திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

கண்ணொளி தருவாள் நகரி தேசம்மா..!

நகரி ஶ்ரீதேசம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
நகரி ஶ்ரீதேசம்மா

ஆந்திர மாநிலத்தில் பரிகாரக் கோயில்

ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது நகரி தேசம்மா திருக்கோயில். இங்கே, கண் நோய்கள் - பார்வைக் குறைபாடுகளைப் போக்கும் அன்னையாக அருள்கிறாள் அம்பிகை.

கண்ணொளி தருவாள் 
நகரி தேசம்மா..!

திருத்தணியைக் கடந்து, தமிழக - ஆந்திர எல்லையான நகரியை அடைந்தால், அவ்வூரின் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்து டி.ஆர். கண்டிகை எனும் கிராமத்தை அடையலாம். இங்குதான், மலைத் தொடரின் பின்னணியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது தேசம்மா ஆலயம்.

தமிழகம், ஆந்திரா மட்டுமன்றி வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவிலான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் போன்று ஆந்திராவின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் இது என்கிறார்கள் பக்தர்கள்.

கண்ணொளி தருவாள் 
நகரி தேசம்மா..!
கண்ணொளி தருவாள் 
நகரி தேசம்மா..!
EOS-3000D

திருக்கோயிலில் விளக்கேற்றி அன்னையை வழிபடும் பக்தர்கள், பூஜை காலத்தில் அம்பிகையை தரிசிக்க அவளின் சந்நிதிக்கு முன் திரளுகிறார்கள். பூஜை முடிந்ததும் ஆலயப் பூசாரி அம்மனை வணங்கிப் பிரார்த்தித்து விட்டு பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கிறார். இந்தத் தீர்த்தத் தெளிப்புக்காகவே கூட்டம் மொத்தமும் கோயிலில் காத்திருக்கிறது.அம்மனின் பிரசாதத் தீர்த்தம் பட்டால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முன்னொரு காலத்தில், இங்கு வசித்த பழுங்குடி மூதாட்டி ஒருவர் காட்டுக்கு விறகு சேகரிக் கச் சென்ற இடத்தில், தவறி புதருக் குள் விழுந்தார். முள் குத்தியதால் அவரின் பார்வை பறிபோனது. ஆளரவமற்ற அந்த இடத்தில் வலியால் அலறித் துடித்தார்.

அப்போது அங்கு தோன்றிய சிறுமி ஒருத்தி, மூதாட்டியைப் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்தாள். காயங்களுக்கு மருந்து இட்டதுடன், பார்வை கிடைக்கவும் வழி சொன்னாள்.

``நீங்கள் தவறி விழுந்த இடத்தில் தோண் டினால் அம்மன் விக்கிரகம் ஒன்று கிடைக்கும். அதை வெளியே எடுத்து வழிபடுங்கள். அருகிலேயே வேறோரு பள்ளம் தோண்டினால் தீர்த்தம் பெருகும். அதை முகத்தில் தெளித்துக்கொண்டால் பார்வை மீண்டும் கிடைக்கும்’’ என்று கூறு மறைந்தாள் சிறுமி.

அன்றிரவு மூதாட்டியின் கனவில் தோன்றிய பார்வதிதேவி, ``சிறுமியாக வந்தது நான்தான். சிவனாரின் சாபத்தால் பூமியில் மனிதப் பெண் ணாக அவதரித்தேன். தேசமெல்லாம் அலைந்து திரிந்து விட்டு, இங்கு நகரிக்கு வந்து கண்மூடி தவத்தில் இருக்கிறேன். நான் கூறியது போன்று எனது விக்கிரகத்தை எடுத்து கோயில் அமைத்து, அருகில் தோன்றும் தீர்த்தத்தால் அபிஷேகிக்க வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்துக்குத் தீராத கண் நோய்களையும் குணமாக்கும் அற்புத சக்தி உண்டு” என்று அருளி மறைந்தாள்.

