திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

அணையாத அருள் ஒளி!

ஶ்ரீகோலவில்லி ராமர் உற்சவர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீகோலவில்லி ராமர் உற்சவர்

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் ஆலயம்

வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று திருவெள்ளியங்குடி. சுக்ரன் வழிபட்டு அருள்பெற்ற பதி. ஜாதகத்தில் சுக்ர பலம் இல்லாதவர்கள் வந்து வழிபடவேண்டிய அற்புத க்ஷேத்திரம். சுக்ரபுரி, பார்க்கவபுரி என்பன, இத்தலத்தின் புராண காலத்துப் பெயர்கள்.

அணையாத அருள் ஒளி!

மகாபலி, வாமனருக்குத் தானம் தருவதைத் தடுக்கும் விதம், வண்டாக மாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார் அசுர குரு சுக்ராசார்யர். பெருமாள் தர்ப்பையை எடுத்துத் துவாரத்தின் அடைப்பைச் சரிசெய்ய, சுக்கிரபகவானின் பார்வை பறிபோனது. அவருக்கு மீண்டும் கண்ணொளி கிடைத்த தலம் இது. வெள்ளியாகிய சுக்ரன் பூஜித்ததால். இவ்வூருக்கு திருவெள்ளியங்குடி என்று பெயர் வாய்த்தது.

திருஇந்தளூர் தலத்தில் தமக்குக் காட்சி தர தாமதித்த காரணத்தால் மனம் வருந்திய திருமங்கை ஆழ்வாரைப் பெருமாள் சமாதானம் செய்த தலம் இது. அதனால் மகிழ்ந்த ஆழ்வார், `கோலவில்லி ராமர்’ என்ற திருநாமத்தைக் குறிப்பிட்டே பத்து பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார்.

சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் செவ்வாழையே தலவிருட்சம். கருங்கல் தரையில் வளர்ந்துள்ள இந்த வாழை வருடத்துக்கு ஒருமுறை குலைதள்ளுவது கலியுக அதிசயம் ஆகும். புத்திரப் பாக்கியம் வேண்டுவோர் இந்த விருட்சத்தை தரிசித்து வணங்கிச் செல்கிறார்கள்.

‘புஷ்கலா வர்த்தக விமானம்’ இக்கோயிலின் விசேஷம். பிரம்மா, இந்திரன், சுக்ரன், பூமாதேவி, பரசுராமர் ஆகியோர் பூஜித்த பெருமாள் இங்கு ஷீராப்திபுஜங்க சயனராகக் காட்சி தருகிறார்.

அணையாத அருள் ஒளி!

மயன் அமைத்த கோயில் இது என்கின்றன ஞானநூல்கள். மயனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் வில், அம்பு தாங்கியபடி ராமனாய் காட்சி தந்தாராம். ஆகவே, ஸ்வாமிக்கு கோலவில்லி ராமர் என்ற திருப்பெயர் வந்தது. எப்போதும் அலங்கார கோலத்தில் அருள்வதால், ‘ஸ்ருங்கார சுந்தரர்’ எனவும் போற்றப்படுகிறார்.

இங்கே மூலவர் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் கிடையாது. மயனுக்கு அனுக்ரஹம் செய்யும்போது தம்முடைய சங்கு-சக்கரத்தைக் கருடனிடம் கொடுத்தாராம் பெருமாள். இந்த ஐதிகத்தின்படி, மூலவர் எதிரேயுள்ள கருடன், சங்கு-சக்கரம் ஏந்தியவராக நான்கு திருக்கரங்களுடன் அருள்கிறார். வேறெங்கும் காண்பதற்கரிய கோலம் இது. சர்ப்ப தோஷங்களால் அவதிப்படுபவர்கள், இந்தக் கருடனை பஞ்சமி தினங்களில் வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

அணையாத அருள் ஒளி!

தாயார் திருநாமம் அருள்மிகு மரகதவல்லி. மூலவருக்கு வலதுபுறம் உள்ள திருச்சுற்றில் தனிச் சந்நிதியில் அருள்கிறார். சுக்ர வாரங் களில் (வெள்ளிக் கிழமைகளில்) இந்தத் தாயாரை தரிசித்து வழிபட்டால், இல்வாழ்க்கை இனிமையாகும்.

சுக்ரனுக்குத் திருமால் அருளிய அனுக்கிரஹம், இந்தக் கோயிலில் அணையாத விளக்கொன்றின் தீபச் சுடரொளியாக நிலைத் துள்ளது என்பது ஐதிகம். பார்வைக் குறைபாடு - கண் பிரச்னைகள் உள்ளவர்கள், ஒரு மண்டல காலம் ஆலயத்தில் அணையா விளக் கில் எண்ணெய் சேர்த்து வழிபட்டால் கண் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு வந்து பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வழிபட்டால், சுக்ரயோகம் கூடிவரும்; பதவி உயர்வு, அதிர்ஷ்ட வாய்ப்புகள், கல்யாண வரம், புத்திரப் பேறு என சகல வரங்களும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது? : கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆட்டோ, கார் வசதியுண்டு.