் திறனைச் சோதிப்பவை. அவற்றுக்கான விடைகள் அறிவைத் தாண்டிச் சிந்திக்கும்போதுதான் கிடைக்கும்.

ஜென் மாஸ்டர் ஒருவர், அழகான ஒரு பூந்தொட்டியைச் சீடனிடம் கொடுத்து, அதைப் பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறினார். ``கீழே போட்டுவிடாதே! அப்படிச் செய்தால், கடும் தண்டனை உண்டு. பத்திரமாக எடுத்துச் செல்'' என்றார்.

உடனே, சீடனும் சரி என்று தலையாட்டினான். உடனே மாஸ்டர், நறுக்கென்று அவன் தலையில் குட்டினார். வலியில் துடித்துப்போனான். ''நான் உடைக்கவே இல்லையே! பிறகு ஏன் குட்டினீர்கள்?'' என்று பரிதாபமாகக் கேட்டான். அதற்கு அவர், ''நீ உடைத்த பிறகு குட்டி என்ன பிரயோஜனம்?' என்றாராம்.

தவறு இழைக்காமல் இருக்க அடுத்தவர்களை எச்சரிப்பது ஒருவித விழிப்பு உணர்வு.

- கே.வேலு, முசிறி