Published:Updated:

ஆறுதல் தரும் ஆறுமுகன்... இன்று கட்டாயம் செய்ய வேண்டிய கந்த வழிபாடு! #VaikasiVisagam

பழநி சென்ற பால தேவராயர் அங்கு இருந்த நோயுற்றவர்களைக் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நோய் தீரப் பாட வேண்டிய கவசத்தை அருளுமாறு முருகன் அவருக்குக் கட்டளையிட்டார். உடனே பால தேவராயர் கந்த சஷ்டிக் கவசத்தைப் பாட, அதைக் கேட்டவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற்றனர்.

முருகப் பெருமானை `ஸுதாங்கோத்பவோ மேஸி’ என்று சுப்பிரமண்ய புஜங்கத்தில் போற்றுகிறார் ஆதி சங்கரர். இதற்கு சிவனின் அங்கத்திலிருந்து அவதரித்தவர் என்று பொருள். முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆறுமுகமே. ஆறு என்ற எண்ணிக்கையும் முருக வழிபாடும் நெருங்கிய தொடர்புடையன. 

வைகாசி விசாகம் முருகப் பெருமானின் திருநட்சத்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு விசாகன் என்ற திருநாமமும் உண்டானது. விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டத்தையே குறிப்பிடுகிறது.

முருகன்
முருகன்

`ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரசம் தத்ஷட் ஸுத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே' என்கிறது திருச்செந்தூர் தலபுராணம். 

இதில் ஷடரிம் என்றால் ஆறுவிதமான அவகுணங்களான காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மோகம் ஆகியவற்றைப் போக்குபவன்.

ஷட்விகாரம் எனபதற்கு உண்டாகுதல், இருத்தல், வளர்தல், மாற்றம் அடைதல், குறைதல், அழித்தல் ஆகிய ஆறு செயல்களும் இல்லாதவன் என்று பொருள்.

ஷட்கோசம் எனப்படும் அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், அதீதமயம், ஆனந்தமயம் என்று ஆறு நிலைகளில் திகழ்பவன்.

ஆறு ரசங்களான தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியனவாகவும் இருப்பவன் என்பதையே ஷட்ரஸம் என்கிறது.

ஆறுவகையான சாஸ்திரங்களான, ஸாங்கியம், வைசேஷிகம், யோகம், நியாயம், மீமாம்ஸம், வேதாந்தம் ஆகிய ஞானங்களின் திரட்சியாக விளங்குபவன் என்பதையே ஷட்சூத்திரம் என்கிறது.

ஒன்றிலிருந்தே ஆறு உருவானது. சிவம் என்கிற ஒன்றிலிருந்து ஷண்முகம் என்னும் ஆறுமுகம் உருவானது. அதுபோலவே வைதிகம் என்பதிலிருந்து காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்று ஆறு மதங்களும் பிறந்தன. இந்த ஷண்மதங்களாகவும் இருப்பவன் அந்த முருகக்கடவுள்.

சிக்ஸ, கல்பம், வ்யாகரணம், நிருத்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்று ஆறு வேத அங்கங்களாகவும் அவனே விளங்குகிறான் என்பதை ஷட்வேதாங்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

முருகக் கடவுள்
முருகக் கடவுள்

ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோ ஜாதம், அதோமுகம் என்று ஆறுமுகங்கள் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபமாகக் காட்சிகொடுக்கும் நிலையை ஷண்முகம் என்று போற்றுகிறோம்.

ஆறுமுகக் கடவுளே முழுமுதற்கடவுள் என்று உணர்ந்து பாடிப் போற்றியவர் அருணகிரியார். அருணாசலத்தில் அமர்ந்த ஈசனே, ஆறுமுகம் கொண்டு அவதரித்தான். அந்த ஆறுமுகங்களும் ஆறு பணிகளைச் செய்கின்றன என்கிறார் அருணகிரியார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என்று ஆறு படை வீடுகளில் அமர்ந்தவன். ஆறு குண்டலினி சக்திகளைக் குறிப்பன ஆறுபடை வீடுகள்!

முருகனுக்கு உரிய மந்திரத்தை ஷடாட்சரம் என்கிறார்கள். `சரவணபவ' எனும் ஆறெழுத்து மகிமை மிக்கது. ஆறெழுத்தைச் சொல்ல ஆறுதல் பிறக்கும் என்பது ஆன்றோர் மொழி.

முருகப் பெருமன்
முருகப் பெருமன்

கட்டாயம் செய்ய வேண்டிய கந்த வழிபாடு

வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறப்புவாய்ந்தது. இந்த நாளில் கட்டாயம் வீட்டில் கந்த சஷ்டிக் கவசம் படிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசத்தை பாலதேவராயர் பாடியருளினார். பழநி சென்ற பால தேவராயர் அங்கு இருந்த நோயுற்றவர்களைக் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நோய் தீரப் பாட வேண்டிய கவசத்தை அருளுமாறு முருகன் அவருக்குக் கட்டளையிட்டார். உடனே பால தேவராயர் கந்த சஷ்டிக் கவசத்தைப் பாட, அதைக் கேட்டவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற்றனர். அதன்பின் நோய் தீர்க்கும் காப்பாக கந்த சஷ்டிக் கவசம் வழங்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் நோய்த் தொற்று மக்களை வாட்டி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் நோயிலிருந்து புறத்தைப் பாதுகாத்துக்கொள்ளச் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அகத்தைப் பாதுகாக்க கந்த சஷ்டிக் கவசத்தைப் பாராயணம் செய்வோம். மேலும் முருகனின் படத்துக்கு மாலை சாத்தி நாம் உண்ணும் உணவையே அவனுக்குப் படைத்து வழிபடுவோம். 

காலை மாலை இருவேளையும் கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் ஆகியவற்றைச் சொல்லி வழிபடுபாடு செய்து நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு