Election bannerElection banner
Published:Updated:

புனித வெள்ளி... உலகத்துக்கான நிரந்தர மீட்பை அளிக்க இறைமகன் இயேசு சிலுவையில் மாண்ட தியாக தினம்!

இயேசு
இயேசு

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் (யோவான் 15 : 20)

துக்கம் என்பது மிகவும் மேலோட்டமான வார்த்தை, அதை அனுபவிக்காதவரை. உங்கள் துக்கத்தில் பங்குகொள்கிறோம் என்று யாரிடமாவது சொன்னால் அது வெறும் வார்த்தையே. உண்மையில் துக்கத்தை அனுபவிக்கிறவர்களின் அனுபவத்தில் கொஞ்சத்தையும் நாம் வாங்கிவிடுவதில்லை. ஆனால் ஆறுதலுக்காக அப்படிச் சொல்கிறோம். அப்படித்தான் இறைமகனாம் இயேசு கிறிஸ்து தன் சிலுவைப் பாதையைத் தேர்ந்துகொண்டபோது அவரின் சீடர்கள் துக்கமடைந்தார்கள். ஆனால், இயேசுவே அந்த துக்கத்தைத் தன் கடமையாகக் கொண்டு ஏற்றார்.

புனித வெள்ளி
புனித வெள்ளி

இயேசுவைக் கைதுசெய்ய வந்தவர்களில் ஒருவனின் காதுகளை பேதுரு தன் வாளால் வெட்டியபோது, இயேசு அதைக் கண்டித்து, ``பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” என்று சொன்னார். அதன் பொருள் என்ன... ``ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும்” என்று யூதருக்கு ஆலோசனை சொன்னான் காய்பா என்பவன். அவன் சொன்னதன் பொருள் என்ன... இவை இரண்டுக்குமே ஒரே பொருள்தான். அது தேவனின் சித்தம். அதுவே இந்த உலகில் மனிதர்களின் பாவங்கள் நீங்க இறைவன் உண்டாக்கிய தியாக தினம். அதுவே இறைமகனாம் இயேசு சிலுவையில் மரித்த புனித வெள்ளி.

அன்பே பிரதானம்

பத்து கட்டளைகளை மோசே மூலம் வழங்கிய கர்த்தர் அவற்றின் சாரமாக இரண்டே கட்டளைகளை இயேசுவின் மூலம் மனித குலத்தின் முன் வைத்தார். அதில் இரண்டாவது கற்பனை, `உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக' என்பதேயாகும். சக மனிதனை சகோதரனாக நினைத்துப் போற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த அவர் இவ்வாறு ஒரு கட்டளையை முன்வைத்தார். அன்பே அவரின் பிரசங்கமாக இருந்தது. ஆனால், இதெல்லாம் மக்களை அடிமைப்படுத்தி அடக்கியாண்ட உயர் குடியினருக்குப் பிரியமாய் இல்லை. அவரைக் குற்றப்படுத்தினார்கள்.

புனித வெள்ளி
புனித வெள்ளி

அற்புதங்களும் அடையாளங்களும்

இயேசு கிறிஸ்து வாழும் காலத்தில் அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளியரங்கமாகவே நடத்தினார். பல காலம் முடவனாய் இருந்தவன் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டபோது `அவனை எழுந்து நட’ என்றார். அவரின் வாக்கு அவனை சொஸ்தமாக்கியது. அவரின் ஆடைகளைத் தொட்டவன் தன் நோய் நீங்கப் பெற்றான். பாவிகள் அவர் காலடியில் வீழ்ந்து பாவமன்னிப்புப் பெற்றனர். அவரின் உத்தரவுக்குப் பிசாசுகள் நடுங்கி ஓடின. ஐந்து அப்பங்களும் இரண்டு மீனும் அநேகருக்குப் போதுமானதாக இருந்தது. ஆனாலும் அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்து அவரை விசாரிக்க சபைக்கு அழைத்துவந்தனர். காரணம், அவர் வணிகமாகிவிட்ட ஆலயங்களுக்கு எதிராகவும் வஞ்சிக்கப்படும் ஏழைகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசிவந்ததேயாகும்.

