Published:Updated:

வேண்டியவற்றை அருளும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

பஞ்சவடி ஆஞ்சநேயர்
பஞ்சவடி ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டுவந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்
பஞ்சமுக ஆஞ்சநேயர்

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, புதுச்சேரி பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்.

‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள்புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பல தோற்றங்களில் காட்சி தந்து, தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்தகைய தோற்றங்களில் தனிச்சிறப்பு கொண்டது, பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.

நரசிம்மர், வராகர், கருடன், ஹயக்கிரீவர் ஆகியோரின் திருமுகங்களுடன் காட்சி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயரைத் தரிசித்து மனக் கவலைகளைப் போக்கிக்கொள்வோம்...

Posted by Sakthi Vikatan on Wednesday, April 29, 2020

ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும். முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்திவந்துள்ளார்கள்.

ராம - ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் நிலையில், அவனைக் காப்பாற்ற மயில்ராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் தடங்கல் இல்லாமல் முடிந்துவிட்டால், ராம லட்சுமணர்கள் அழிந்துவிடுவார்கள். எனவே, அவனுடைய யாகத்தைத் தடுத்து நிறுத்த ஆஞ்சநேயர் விரும்பினார்.

36 அடி உயர பிரமாண்ட திருமேனியுடன் அருள்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

ராமபிரானின் உத்தரவு பெற்று மயில்ராவணனின் யாகத்தைத் தடுக்கப் புறப்பட்ட ஆஞ்சநேயர், நரசிம்மர், வராகர், கருடன், ஹயக்கிரீவர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். அவர்களும் தங்களுடைய சக்திகளை ஆஞ்சநேயருக்கு வழங்கியதுடன், அவருடைய முகங்களாகவும் திகழ்ந்தனர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்புரியும் தலங்களுள் தனிச்சிறப்பு மிக்கது, பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயில். ஆஞ்சநேயர் பஞ்சமுகங்களுடன் காட்சி தரும் ஆலயம் திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

36 அடி உயர பிரமாண்டத் திருமேனியுடன் அருள்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இந்தத் தலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ ராமபிரானின் பாதுகையும் இந்தத் தலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் செல்கிறார்கள்.

இந்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, மன அமைதி மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

worshipathome
worshipathome

மிகவும் வரப்பிரசாதியான பஞ்சமுக ஆஞ்சநேயர், வேண்டிய வரங்களை வேண்டியபடியே அருள்பவர். நம் துயரங்கள் யாவற்றையும் போக்கி அருள்புரிகிறவர்.

அடுத்த கட்டுரைக்கு