விடிந்ததும் அந்த மூதாட்டி மற்றவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தாள். அங்கே தோண்டிய போது அம்மன் விக்கிரகம் வெளிப் பட்டது. அதேபோல் அருகிலேயே வேறொரு பள்ளம் தோண்டியபோதும் தீர்த்தம் பொங்கிப் பெருகியது. அதைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் தீர்த்தப் பிரசாதத்தை முகத்தில் தெளித்ததும் மூதாட்டிக்குப் பார்வை மீண்டது.

இதையடுத்து அங்கே அம்மனுக்குச் சிறு கோயில் கட்டப்பட்டது; திருக்குளம் உருவாக்கப்பட்டது. தேசம் எல்லாம் அலைந்துதிரிந்து விட்டு நகரியில் தவம் செய்ய அமர்ந்ததால், அம்மனுக்கு தேசம்மா என்று பெயர் சூட்டி வழிபட ஆரம்பித்தனர் மக்கள் என்கிறது தலபுராணம்.

கண்ணொளி தருவாள் 
நகரி தேசம்மா..!

ஒருமுறை நகரிக்கு வந்து தேசம்மாவை தரிசித்து வழிபட்டால், தேசமெங்கும் தல யாத்திரை செய்த புண்ணியம் கிடைக் கும்; அம்மன் தீர்த்தம் தெளிக்கப் பெற்றால், சகலவிதமான பார் வைக் குறைபாடுகளும் மெள்ள மெள்ள குணமாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

அவ்வகையில், கண் பார்வை தொடர்பான பிணிகளால் அவதிப் படும் அன்பர்கள் இந்தக் கோயிலின் வளாகத்தில் 21 நாள்கள் தங்கியிருந்து, ஈசான்ய மூலையில் உள்ள திருக்குளத்தில் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுகின்றனர். அத்துடன், மூன்று வேளைகளும் அம்மனைப் பூஜித்து அபிஷேக தீர்த்தத்தைக் கண்களில் தெளித்துக் கொள் கிறார்கள். தினமும் அங்கேயே உணவு சமைத்து அம்மனுக்குப் படைத்தும் வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் பார்வை குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

கண்ணொளி தருவாள் 
நகரி தேசம்மா..!

சிலருக்குக் கண்களில் தொடர்ந்து நீர் ஒழுகிக்கொண்டே இருக்கும். மருத்துவம் பார்த்தும் பயனில்லாது வருந்துவார்கள். அத்தகைய அன்பர்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து அம்மனுக் குக் கண்மலர் சமர்ப்பித்து வழிபடவேண்டும்; அபிஷேக தீர்த்தம் வாங்கிக் கண்களில் தெளித்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம் கண்களில் நீர் ஒழுகுவது படிப்படியாக குறைந்து நின்றுபோகும் என்கிறார்கள்.

மட்டுமன்றி, குடும்பச் சிக்கல்களால் மனப் போராட்டத்தில் தவிக்கும் பெண்கள் இங்கு வந்து அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், குடும்பத்தில் அமைதி உண்டாகும் என்பது ஐதிகம். ஆடி மாதம் மற்றும் நவராத்திரி விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

நீங்களும் ஒருமுறை இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; பார்வை குறைபாடு மட்டுமல்லாது, சகல குறைகளும் நீங்கி வாழ்வில் வளம் பெற அருள்வாள் நகரி தேசம்மா!

எப்படிச் செல்வது?: ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து 50 கி.மீ. தொலைவில், சித்தூர் மாவட்டம் நகரியில் அமைந் துள்ளது தேசம்மா ஆலயம். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து செல்வோர், திருத்தணிக்குச் சென்று அங்கிருந்து நகரிக்குச் செல்லலாம்.

நகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் டி.ஆர். கண்டிகை கிராமத்தில் உள்ள தேசம்மா கோயிலுக்கு ஆட்டோ மூலம் எளிதில் செல்லலாம். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் இங்கு விசேஷம்.