Published:Updated:

சிக்கல்கள் தீர்க்கும் சீர்மிகு சித்திரைத் திருவோண அபிஷேகம்... நடராஜர் வழிபாட்டின் மகத்துவங்கள்!

இன்று திருவோணம்... நடராஜர் உச்சிகால அபிஷேகம்!
இன்று திருவோணம்... நடராஜர் உச்சிகால அபிஷேகம்!

பெரும்பாலும் தமிழகத்தைத் தாண்டிவிட்டால் நடராஜ வழிபாட்டைக் காணவியலாது. இறைவனின் ஆனந்தத் தாண்டவக் கோலம் குறித்து அறிந்திருந்தும் ஆலய வழிபாட்டில் நடராஜ மூர்த்தம் காணப்படுவது பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும்தான்.

ஈசனை அருவுருவமாக லிங்க வடிவில் அனைத்து ஆலயங்களிலும் கண்டு தரிசிக்கிறோம். ஆனால் ஆதியும் அந்தமுமில்லாத அந்த ஈசன் 64 திருவுருவங்கள் கொண்டு இந்தப் பூவுலகில் பிரசன்னமாகி அடியவர்களுக்கு அருளியிருக்கிறார். தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், லிங்கோத்பவர், கால பைரவர், வீரபத்திரர் என்று பல்வேறு திருக்கோலங்கள் தாங்கி அருள்பாலித்த அந்த ஈசனின் திருவடிவங்களில் பெரும்புகழும் சிறப்பும் வாய்ந்தது நடராஜர் திருவுருவம். பிரபஞ்ச இயக்கத்தின் வடிவமாக, உலக சிருஷ்டியின் ரகசியங்களை வெளிப்படுத்தும் தோற்றம் கொண்டு ஆடும் ஆனந்தத் தாண்டவக் கோலத்தின் சிறப்புகள் இன்றியமையாதன. அதனால்தான் நடராஜ மூர்த்தத்தினை நாம் மட்டுமல்ல, உலகம் முழுமையும் கொண்டாடுகிறது.

நடராஜர்
நடராஜர்

ஜெனிவாவில் உள்ள செர்ன் எனப்படும் இயற்பியல் ஆய்வகத்தில் ஒரு நடராஜர் சிலை உள்ளது. அது இந்திய அரசு அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுதான் என்றாலும் அதை அந்த ஆய்வரங்கம் போற்றிப்பாதுகாத்துவருகிறது. அந்தச் சிலைக்குக் கீழ் முனைவர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா என்ற விஞ்ஞானி பின்வரும் வரிகளை எழுதிக் கல்வெட்டாகப் பதித்து வைத்துள்ளார்.

"நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்தியக் கலைஞர்கள் சிவபெருமானின் நடனக் கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுநர்கள் மிக நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்தப் பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும் அறிவியலையும் ஒன்றிணைக்கிறது" என்று அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இது குறித்து அவர் தனது டாவோ ஆஃப் பிஸிக்ஸ் (Tao of physics) என்ற தலைப்பில் நூல் ஒன்றும் விரிவாக எழுதியுள்ளார்.

நடராஜர் திருவுருவத் தத்துவம்

இது ஃப்ரிட்ஜாஃபின் கருத்துமட்டுமன்று. இயற்பியல் ஆய்வாளர்கள் பலரும் நடராஜர் திருவுருவத்தை அடிப்படையாகக் கொண்டு பல கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

தமிழகத்தின் தனிப் பெருமை - நடராஜர்

பெரும்பாலும் தமிழகத்தைத் தாண்டிவிட்டால் நடராஜ வழிபாட்டைக் காணவியலாது. இறைவனின் ஆனந்தத் தாண்டவக் கோலம் குறித்து அறிந்திருந்தும் ஆலய வழிபாட்டில் நடராஜ மூர்த்தம் காணப்படுவது பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும்தான். அதுமட்டுமன்றி தமிழக ஆன்மிக வரலாற்றோடு நடராஜப் பெருமான் தொடர்புடையவர். ஓர் அரசன் தினமும் இரவில் ஆடல் வல்லானின் சிலம்பொலிக்கும் சத்தம் கேட்டு வணங்குவான். மற்றொரு மன்னனோ எடுத்தபதம் வலிக்குமோ என்று சொல்லி வேண்டி கால் மாற்றி ஆட வேண்டினான். இந்த மன்னர்களோடெல்லாம் ஈசன் பேசியதோடு தன் அருளை வெளிப்படுத்தி அருள்பாலித்தார். இவ்வாறு நம் தமிழ் தேசம் எங்கும்  ஈசன் திருவிளையாடல் புரிந்த இடங்களில் எல்லாம் சபைகள் உள்ளன. அவை மட்டுமன்றி இறைவன் நடனம் புரிந்த தலங்கள் என்று பல்வேறு தலங்கள் குறிப்பிடப்பட்டு அவையும் சிறப்பு மிக்க தலங்களாகத் திகழ்கின்றன.

சிதம்பரம் - கனக சபை

வெள்ளிசபை (மதுரை), ரத்ன சபை (திருவாலங்காடு), சித்திர சபை (குற்றாலம்), தாமிர சபை (திருநெல்வேலி) என்று பஞ்ச சபைகளில் ஈசன் திருநடனம் புரிந்த தலங்களில் முதன்மையானவை. பஞ்சபூதத்தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். ஈசன் உருவமாக அருவுருவமாக அனைத்துத் தலங்களிலும் காட்சிகொடுக்க இங்கு உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றுமாக இருக்கிறார். சிதம்பர ரகசியம் என்பது ஏதுமற்ற ஆகாய வெளியின் அடையாளமே. இந்த மூன்று நிலைகளிலும் இங்கு ஈசனை தரிசித்து வழிபட மெய்ஞ்ஞானம் கிட்டும் என்பது அடியார்களின் வாக்கு. இந்த ஆலயமே ஈசன் முதன்முதலில் ஆனந்தக் கூத்தாடிய சபை. பதஞ்சலி முனிவர்க்கு ஆடல் கலையை நிகழ்த்திக் காட்டியருளிய தலம். அதனால்தான் இதுவே சிவ வழிபாட்டில் மிக முக்கியமான தலமாகத் திகழ்கிறது.

ஆடல்வல்லானுக்கு ஆறு அபிஷேகங்கள் ஏன்?

ஈசன் அக்னி ரூபமானவர். எனவேதான் அவரைக் குளிர்விக்க லிங்கரூபமான ஈசனுக்கு தினமும் அபிஷேகம் செய்துவழிபடுவர். அதுமட்டுமன்றி எப்போதும் லிங்கத்தின் மீது ஜலதாரை வீழ்ந்தவண்ணம் இருக்கும். ஆனால் நடராஜ மூர்த்தத்துக்கோ ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம். மாசி சதுர்த்தசி, சித்திரைத் திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய நாள்களில் இந்த அபிஷேகங்கள் நடைபெறும்.

தேவர்கள் வழிபடும் சிவ மூர்த்தம் நடராஜர். தினமும் ஆறுகால பூஜைகள் செய்து அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்குச் சமம். அப்படியிருக்க அவர்கள் அபிஷேகம் செய்யும் ஆறு காலங்களே இந்த ஆறு தினங்கள் என்கின்றன புராணங்கள். தேவர்கள் வழிபடும் காலத்தில் நாமும் நடராஜப்பெருமானை அபிஷேகித்து வழிபட வேண்டும் என்று வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

பெரும்பாலான சிவத்தலங்களில் இந்த ஆறு அபிஷேகங்களில், மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் ஆகிய இரண்டு அபிஷேக தினங்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படும். இவை தவிர்த்த பிற நான்கும் ஒரு நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும்.

சிதம்பரத்தில் சீர்மிகு சித்திரைத் திருவோணம்

இன்று (13.5.20) சித்திரைத் திருவோணம். இந்த நாளில் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானுக்குக் கோலாகலமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதுகுறித்து, சிதம்பரம் வேங்கடேச தீட்சிதரிடம் கேட்டோம்.

``இன்று சித்திரைத் திருவோண மகா அபிஷேகம் மகா ருத்திரத்துடன் நடைபெறுகிறது. இந்த மகாருத்திர ஜபம் 120 தீட்சிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்திர பாராயணத்தைச் செய்து அதன் பூர்த்தியாக 12 ஆசார்யர்கள் ருத்ர ஹோமம் செய்து பின்பு 108 கலசங்களை நடராஜர் சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து அங்கு நடராஜ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆண்டும் அதே போன்று சுவாமியை கனக சபையில் எழுந்தருளச் செய்து, லட்சார்ச்சனையும் மந்திராக்ஷதையும் நடைபெற்று அதன் பிறகு யாகசாலையில் தயாராக இருக்கும் நடராஜப் பெருமானுக்குரிய 108 கலசங்கள் மற்றும் சிவகாம சுந்தரி அம்மைக்குரிய 108 கலசத் தீர்த்தங்களையும் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்தச் சிறப்புமிக்க வைபவத்தினைக் கண்டால் புண்ணியம் ஏற்படும் என்பது மட்டுமல்ல நினைத்தாலே புண்ணியம் உண்டாகும். எனவே அவரவர் இருந்த இடத்திலிருந்து சிவ நாம ஜபம் செய்து இந்த வைபவ நாளில் சிவனருளைப் பெறலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு