ஜனாபாய், வட இந்தியாவில் ஸ்ரீபாண்டுரங்கனின் தீவிர பக்தை. ஒவ்வொரு நாளும் பகவத் சேவை மற்றும் பாகவத சேவை புரிந்து வந்தாள். அதோடு, பக்தி மேலீட்டால் ஸ்ரீபாண்டுரங்கன் மீது ‘அபங்கங்கள்’ என்ற மிகச் சிறந்த பக்திப் பாடலைப் பாடினாள்.
பண்டரிபுர ஆலயத்தில் ஒரு நாள் பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். ஞானேஸ்வரர் என்பவர் குருவாயூர் பட்டத்திரி போல பகவானுடன் நேரில் உரையாடக் கூடியவர். அவர் அப்போது அங்கு வந்தார். ஞானேஸ்வரரைப் பார்த்ததும் ஓலையையும் எழுத்தாணியையும் மறைத்துக் கொண்டார் பகவான்.
இதை ஞானேஸ்வரர் கவனித்து விட்டார். ‘நம்மிடம் பகவானுக்கு நம்பிக்கை போய்விட்டதோ?’ என்று வருத்தமுற்றார். பகவான், ‘‘வா, ஞானேஸ்வரா... ஏன் உன் முகம் வாடி இருக்கிறது?’’ என்று கேட்டார்.
உடனே ஞானேஸ்வரர், ‘‘சுவாமி, மிகவும் பிரியமான வன் என்று நீங்கள் என்னைத்தானே குறிப்பிடுவீர்கள்? பிரியமானவர்களிடம் யாராவது எதையாவது மறைப் பார்களா?’’ என்று கேட்டார்.
அதற்கு பகவான், ‘‘ஓ... இந்த ஓலையை மறைத்ததைக் கவனித்து விட்டாயா?அது ஒன்றுமில்லை. உனக்கோ நாமதேவருக்கோ சீடர்கள் பலர் உண்டு. உங்களது அபங்கங்களை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். ஆனால், ஜனாபாயின் அபங்கங்களை எழுதிக் கொள்ள யாருமில்லை. ஓய்வே இல்லாமல் அவள் பகவத் சேவை செய்து கொண்டிருக்கிறாள். அதனால் நானே அதைச் செய்கிறேன். ‘என்ன ஜனாபாய்... பகவானுக்கே நீ வேலை வைக்கிறாயா?’ என்று பக்தி மேலிட நீ அவளிடம் போய் வருத்தப்படக் கூடாதல்லவா... அதனால்தான் ஓலையை மறைத்தேன்!’’ என்றார்.
‘‘பிரபு... அடியார்க்கு அடியாராகத் திகழும் உங்கள் கருணையே கருணை. ஜனாபாய் எத்தனை பாக்கியசாலி!’’ என்றார் ஞானேஸ்வரர் பவ்யமாக.
- சத்யா, கும்பகோணம்-1.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism