
இன்று காலை 11.28 வரை சப்தமியும் அதன்பிறகு அஷ்டமி திதியும் வருகிறது. எனவே, இன்று மாலை தவறாமல் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொன்றும் தனித்துவமான பலனை அளிக்கவல்லது.
எல்லா நாள்களும் இறைவழிபாடுகள் செய்ய வேண்டும் என்றாலும் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டிய நாள்கள் என சிலவற்றை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குறிப்பாக, தேய்பிறையில் வரும் சதுர்த்தி, அஷ்டமி, ஏகாதசி, பிரதோஷம் ஆகியன கட்டாயம் இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டிய நாள்கள்.

தேய்பிறை அஷ்டமி சிவவழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் சிவ பெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள். கால பைரவர்தான் சிவாலயத்தின் காவலர். தினமும் வழிபாடுகள் முடிந்ததும் பைரவர் சந்நிதியில் ஆலயத்தின் சாவியை வைப்பது மரபு. காரணம் அவரே சிவாலயத்தைப் பாதுகாப்பவர்.
சிவபெருமான் ருத்ர ரூபம் கொண்டு காலபைரவராக அவதரித்தது கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமி தினத்தில். எனவே, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் கால பைரவரை வழிபடுவது சிறப்பு.

இன்று காலை 11.28 வரை சப்தமியும் அதன்பிறகு அஷ்டமி திதியும் வருகிறது. எனவே இன்று மாலை தவறாமல் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொன்றும் தனித்துவமான பலனை அளிக்கவல்லது. அப்படி வெள்ளிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வறுமையை நீக்க வல்லது. இன்று சிவாலயம் சென்று பைரவருக்கு வில்வ மாலை சாத்தியும், வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்வதால் வறுமை விலகி செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.