உலகைப் படைத்தவனின் தியாகம்

தன் வாழ்க்கை முழுவதும் இறைவனின் ராஜ்ஜியம் குறித்து மட்டுமே பேசி சகலருக்குமான அன்பைப் பகிர்ந்துகொடுத்த தேவன் விசாரணை மன்றத்தில் அமைதியாக நின்றார். அவரை ஒருவன் கன்னத்தில் அறைந்தான். அப்போதுகூட அவர் தன் கண்ணியம் குன்றாமல், ``நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்” என்றார். ஆனால், அவர்கள் அதை எல்லாம் ஆய்வுசெய்து பார்க்கும் மனநிலையில் இல்லாமல் அவரைத் தண்டிக்கவே துடித்தனர். அவர் தலையில் முள் மகுடத்தைச் சூட்டினர். அத்தோடு நில்லாமல் இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று பிலாத்துவை வேண்டிக்கொண்டனர். பிலாத்து, ``நான் இந்த மனிதனிடத்தில் எந்தக் குற்றத்தையும் காணவில்லையே” என்றபோதும் அவர்கள் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று வேண்டினர். பிலாத்து தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவித்துக்கொண்டு மக்களிடத்தில் இயேசுவை ஒப்படைத்தார்.

புனித வெள்ளி
புனித வெள்ளி

வீரர்கள் அவரை ஒரு திருடனை நடத்துவதுபோல நடத்தினர். அவரை அறையப்போகும் சிலுவையை அவரைக்கொண்டே சுமக்க வைத்தனர். சாட்டைகளால் அடித்து அவரைத் துன்புறுத்தினர். இதைக்கண்ட பெண்கள் கதறி அழுதனர். ஆனால், மதவெறியும் ஆட்சி வெறியும் கொண்டிருந்த பெரும்பான்மை மக்கள் அதைக் காணாமல் கல்வாரி மலைவரை அவரைத் துன்புறுத்தியபடியே வந்தனர். இரண்டு கள்வர்களுக்கு நடுவில் சிலுவையில் அறைந்து நிற்கவைத்தனர். அவர் தாகம் என்று கேட்டபோது புளிப்பான காடியை அவருக்கு ஒருவன் குடிக்கத் தந்தான். அவரின் ஆடையைப் பங்கிட்டுக்கொண்டனர். அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இன்னுயிரை சிலுவையில் தந்தார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் தன்னைச் சார்ந்தவர்களுக்குச் சொன்னதுபோல, ``நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள்” என்ற வாக்கின்படி பிசாசின் வழி நின்று மரணத்தின் மூலம் இறைவனை வெல்ல நினைத்த உலகம் சந்தோஷப்பட்டது. இயேசுவைச் சார்ந்தவர்கள் துக்கத்தோடு இருந்தார்கள்.

 இயேசு
இயேசு

உண்மையில் இயேசு சகல மனிதர்களுக்கும் ஒரு விடுதலையை ஏற்படுத்தவே சிலுவையை ஏற்றார். அவரின் சரீரத்தின் மூலம் உலகுக்கு நிரந்தர மீட்பை ஏற்படுத்தினார். அவரின் ரத்தம் நம் பாவங்களைப் போக்குமாறு சிந்தி நித்திய மீட்பை ஏற்படுத்தும் உடன்படிக்கையாக மாறியது. அந்த உடன்படிக்கை நிறைவேறிய நாளான இந்தப் புனித வெள்ளியில் நாம் இறைமகனாம் இயேசுவின் தியாகத்தை நினைத்துத் துதிப்போம். நம் பாவங்களை அறிக்கை செய்து வெளியிட்டு அவரின் போதனைகளைப் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான ஆராதனையாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு