Published:Updated:

இன்னல்கள் தீர்க்கும் இஞ்சிமேடு நரசிம்மர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்... #worshipathome

நரசிம்மர்
நரசிம்மர்

இஞ்சிமேடு திருத்தலத்தில் அருள்புரியும் பெருந்தேவி தாயார் கருணைக் கடலாகவே வீற்றிருக்கிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் யாவற்றையும் போக்கி நல்லருள்புரிகிறார்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

வந்தவாசி அருகே இருக்கும் கிராமம், இஞ்சிமேடு. புராதன பெருமைகள் பல வாய்ந்த இஞ்சிமேடு திருத்தலத்தில் வேண்டும் வரங்கள்...

Posted by Sakthi Vikatan on Wednesday, May 6, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, இஞ்சிமேடு வரதராஜர் திருக்கோயில்.

தொண்டை நாட்டில் பாஹநதி என்று போற்றப்படும் செய்யாற்றின் கரையில் 'யக்ஞ வேதிகை' என்று பூஜிக்கப்படும் புராதன திருத்தலம், இஞ்சிமேடு. இது, வந்தவாசி அருகே அமைந்திருக்கும் சிறு கிராமம்.

புராதனப் பெருமைகள் பல வாய்ந்த இஞ்சிமேடு திருத்தலத்தில் வேண்டும் வரங்கள் யாவற்றையும் அருளும் திருக்கோலத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் ஸ்ரீ பெருந்தேவி தாயாரும் அருள்கிறார்கள். 

நரசிம்மர்
நரசிம்மர்

வேதகாலம் முதலே எண்ணற்ற முனிவர்கள் எம்பெருமானை யாக, யக்ஞங்களினால் ஆராதனைசெய்து, வேத முழக்கங்களால் வழிபட்ட புனிதத்தலம் இது. அதனால் இது `யக்ஞவேதிகை’ என்று அழைக்கப்பட்டு, தற்போது இஞ்சிமேடு என்று வணங்கப்படுகிறது.

ஸ்ரீமத் அஹோபில மடத்தின் 34 -வது பட்டம் ஸ்ரீ சடகோப ராமாநுஜ யதீந்த்ர மஹாதேசிகன் மற்றும் 42 -வது பட்டம் பெற்ற ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹா தேசிகன் ஆகிய மகான்கள் அவதரித்த புண்ணிய பூமியும் இஞ்சிமேடு திருத்தலமேயாகும்.  

இந்தத் தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ராமபிரான், பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீ ராமபிரான் இஞ்சிமேடு திருத்தலத்தில் சீதா லட்சுமண வரப் பிரசாதியாக அருள்புரிகிறார். ஸ்ரீ ராமபிரானின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இது, வேறு எங்கும் காண முடியாத அற்புதமாகும். ராமபிரான் சந்நிதியில் மன வலிமை அருளும் அஞ்சனை மைந்தன் ஸ்ரீ அனுமன் அஞ்சலி அஸ்தத்தில் அருள்புரிகிறார். 

worshipathome
worshipathome

இஞ்சிமேடு திருத்தலத்தில் அருள்புரியும் பெருந்தேவி தாயார் கருணைக் கடலாகவே வீற்றிருக்கிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் யாவற்றையும் போக்கி நல்லருள்புரிகிறார். ஸ்ரீ பெருந்தேவி தாயாரை வணங்கினால், திருமணத் தடை அகலும் என்கிறார்கள் பக்தர்கள். நவகிரக தோஷங்களால் திருமணத் தடை மற்றும் குழந்தைப்பேறு தடை ஆகியவற்றால் அல்லலுறுகிறவர்கள் ஒருமுறை பெருந்தேவி தாயாரை தரிசித்தாலே போதும். கோள்சார் தோஷங்கள் யாவும் நீங்கி வாழ்க்கையில் வசந்தம் பெருகத் தொடங்கிவிடும்.

பெருந்தேவித் தாயாரை நினைத்து தினம் ஒரு மஞ்சள் எடுத்து பூஜையறையில் வைத்து 48 நாள்கள் வழிபட்டால், திருமண வரம் தேடிவரும் என்பது ஐதிகம். பிரார்த்தனை முடிந்ததும், அந்த மஞ்சளை மாலையாகக் கட்டி, பெருந்தேவி தாயாருக்கு சாத்தி பிரார்த்தனையை நிறைவேறுகிறார்கள் பக்தர்கள். 

நரசிம்மர்
நரசிம்மர்

இஞ்சிமேடு திருத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பு, ஸ்ரீ கல்யாண லட்சுமி நரசிம்மர் ஆவார். இருளிலும் இன்னலிலும் உழன்று கிடக்கும் எளிய பாமர மக்களுக்கு அருள்புரிந்து, அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தும் மூர்த்தமாக எழுந்தருளியிருக்கிறார் நரசிம்மர். மகான்களும், ரிஷிகளும் அவதரித்த புண்ணிய பூமியான இஞ்சிமேட்டின் புராதன பெயர், ஸ்ரீநரசிம்மபுரம்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் சந்நிதியில், தன் தந்தை இரண்யனுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்று பிரகலாதன் நரசிம்மரைத் தொழுதவாறு எழுந்தருளியிருப்பது அரிய தரிசனமாகும்.

கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு ஒவ்வொரு சுவாதி நட்சத்திரத்தன்றும் ஸ்ரீ சுவாமி மகா ஹோமம் செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில், திருமஞ்சனமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

நரசிம்மர்
நரசிம்மர்

சுவாதி நட்சத்திர நாளில் கல்யாண லட்சுமி நரசிம்மர் வெள்ளிக் கவசத்துடன் அருள்பாலிப்பார். சுவாதி நட்சத்திர நாளில் ஸ்ரீ கல்யாண நரசிம்மரை வேண்டினால், நம் இன்னல்கள் யாவும் விலகி ஓடிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.

அடுத்த கட்டுரைக்கு