Published:Updated:

கிருஷ்ணன் அவதரித்த முதல்நாள் நிகழ்ந்தவை உணர்த்தும் தத்துவங்கள் என்ன? -திருப்பாவை 25

திருப்பாவை - 25
திருப்பாவை - 25

கண்ணன் தோன்றினான், அதுவரை பிணைத்திருந்த விலங்குகள் அறுந்துபோயின. தடைகள் அகன்று வழிகள் பிறந்தன. இயற்கைச் சீற்றமும் ஒன்றும் செய்யவில்லை. இறுதியாக, கண்ணனுக்குப் பதிலாக சிறைக்குள் வந்த சிசு, மாயை. கண்ணன் எங்கு குடிகொள்கிறானோ அங்கு மாயை முற்றிலும் விலகும்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை
திருப்பாவை

தசாவதாரங்களில் கண்ணனின் அவதாரம் தனித்துவம் மிக்கது. அவதரித்தது ஓரிடம் வளர்ந்தது ஓரிடம். அவதார நோக்கம், கம்சன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்வது. ஆனால், அவதரித்த நாள்முதல் சம்ஹாரம் செய்த நாள் வரையிலும் நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் பக்தியோடு நினைந்து போற்றத்தக்கது. சிறைச்சாலையில் இரவில் பிறந்த குழந்தை, அன்றைய இரவிலேயே கோகுலம் சென்றடைகிறது.

நந்தகோபன், குழந்தையை எடுத்துக்கொண்டு சிறையிலிருந்து வெளியேற வேண்டும். தாழிடப்பட்டிருந்த தடைகளான கதவுகள் தானாய்த் திறக்கின்றன. அதுவரை விழித்திருந்த காவலர்கள் சோர்ந்து மயங்குகிறார்கள். குழந்தைக் கண்ணனை கூடையில் வைத்து வசுதேவர் யமுனையைக் கடக்கும்போது, பெருமழை பிடித்துக்கொண்டது. அப்போது, ஐந்துதலை நாகம் தன் படங்களைக் குடைபோல் விரித்து மழையினின்றும் குழந்தைக் கண்ணனைப் பாதுகாத்தது. அந்த நாகம், ஆதிசேஷன் என்று சொல்வதுண்டு. ஆனால், ஆதிசேஷன் ஏற்கெனவே கோகுலத்தில் பலராமனாக அவதரித்துவிட்டபடியால் அது, ஆதிசேஷனாக இருக்க முடியாது.

திருப்பாவை
திருப்பாவை

கண்ணனின் திருவடி தன்மீது பட்டு சாபவிமோசனம் பெறவேண்டும் என்பதற்காக, காளிங்கனே அப்படிக் குடை பிடித்து வந்தான் என்பது ஆன்றோர் வாக்கு. கோகுலம் அடைந்து அங்கு பிறந்திருந்த பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து கண்ணனுக்குப் பதிலாய் வைத்துவிடுகிறார் நந்தகோபன். எல்லாம் இயல்பாகிவிடுகிறது.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் பக்தர்களுக்குப் பல செய்திகளைச் சொல்கின்றன. கண்ணன் தோன்றினான், அதுவரை பிணைத்திருந்த விலங்குகள் அறுந்துபோயின. தடைகள் அகன்று வழிகள் பிறந்தன. இயற்கைச் சீற்றமும் ஒன்றும் செய்யவில்லை. இறுதியாக, கண்ணனுக்குப் பதிலாக சிறைக்குள் வந்த சிசு, மாயை. கண்ணன் எங்கு குடிகொள்கிறானோ அங்கு மாயை முற்றிலும் விலகும். கிருஷ்ணாவதாரத் தொடக்கத்தின் முதல்நாளே இத்தனை சிறப்பான உபதேசங்களை நமக்குச் சொல்லும் என்றால், முழு அவதார மகிமைகளையும் அறிந்துகொண்டால் இந்த உலகில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஏதாவது எஞ்சியிருக்குமா என்ன...

திருப்பாவை
திருப்பாவை

அதனால்தான், கோதை கண்ணனைப் போற்றும் இந்தப் பாசுரத்தின் முதல் வரியிலேயே, "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர..." என்று பாடுகிறாள்.

ஒளித்து வளர்ந்து பின்னொருநாள் கம்சனை வதம் செய்யவேண்டிய அவசியம் பரந்தாமனுக்கு இல்லை. ஒரே நாளில் ஒரே கணத்தில் நரசிம்ம அவதாரம்போல் ஓர் அவதாரம் செய்து அவனை சம்ஹாரம் செய்திருக்கலாம். ஆனால், கண்ணன் பரமதயாளனாய் அவதரித்தார். ஒவ்வொரு கட்டத்திலும் தன் மகிமையை உணர்த்தினார். அவற்றையெல்லாம் கண்டாவது கம்சன் தன்னை மாற்றிக்கொண்டிருக்கலாம்.

முதல்நாள் குழந்தை மாறி மாயை எச்சரித்ததும் தன் அகங்காரம் அழிந்து சரணாகதி செய்திருக்கலாம். பின்பு, அவன் அனுப்பிய பூதகியையும் சகடாசுரனையும் கொன்று வீழ்த்தியபோது, கிருஷ்ணனின் மகிமையை உணர்ந்து அவனைத் தொழுதிருக்கலாம். ஆனால், அவ்வாறு கம்சன் சரணாகதி செய்யவில்லை.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

மருமகன் வளர்வது கண்டு மகிழவேண்டிய மாமனே மனம் பொறுக்காமல் அவனை அழிக்க விரும்பினான். அவன் மனத்தின் வெறுப்பே ஒரு நெருப்பாக மாறியது. அந்த நெருப்பு, கண்ணனால் உண்டானது. அதுவே அவனை அழித்தது.

இவற்றையெல்லாம் கோதை பாடித் துதிக்கிறாள். அவன் புகழினைப் பாடி அவன் சந்நிதானத்தில் அவனுடைய அருளை யாசிப்பதுபோல நிற்கிறாள்.

"கண்ணா, நீ தேவகியின் மகனாய்ப் பிறந்து யசோதையின் மகனானாய். அதுகண்டு பொறாத கம்சனின் வயிற்றில் நெருப்பைப்போல நின்றாய். உன்னைப் பாடுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். நீ எங்களுக்குப் பறை தந்து எங்களை உன் நாமசங்கீர்த்தனம் செய்யப் பணிகொள். அப்படி நீ எங்களைப் பணி கொண்டால், குறையில்லாத செல்வம் எங்களை அடையும். நாங்கள் உன் சேவகத்தைக் கொள்வோம். எங்கள் வருத்தங்கள் எல்லாம் தீரும். எல்லையில்லாத மகிழ்ச்சியினை அடைவோம். அதற்கு நீதான் எங்களுக்கு அருள வேண்டும்" என்று போற்றுகிறாள் ஆண்டாள்.

கிருஷ்ணன் - ராதை
கிருஷ்ணன் - ராதை

ஆண்டாள், குறையில்லாத செல்வம் என்று சொல்வது கண்ணனின் கருணையையே. இந்த உலகின் செல்வங்கள் எல்லாம் ஏதோவொரு விதத்தில் துன்பங்களைக் கொண்டுவருவன. திருத்தக்க என்றால், திருமகளுக்கு உகந்த என்று பொருள். திருமகளுக்கு உகந்த செல்வம், அந்த மாலவனே. அப்படிக் குறைவில்லாத அந்த மாலவனை அடைந்து அவன் சேவையில் மனம் நிறைத்தால், மன வருத்தங்கள் எல்லாம் தீர்ந்து எல்லையில்லாத நிரந்தர மகிழ்ச்சியை அடைந்துவிடலாம். ஆண்டாள், கண்ணனிடத்தில் அத்தகைய மகிழ்ச்சியையே வேண்டுகிறாள்.

வென்று பகைகெடுக்கும் வேல்கொண்ட கோபாலனைப் பாட அழைக்கும் கோதை... திருப்பாவை - 24
அடுத்த கட்டுரைக்கு