Published:Updated:

இன்னல்கள் நீக்கி இன்பங்கள் வழங்கும் கோவர்த்தன விரத மகிமைகள் !

`நம் கண்முன்னால் உயர்ந்து நிற்கும் கடவுளான இந்தக் கோவர்த்தன கிரியைப் பாருங்கள். நம் கால்நடைச் செல்வங்கள் எல்லாம் அந்த மலையின் மீதுதான் மேய்கின்றன. இந்த மலையை விடுத்து வேறு தெய்வத்தை வணங்க வேண்டியது இல்லை. எனவே, இந்தக் கிரிதாரியையே வணங்குங்கள்' என்று சொன்னான் கண்ணன்

கண்ணன்
கண்ணன்

மலையை இறைவனின் வடிவமாகப் பார்க்கும் மரபு நம்முடையது. இமயமலையும் அருணாசலமையும் சாதாரணக் கற்குவியல்களாக நாம் கருதுவதில்லை. அவற்றை ஈசனின் அருவுருவங்களாகவே கருதி வழிபடுகிறோம். குன்றிருந்தால் அங்கே குமரன் இருப்பான். அதனால் எல்லாக் குன்றுகளும் இறைவனின் சந்நிதானங்களாகவும் விளங்கும் தன்மை கொண்டவை.

கண்ணன்
கண்ணன்

இறைவனை அவன் குடிகொண்டிருக்கும் மலையின் பெயராலேயே அழைக்கும் வழக்கமும் உண்டு. வேங்கடவன் என்றால் அவன் வேங்கட மலையில் வாசம் செய்பவன் என்று பொருள். கண்ணனின் ஒரு திருநாமம் கிரிதாரி என்பது. கிரிதாரி என்றால் 'மலையைத் தரித்துக்கொண்டிருக்கிறவன்' என்று பெயர்.

கண்ணனின் லீலாவிநோதங்கள் பலவற்றையும் பாடிப் பாடி மகிழும் ஆழ்வார்கள், ஒரு பராக்கிரமத்தை மிகவும் வியந்து போற்றுகிறார்கள். அது, கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தது நிகழ்த்திய மாயத்தையே.

கண்ணன்
கண்ணன்

'குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி, குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தானே, குடையா வரையொன்றெடுத்து ஆயர் கோவாய் நின்றான், குன்றமொன்றெடுத்தேந்தி மாமழை அன்று காத்த அம்மான், குன்றமெடுத்து மழை தடுத்து இளையரோடும் மன்றில் குரவை பிணைந்த மால், வெற்பை யொன்றெடுத்து ஒற்கமென்றியே நிற்குமம்மான், குன்றமேந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலமளந்த பிரான், குன்றமொன்றால் மழை காத்த பிரான், ஆநிரை பாடி அங்கே யொடுங்க அப்பன் தீ மழைகாத்துக் குன்றமெடுத்தானே!' என்று ஆழ்வார்கள் பலரும் வியந்து வியந்து போற்றிப் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த அற்புதம் அவர்களது மனதைக் கொள்ளை கொண்டுள்ளது.

ஒருமுறை, ஆயர்பாடியில் இந்திரனுக்கு வழிபாடு செய்ய ஆயர்கள் எல்லாம் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் அவர்களை நோக்கிக் கேள்வியெழுப்பினான். `ஏன் இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு ஆயர்கள், `இந்திரனே மழையின் தெய்வமான வருணனின் தலைவன். அதனால்தான் அவனுக்கு விழா எடுக்கிறோம்' என்றனர்.

கண்ணன்
கண்ணன்

அதைக்கேட்ட கண்ணன், `நம் கண்முன்னால் உயர்ந்து நிற்கும் கடவுளான இந்தக் கோவர்த்தன கிரியைப் பாருங்கள். நம் கால்நடைச் செல்வங்கள் எல்லாம் அந்த மலையின் மீதுதான் மேய்கின்றன. அவை தாகம் தீர்க்கும் ஊற்றுகளும் சுனைகளும் நிறைந்த அந்த மலையில் காணப்படுகின்றன. நமக்குத் தேவையான பழங்களும் காய்கறிகளும்கூட அதில் நிறைந்து விளைகின்றன. மழை மேகங்களைக்கூட இந்த மலைதான் தடுத்து பொழிவிக்கிறது. இந்த மலையை விடுத்து வேறு தெய்வத்தை வணங்க வேண்டியது இல்லை. எனவே, இந்தக் கிரிதாரியையே வணங்குங்கள்' என்று சொன்னான்.

கண்ணனின் இந்த விளக்கம் அவர்களுக்குப் புதிதாகவும் நிறைவாகவும் இருக்கவே, அவர்கள் கோவர்த்தனமலையையே பூஜித்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் கடுமையான மழையைப் பெய்வித்து, ஆயர்பாடியே இல்லாமல் செய்ய முயன்றான். எல்லோரும் கண்ணனிடம் சரணடைந்தனர். கண்ணன் சிறுபாலகன். ஆனாலும் அவன் ஓர் அவதாரம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கண்ணன் அவர்களின் கண்ணீரைப் போக்கும்விதமாக, கோவர்த்தன மலையைத் தன் பிஞ்சுவிரலால் தூக்கி குடையாகப் பிடித்தான். அந்தக் குடையின் கீழ் பிருந்தாவனத்தின் சகல ஜீவன்களும் நின்று உயிர்பிழைத்தன. மொத்தம் ஏழு நாள்கள் அவ்வாறு அவன் சுமந்து நின்றதாக பாகவதம் சொல்கிறது.

கண்ணன்
கண்ணன்

மலைகள், இயற்கையின் பரிசுகள். அதைப் பராமரிக்க வேண்டியது நம் கடமை. ஆனால், நாம் அதை மறந்து அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து வீசுகிறோம். காடுகளால் நிறைந்து விளங்க வேண்டிய மலைகளைக் கட்டடங்களால் நிறைத்துவிட்டோம். மலைகள் இளைத்துக் குன்றுகளாகிவிட்டன. பசுமை பூத்துக்குலுங்கும் மலைகள், மழைவளம் குன்றி உலர் காடுகளாக மாறிவிட்டன. கண்ணன் கோவர்த்தனத்தைத் தூக்கினாலும், மக்களின் மீது விழ வேண்டிய பெருமழையைச் சுமந்து மக்களைக் காத்ததில் கோவர்த்தன மலையின் பங்கும் இன்றியமையாதது.

இயற்கை சீற்றங்கள் மிகும் இந்தக் காலகட்டத்தில் மலைகள் நமக்குப் புகலிடங்களாக விளங்க வல்லவை. ஆனால், அவை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி நாம் அவற்றை அழித்துக்கொண்டிருக்கிறோம். கண்ணன் மலையைத் தூக்கி மக்களைக் காத்ததைக் கண்டு வியந்த இந்திரன், தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கோரினான். கண்ணன் கோவர்த்தன கிரியைத் தூக்கி மக்களைக் காத்த நிகழ்வை மக்கள் கோவர்த்தன விரதம் என்று கொண்டாடத் தொடங்கினர்.

கண்ணன்
கண்ணன்
Vikatan

இன்று கோவர்த்தன விரதம் தொடங்குகிறது. வட இந்தியாவில் இந்த விரதம் தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும். தென்னிந்தியாவில் 'சயனி ஏகாதசி' தினத்தையே கோவர்த்தன விரதமாகக் கொண்டாடுகிறோம். கைப்பிடி சாணம் அல்லது மஞ்சளைக் கொண்டு சிறு மலைபோல் செய்து அதைப் பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த விரதத்தைக் கைக்கொள்வதன் மூலம் நமக்கு நடக்கவிருக்கும் பிரச்னைகளிலிருந்து கண்ணன் நம்மை விலக்கிக் காப்பான் என்பது நம்பிக்கை. இயற்கையோடு இணைந்து இறைவனை வழிபடும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து உலகில் இன்னல்கள் தீர்ந்து வாழலாம்.