Published:Updated:

மகிமை நிறைந்த கார்த்திகைப் பௌர்ணமி... ஒரு தீபம் ஏற்றினாலும் இத்தனை பயன்களா? #KarthigaiDeepam

அண்ணாமலையார்
அண்ணாமலையார்

பெரும்பாலும் பௌர்ணமிகள் திருவிழா நாள்களாகவே அமையும். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், மாசி மகம் என்று அதன் பட்டியல் நீளும். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் வரும் பௌர்ணமி, கார்த்திகை பௌர்ணமி.

அன்று கார்த்திகை பௌர்ணமி. சிவாலயத்தில் ஒரு எலி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது. வானில் சந்திரன் ஒளிவிடத் தொடங்கிய அந்த நேரத்தில் சிவ சந்நிதியில் இருந்த தீபத்தின் திரி தூண்டப்படாமல் தீப ஒளி மங்கத் தொடங்கியது. விளக்குக்கு இருபுறமும் ஓடி விளையாடிக்கொண்டிருந்த இந்த எலி, தன்னையறியாமல் விளக்குத் திரியை மேல் நோக்கித் தள்ளியது. அவ்வளவுதான் மீண்டும் தீபத்தின் சுடர் மிளிரத்தொடங்கியது. அறியாமல் செய்த இந்தச் செயலுக்கு அந்த எலி அடைந்த பேறு எது தெரியுமா? மறு பிறவியில் மகாபலம் பொருந்திய மஹாபலிச் சக்கரவர்த்தியாக அவதரித்தது. புல்லாய், பூண்டாய் என்று ஒரு பிறப்பின் வரிசை சொல்வார்கள். ஆனால், அந்த எலியோ அந்த வரிசைப்படியில்லாமல் நேரடியாக மூவுலகையும் ஆளும் மகா சக்கரவர்த்தியாகப் பிறந்தது. இது ஈசனின் கருணை மட்டுமல்ல, அந்த நாள் கார்த்திகை பௌர்ணமியும் தீபத் திருநாளுமாகவும் அமைந்தது என்பதுவும் காரணம்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

பொதுவாக, தமிழ் மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்தமாதப் பௌர்ணமியை ஒட்டிவரும் நட்சத்திரங்களின் பெயரிலேயே அமைந்திருக்கும். இல்லையென்றால் அந்த நட்சத்திரங்களுக்கு உரிய வட சொல்லிலிருந்து பிறந்திருக்கும். இவையே பௌர்ணமி நாளுக்குத் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை உணர்த்தும். பெரும்பாலும் பௌர்ணமிகள் திருவிழா நாள்களாகவே அமையும். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், மாசி மகம் என்று அதன் பட்டியல் நீளும். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் வரும் பௌர்ணமி கார்த்திகை பௌர்ணமி. கார்த்திகை நட்சத்திரத்தை ஒட்டிவரும் இந்தப் பௌர்ணமி நாள் நம் மரபில் நீண்ட நெடுங்காலமாகக் கொண்டாடப்படும் திருநாளாக விளங்கிவருகிறது.

மகிமை நிறைந்த கார்த்திகை பௌர்ணமி தினத்தில்தான் இறைவன் அடிமுடி காணமுடியாத அக்னிப் பிழம்பாக நின்றார். இந்த அற்புத தினத்தில்தான் ஈசன் முப்புரங்களையும் எரித்தார். இறைவனை ஜோதி ரூபமாய்க் காண்பது ஞானத்தின் உயர்நிலை. அதுவும் இறைவன் மாபெரும் சுடராக எழுந்து நின்றதை நினைவுகூர்வதற்காக ஆலயங்களில் தீபம் ஏற்றுகிறோம்.

மகாதீபம்
மகாதீபம்
`2,668 அடி உயர மலையில் கார்த்திகை மகாதீபம்!' - திருவண்ணாமலையில் எதிரொலித்த `அரோகரா' கோஷம்

திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார். அதை உணர்த்தவே அந்தத் தலத்தில் இருக்கும் அனைத்து சிவாலய நந்திகளும் கருவறை நோக்கியிறாமல் மலையை நோக்கியே அமர்ந்திருக்கும். மலையே இறையான அந்தத் தலத்தில் திருக்கார்த்திகை தினத்தன்று ஏற்றப்படும் பிரமாண்ட சுடரைக் காணும்போது அந்தக் கயிலைநாதனையேதான் அதில் தரிசனம் செய்கிறோம்.

கார்த்திகை தீபத்தின் மகிமை குறித்து காஞ்சி மகாபெரியவர் சொல்லும்போது, ``இந்தக் கார்த்திகை தீபத்தை எந்த ஜீவன் பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகும்" என்று சாஸ்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருக்கிறார். 

அதாவது தர்ம சாஸ்திரத்தில் உள்ள ஸ்லோகம் ஒன்றை எடுத்துக் காட்டுகிறார்.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

மகாபெரியவா
மகாபெரியவா

இந்த ஸ்லோகத்தின் கருத்தை விளக்கும்போது, `` புழுக்களோ, பக்ஷிகளோ அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் எவனானாலும் சரி, உயிரினங்கள் எதுவானாலும் சரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் என்கிறார்.

இது ஆலயங்களில் ஏற்றப்படும் தீபங்களை தரிசனம் செய்வதால் மாத்திரம் இல்லை. நம் வீடுகளிலும் சிவ நாமம் சொல்லிக்கொண்டே நாம் ஏற்றிவைக்கும் ஒவ்வொரு தீபத்துக்கும் இது பொருந்தும். 

இந்தப் பௌர்ணமி தினத்தில் இறைவனை நினைத்து ஒரு விளக்காவது ஏற்றி ஒளி பெருகச் செய்வதன் மூலம் பெரும் பலன்களை அடையலாம் என்கின்றன புராணங்கள்.

சிவபெருமான்
சிவபெருமான்

கார்த்திகை மாதத்தின் அனைத்து நாள்களிலும் வீட்டு வாசலில் தீபமேற்றி வைக்க வேண்டும். தவறாமல் திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாள்களில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாள் அண்ணாமலையார் தீபம். அடுத்தநாள் சர்வாலய தீபம். சர்வாலய தீபத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சர்வாலய தீப நாளில் கோயில்களில் சொக்கப்பனை கொழுத்துவது வழக்கம்.

ஈசன் திரிபுரம் எரித்ததை உணர்த்தும் விதமாக இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஈசன் முப்புரத்தையும் அழிக்கப் புறப்பட்டபோது அவருக்கு தேவாதி தேவர்களும் துணை நின்றனர். ஆனால், அவர்கள் உள்ளத்தில் கர்வம் இருந்தது. தான் இன்றி சிவனால் முப்புரம் எரிக்க இயலாது என்று எண்ணிக்கொண்டனர். இதையறிந்த சிவபெருமானோ புன்முறுவல் பூத்தார். அந்தச் சிரிப்பிலிருந்து உருவான நெருப்பே முப்புரங்களையும் எரித்தது.

சிவபெருமான்
சிவபெருமான்
`திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா!’- சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ஆணவம் அற்ற இந்த ஆன்மாவே சிவம். அதன் ஆனந்தமே அனைத்துப் பகைகளையும் அழித்துவிடும் என்னும் உயர்ந்த தத்துவத்தை மூவுலகுக்கும் ஈசன் உணர்த்திய விளையாடல் இது. எனவே, ஆலயங்களில் நடைபெறும் சொக்கப்பனையைக் காணும்போது, ஈசனிடம் சரணாகதி அடைந்து ஆணவம் அழித்தால் மனதில் மகிழ்ச்சியும் பகை அற்ற வாழ்வும் நமக்கு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

வீடுகளை விளக்குகளால் அலங்கரிப்பதன் மூலம் வீட்டில் மகாலட்சுமியின் அருட்கடாட்சத்தை நாம் பெருகிறோம். விளக்கில் சுடர் லட்சுமி, ஒளி சரஸ்வதி, வெப்பம் பார்வதி என்பது ஐதிகம். சுடர் திகழும் விளக்கு மகாலட்சுமியின் சந்நிதி என்றே பெரியோர்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். எனவே, வீட்டில் தவறாமல் தீபமேற்றி அனைத்து அறைகளிலும் வைக்க இறைவனின் சாந்நித்யம் வீடுமுழுவதும் பரவி நிலைக்கும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு