Published:Updated:

மகாயோகி காலக்ஞானி ஶ்ரீவீரபிரம்மேந்திரர் -20

ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

மகான் சரிதம் `பாபா மாமி' ரமா சுப்ரமணியம்

நவாபு வேண்டிக்கொண்டபடி அவருக்குக் காலக்ஞானத்தை உபதேசித்த ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், நவாபுவின் குடும்பத்தாருக்கு ஆசிகள் வழங்கிவிட்டுப் புறப்பட்டார். அவரும் சீடர்களும் வழியில்-இரவு நேரங்களில் பல கிராமங்களில் ஓய்வெடுத்தனர். விஜயவாடா துர்காமாதா கோயிலில் ஐந்து நாள்கள் தங்கியிருந்து வழிபட்டனர். நிறைவில் மடத்தை அடைந்தனர்.

மகாயோகி காலக்ஞானி 
ஶ்ரீவீரபிரம்மேந்திரர் -20

ந்த நிலையில், அரண்மனையிலும் வெளி இடங்களிலும் சித்தய்யாவுக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கண்ட மற்ற சீடர்கள், சித்தய்யா மீது பொறாமை கொண்டனர். அவர் களின் இந்த மனநிலையை மாற்ற நினைத்தார் ஸ்வாமி. அதற்கான தருணத்துக்காகக் காத்திருந்தார்.

சில நாள்கள் கழிந்ததும் சீடர்களுடன் திருப்பதிக்குச் சென்றார் ஸ்வாமி. அங்கு வழிபட்டபின்னர் `கட்டா' எனும் கிராமத்தை அடைந்தனர். வழியில் ஸ்வாமியின் சித்தப்படி ஒரு சம்பவம் நடந்தது.

ஸ்வாமி, தனது யோக ஆற்றலைக் கொண்டு ஓர் நாயின் சடலத்தை உருவாக்கினார். அது, தாங்கள் செல்லும் வழியில் கிடக்கும்படிச் செய்தார். புழுக்களும் பூச்சிகளும் நெளிந்து கொண்டிருந்த அந்தச் சடலத்தின் துர்நாற்றத் தைத் தாங்க முடியாமல், அவ்வழியே செல்வோர் மூக்கைப் பொத்திக்கொண்டு வேகவேகமாக கடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த இடத்தை நெருங்கிய ஸ்வாமியின் சீடர்களும் அவ்வாறே நாசித் துவாரங்களைக் கைகளால் மூடியபடியே கடந்துசெல்ல முற்பட்டனர். ஆனால், எல்லா உணர்வு நிலைகளையும் கடந்துவிட்ட சித்தய்யா மூக்கை மூடிக்கொள்ளவில்லை. ஸ்வாமி தமக்கு உபதேசித்த மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்து வந்தார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி பொறுமையாக நடந்து வந்த ஸ்வாமி, நாயின் சடலத்தை நெருங்கியதும் சட்டென்று நின்றார்.

இதைக் கவனித்த சீடர்கள் ஸ்வாமியிடம் அந்த இடத்தைவிட்டு விரைவாகச் சென்று விடலாம் என்று வேண்டினர்.

ஸ்வாமி சிரித்துக்கொண்டே “குழந்தைகளே! அனைவரும் சற்றுப் பொறுங்கள். குரு பக்தி யிலும் சேவையிலும் நீங்கள் மிகச் சிறந்தவர்கள் அல்லவா?'' என்று வினவினார்.

சீடர்களுக்குப் பொறுமை இல்லை. ``ஆம்! அதில் தங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். ஆனால், இந்த இடத்தில் நின்று குரு சேவை யைப் பற்றி வினவுகிறீர்களே... முதலில் நாம் இங்கிருந்து நகரலாம்'' என்றார்கள். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த ஸ்வாமி, `` சற்றுப் பொறுங்கள்... உங்களின் குருபக்தியை நிரூபித்துக் காட்டும் நேரம் வந்து விட்டது. நீங்கள் உண்மையில் குருபக்தியில் சிறந்தவர்கள் எனில், இந்த நாயின் உடலைக் கையால் எடுத்துச் சுவைத்து உண்ணவேண்டும். இது என் ஆணை!'' என்றார்.

சீடர்கள் திடுக்கிட்டனர். அவர்களால் அதை நெருங்கக்கூட முடியாது. அவ்வளவு துர்நாற்றம். ஆனால் குருநாதரோ, அதைச் சாப்பிடச் சொல்கிறாரே என்று திகைத்தனர். அவர் தங்களைச் சோதிக்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது. செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சித்தய்யா, ``ஸ்வாமி! நான் உங்க ளின் உத்தரவை நிறைவேற்றுகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்!’’ என்றார்.

ஸ்வாமி, “சபாஷ் சித்தா. இதுதான் உண்மை குருபக்தி. செல் மகனே...'' என்று சித்தய்யாவின் முதுகில் தட்டி அவரைப் பாராட்டினார்.

மகாயோகி காலக்ஞானி 
ஶ்ரீவீரபிரம்மேந்திரர் -20

குருவை வணங்கிப் பணிந்த சித்தய்யா, நாயின் சடலத்தின் அருகில் சென்று எந்தவித முகச்சுழிப்பும் அருவருப்பும் இல்லாமல், விருந்து உண்பது போல் ஆனந்தமாக உண்டு முடித்தார். அவர் கண்களுக்கு அந்த நாயின் சடலம், குருவின் பிரசாதமாகவே தென்பட்டது.

மற்ற சீடர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். `இது எப்படி சாத்தியம்?' என்று அவர்களுக்குள் திகைப்பு!

குருவருளே அனைத்துக்கும் காரணம். சித்தய்யா அங்கு அமர்ந்ததுமே `வீரபிரம்மேந் திரருக்கு அர்ப்பணம் செய்கிறேன்' என்று வணங்கிவிட்டே உண்ண ஆரம்பித்தார். சத்குருவுக்குச் சமர்ப்பணம் செய்த பிறகு உண்ணும் எந்தப் பொருளும், சத்குருவின் பிரசாதமாக மாறிவிடும். அவ்வாறு புனிதமாக் கப்பட்ட பிரசாதத்தில் எவ்வாறு துர்நாற்றம் வரும்? இந்த உண்மையை உணர்ந்த மற்ற சீடர்கள் அனைவரும் தங்களை எண்ணி வெட்கத்தால் தலைகுனிந்தனர்.

“இப்போதாவது சித்தய்யாவின் குரு பக்தியை உணர்ந்தீர்களா? குருசேவையில் அவனை மிஞ்சியவர் எவரும் இல்லை என்பதை உணர்த்தவே இந்த நாடகம்!’’ என்றார் ஸ்வாமி.

அனைவரும் சித்தய்யாவை வணங்கி அவரிடம் மன்னிப்பு வேண்டினர். சித்தய்யாவும் ``நீங்கள் என் சகோதரர்கள்'' என்று கூறி அவர்களை அன்புடன் அணைத் துக் கொண்டார்.

பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் ஓரிடத்தில் மிகப்பெரிய ஆல மரத்தைக் கண்டார்கள். களைப்பு தீர அங்கே சற்று ஓய்வெடுக்க தீர்மானித்தனர்.

ஆலமரத்தடியில் அமர்ந்ததும் சித்தய்யா ஸ்வாமியின் பாதங் களைப் பிடித்து விட்டு பாதசேவை செய்தார். அவரிடம், ‘`சித்தா! என்னிடம் ஏதேனும் கேட்க விரும்பினால் கேள்'' என்றார்.

“ஸ்வாமி! சாங்க்ய யோகத்தைப் பற்றியும், சாங்கிய சூத்திரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!” என்றார் சித்தய்யா.

அதேநேரம், சட்டென்று ஏதோ புலப்பட்டவ ராக ஸ்வாமி கூறினார்: “குழந்தாய்! சற்று நேரத்தில் விநோதமான ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. ஆகவே, நீ கேட்டுக்கொண்டது குறித்து மடத்துக்குத் திரும்பியதும் உபதேசிக் கிறேன். இப்போது நீயும் ஓய்வெடுத்துக் கொள். எனது சேவையில் உன்னையே நீ சமர்ப்பணம் செய்துகொண்டுள்ளாய். உன் உடலுக்கும் ஓய்வு தேவை. போ... போய் உறங்கு!''

சித்தய்யா அப்போதுதான் மற்ற சீடர்களைக் கவனித்தார். அவர்கள் குறட்டைவிட்டு ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

சித்தய்யாவும் ஸ்வாமியின் உத்தரவுப்படி படுத்துக்கொண்டார். ஆனால் உறக்கம் வரவில்லை. மனத்தில், அடுத்த நிலையை அடைவதற்கான வழி என்ன என்பது பற்றிய எண்ணங்கள் அலைமோதின. ஆத்ம விடுதலையை அடைய துடிப்பவரைப் பசி, உறக்கம் போன்ற மாயை எளிதில் நெருங்காது!

ஸ்வாமியும் அவரின் சீடர்களும் தங்கி யிருந்த அந்த ஆலமரத்துக்கு அருகில், மற்றொரு ஆலமரம் இருந்தது. அதன் நிழலில், ஒரு தம்பதி தங்கியிருந்தனர்.

தொழுநோயால் பீடிக்கப் பட்டிருந்த கணவர், நிற்கவும் உட்காரவும் இயலாமல் மனைவியின் மடியில் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய உடல் முழுவதும் தொழுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. கை-கால்களில் பாதிவிரல்களே மிச்சம் இருந்தன.

அவர் ஆகாயத்தை நோக்கி வணங்கியவராக, “ஶ்ரீஹரி நாராயணா! துன்பக் கடலில் மூழ்கியவருக்குத் தோழனாக விளங்குபவரே... என் பாவங் களைப் போக்குவீராக... விரைவில் என்னை உம்முள் ஐக்கியப் படுத்திக்கொள்ளும்.

ஹே மாதா ஶ்ரீதேவி நாராயணி! இந்தப் பிரபஞ்சத்தின் தாயான உனக்கு, உன் குழந்தை யின் அழுகுரல் கேட்கவில்லையா? என் மீது இரக்கம் இருந்தால், தொழுநோயைக் குணமாக்கு. இல்லையெனில், என் உயிரை எடுத்துக்கொள் அம்மா!” என்று அழுது புலம்பினார்.

மட்டுமன்றி மனைவியைப் பார்த்து, ‘`என் உடல் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனினும் சிறிதும் முகம் சுளிக்காமல் என்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறாய். புண்ணிய ஸ்தலங்களுக்கு எல்லாம் என்னைச் சுமந்து சென்றிருக்கிறாய். என் உடலின் பாரத்தைத் தாங்க இயலாமல் நீ அடைந்த வேதனையைக்கூட இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. எனக்காக நீ அனுபவிக்கும் வலியும் வேதனையும் உன் பதிபக்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால், இனியும் என்னால் உன் வேதனையைப் பொறுக்க இயலாது.

கணவன், தன்னை நம்பி வந்திருக்கும் பெண்ணைக் கண் கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். அப்படியான தகுதி எனக்கு இல்லை. உனக்குப் பாரமாகவே இருந்து வருகிறேன். என் உயிரை அந்த இறைவன் எடுத்துக் கொண்டு உனக்கு விடுதலை அளிக்கட்டும்'' என்றெல்லாம் பலவாறு புலம்பிக்கொண்டிருந்தார்.

அதைக் கண்டு அந்தப் புனிதவதியும் கண்ணீர் விட்டாள். கணவருக்கு ஆறுதல் கூறினாள். அத்துடன், அழுது அரற்றியதால் கணவனின் உதடுகள் உலர்ந்துபோனதையும் உடல் நடுங்குவதையும் கவனித்தாள். அவருக்கு உடனடியாக தண்ணீர் தேவை என்பதைப் புரிந்துகொண்டாள்.

தண்ணீர் சேகரித்துவர வேண்டும் எனில் கணவரைத் தனியே விட்டுச் செல்ல முடியாது. ஆகவே, செய்வதறியாது கலங்கினாள். உள்ளச் சோர்வுடன் உடல் சோர்வும் சேர்ந்துகொள்ள அப்படியே மயங்கிச் சரிந்தாள்!

அந்தத் தம்பதியின் புலம்பலும் பிரார்த்தனை யும் ஶ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாகவே விளங்கிய ஶ்ரீவீரபிரம்மேந்திரரின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

அதேநேரம் உறங்காமல் படுத்திருந்த சித்தய்யாவும் எழுந்து கொண்டார். அவரிடம், “சித்தய்யா! சற்று முன் ஓர் அழுகுரல் கேட்டது. இப்போது அது நின்றுவிட்டது. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்டார்.

``ஸ்வாமி! சற்றுமுன் என்னிடம் தாங்கள் விநோதமான சம்பவம் இங்கு நடக்கப் போகிறது' என்று கூறினீர்கள். ஆக, இது தங்களின் லீலையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?'' என்றார் சித்தய்யா.

வாழ்வில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் ஒருவர் இறைவனிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தால் அவர் நிச்சயம் காப்பாற்றப்படுவார். இதை மெய்ப்பிக்கும் விதமாக அந்த அற்புதத்தை நிகழ்த்தினார் ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி.

- தொடரும்...

மகாயோகி காலக்ஞானி 
ஶ்ரீவீரபிரம்மேந்திரர் -20

மணலைப் போட்டு அன்னம் சமைத்த குருக்கள்!

ற்புதமான கோயில் அது. ஆனாலும் ஸ்வாமி நைவேத்தியத்துக்கு ஏற்பாடு செய்யவும் சிரமப்படும் சூழல். கோயிலின் குருக்கள் மிகச் சிரமத்துடன் அரிசி சேகரித்துவிடுவார். ஒருநாள், அரிசி இருக்கும் நினைவில் உலைக்கு வைத்தார். ஆனால் மணி அரிசிகூட இல்லை என்பதை அறிந்ததும் கலங்கினார்.

அப்போது, ``கலங்காதே! வைகைக் கரைக்குச் செல். கை நிறைய மணல் எடுத்து வந்து, அன்னபூரணியை மனதார வணங்கி பானையில் இடு. இன்று முதல், உனது பானை பொங்கப் பொங்கச் சோறளிக்கும்!’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. அப்படியே செய்தார் குருக்கள். வைகைக் கரை மணலை உலையிட, உலை கொதித்து, அரிசி வெந்து, சோறாகி, அன்னப் பூக்கள் மலர்ந்தன. இங்ஙனம் அன்னம் மலர்த்திய ஈசன், அன்ன விநோதன் என்று திருநாமம் கொண்டார்.

மதுரை நகருக்குள், செல்லூர் பகுதியில் உள்ள ஆப்புடையார் கோயிலில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இங்கு அருளும் ஆப்புடையாரை வணங்கினால் வினைப்பயன் பற்றாது என்கிறார் திருஞானசம்பந்தர். இவரை வழிபட்டால் வீட்டில் அன்னத்துக்குக் குறை இருக்காது என்கின்றனர் பெரியோர்கள்.


- தி.காசி, தூத்துக்குடி